search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    அருணாசலேஸ்வரர் கோவிலில் 4-ந்தேதி மகா சிவராத்திரி விழா
    X

    அருணாசலேஸ்வரர் கோவிலில் 4-ந்தேதி மகா சிவராத்திரி விழா

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் மகா சிவராத்திரி சிறப்பு பூஜை வருகின்ற 4-ந் தேதி நடைபெறவுள்ளது.
    விஷ்ணு மற்றும் பிரம்மா இடையே யார் பெரியவர் என்று ஏற்பட்ட போட்டியால் நான் என்ற அகந்தையை அழிக்க அடி முடி காணும்படி சிவபெருமான் கட்டளை பிறப்பித்தார். வராக அவதாரம் என்று பூமியை குடைந்து சென்றார் விஷ்ணு. அதேபோல் அன்னப்பட்சியாக உருவெடுத்து உயர உயர பறந்தார் பிரம்மா. இருவரது முயற்சியும் தோல்வியில் முடிந்தது.

    அதேநேரத்தில், முடியை கண்டதாகவும், அதற்கு சிவபெருமான் தலையில் இருந்த தாழம்பூவை சாட்சியாக்கினார் பிரம்மா, இதனால் சினம் கொண்ட சிவபெருமான், பொய் சாட்சி சொன்ன தாழம்பூவானது பூஜைக்கு உதவாது என்று கூறி ஜோதி பிழம்பாக லிங்கோத்பவ மூர்த்தியாக காட்சி தந்தார். விஷ்ணு, பிரம்மா ஆகியோரது அகந்தை அழிந்தது.

    இந்த நிகழ்வு மாசி மாதம் தேய்பிறை சதுர்த்தசி திதியில் நடைபெற்றுள்ளது. இதுவே சிவராத்திரியாகும். இது உருவான இடம் திருவண்ணாமலை திருத்தலம் என்று புராணங்கள் கூறுகின்றன. அதன் அடிப்படையில், அண்ணாமலையார் கோவிலில் மகா சிவராத்திரி சிறப்பு பூஜை மற்றும் வழிபாடு வருகின்ற 4-ந் தேதி நடைபெறவுள்ளது.

    இதையயொட்டி அதிகாலை 5 மணி முதல் லட்சார்ச்சனை நடைபெறும். மேலும், அன்றைய தினம் இரவு 7.30 மணி, 11.30 மணி, மறுநாள் 5-ந் தேதி அதிகாலை 2.30 மணி மற்றும் 4.30 மணிக்கு என்று மூலவருக்கு நான்கு கால பூஜைகள் மற்றும் அபிஷேக ஆராதனைகள் நடைபெறும்.

    இதேபோல், மூலவர் கருவறைக்கு பின்புறம் அமைந்துள்ள லிங்கோத் பவருக்கு நள்ளிரவு 12 மணிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடைபெறும்.

    மகா சிவராத்திரியை யொட்டி கோவில் கலையரங்கில் தேவாரப் பாடல்கள் மற்றும் கலைநிகழ்ச்சிகள் நள்ளிரவு வரை நடைபெறும். இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்ய உள்ளனர்.
    Next Story
    ×