search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் மயானக்கொள்ளை உற்சவம் இன்று தொடங்குகிறது
    X

    அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் மயானக்கொள்ளை உற்சவம் இன்று தொடங்குகிறது

    கடலூர் வண்டிப்பாளையம் சாலையில் உள்ள அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் மயானக்கொள்ளை உற்சவம் இன்று (புதன்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
    கடலூர் திருப்பாதிரிப்புலியூர் வண்டிப்பாளையம் சாலையில் பிரசித்தி பெற்ற அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் மயானக்கொள்ளை உற்சவம் நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டு மயானக்கொள்ளை உற்சவம் இன்று (புதன்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    இதையொட்டி, கோவிலில் இன்று அதிகாலை நடை திறக்கப்பட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறுகிறது. தொடர்ந்து காலை 11 மணி முதல் மதியம் 12 மணிக்குள் கோவில் கொடி மரத்துக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, உற்சவ கொடியேற்றப்படுகிறது. பின்னர் இரவு 7 மணிக்கு அம்மன் வீதிஉலா நடக்கிறது.

    விழாவையொட்டி தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகளும், வீதி உலாவும் நடைபெறுகிறது. இதில் நாளைமறுநாள் (1-ந்தேதி) இரவு 7 மணிக்கு 3 முக இருளகண்டனுடன் அம்மன் வீதி உலாவும், 2-ந்தேதி இரவு பூவாலை கப்பரையுடன் அம்மன் வீதிஉலாவும், 3-ந்தேதி அக்னி கரகத்துடன் அன்னவாகனத்தில் அம்மன் வீதி உலாவும் நடக்கிறது. 4-ந்தேதி திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது.

    விழாவில் முக்கிய நிகழ்ச்சியான மயான கொள்ளை உற்சவம் 6-ந்தேதி காலை 11.30 மணிக்கு மேல் நடக்கிறது. 8-ந்தேதி கொடி இறக்கம் நிகழ்ச்சியுடன் உற்சவம் நிறைவு பெறுகிறது.

    இதற்கான ஏற்பாடுகளை நிர்வாக அறங்காவலர் நாகராஜன் மற்றும் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.
    Next Story
    ×