search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    காரமடை அரங்கநாத பெருமாள் கோவிலுக்கு தாசர் ஒருவர் கையில் பந்த சேவை எடுத்து வந்த போது எடுத்த படம்.
    X
    காரமடை அரங்கநாத பெருமாள் கோவிலுக்கு தாசர் ஒருவர் கையில் பந்த சேவை எடுத்து வந்த போது எடுத்த படம்.

    காரமடை கோவிலில் பரிவேட்டை உற்சவம்

    காரமடை கோவிலில் பரிவேட்டை உற்சவத்தையொட்டி வெள்ளை குதிரை வாகனத்தில் அரங்கநாதர் வீதி உலா வந்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    கோவை மாவட்டம் காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் மாசிமக தேர் திருவிழா கடந்த 13-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி தினமும் இரவு அன்னவாகனம், சிம்மவாகனம், அனுமந்த வாகன உற்சவங்கள், கருடசேவை நடைபெற்றது. 17-ந் தேதி பெட்டத்தம்மன் அழைப்பு, 18-ந் தேதி திருக்கல்யாண உற்சவம் நடந்தது. சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் 19-ந் தேதி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

    இந்த நிலையில் நேற்று அரங்கநாத பெருமாளின் அடியார்களான தாசர்கள் தெப்பக்குளத்தில் இருந்து தோல் பைகளில் தண்ணீர் நிரப்பி கையில் பிரம்புடன் ஓட்டமும், நடையுமாக வந்து கோவில் வளாகத்தில் பெருமாளுக்கு சமர்ப்பித்தனர். இது தண்ணீர் சேவையாகும்.

    மேலும் சில தாசர்கள் கையில் 1 அடி முதல் 6 அடி வரை உள்ள தீப்பந்தங்களை எடுத்து தாரை, தப்பட்டைகளுடன் தெப்பக்குளத்தில் இருந்து பக்தி பரவசத்துடன் சொர்க்கவாசல் மற்றும் நான்கு ரத வீதிகளில் கோவிலுக்கு வந்தனர். இது பந்த சேவையாகும். பின்னர் 10.30 மணிக்கு அரங்கநாத பெருமாள் மன்னர் அலங்காரத்தில் வெள்ளை குதிரை வாகனத்தில் அமர்ந்து பரிவேட்டை மைதானத்திற்கு வந்தார். சிறப்பு பூஜைகள், வாணவேடிக்கையுடன் பரிவேட்டை உற்சவம் நடைபெற்றது.

    திருமலை மன்னர் வேடுபரி நிகழ்ச்சியை தொடர்ந்து அரங்கநாத பெருமாள் கோவிலை வந்தடைந்தார். குதிரை வாகன உற்சவத்தில் நடைபெற்ற வாணவேடிக்கை இரவை பகலாக்கும் வகையில் இருந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இன்று (வியாழக்கிழமை) இரவு 10.30 மணிக்கு தெப்ப திருவிழா நடைபெறுகிறது.

    கோவை, மேட்டுப்பாளையம், அன்னூர் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் கடந்த 19 மற்றும் 20-ந் தேதி பக்தர்களின் வசதிக்காக 5 இடங்களில் தற்காலிக போக்குவரத்து அலுவலகம் அமைக்கப்பட்டு கோபி, சத்தி, கோவை, திருப்பூர், மேட்டுப்பாளையம், வெள்ளியங்காடு உள்பட பல்வேறு பகுதிகளுக்கு 24 மணி நேர சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. காரமடை பேரூராட்சி நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு குடிநீர், கழிப்பறை வசதிகள் செய்யப்பட்டு இருந்தது. செயல் அலுவலர் பார்த்திபன் தலைமையில், சுகாதார ஆய்வாளர் பரமசிவம் மேற்பார்வையில் 100-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் துப்புரவு பணிகளில் ஈடுபட்டனர்.

    கோவில் வளாகத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் மருத்துவ மையம் ஏற்படுத்தப்பட்டு பக்தர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் போலீசாரும், தீயணைப்பு துறையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். விழாவில் கலந்து கொண்டவர்களுக்கு ஓ.கே.சின்னராஜ் எம்.எல்.ஏ. சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் பேரூராட்சி முன்னாள் தலைவர் ராஜகோபால், சஞ்சய் காந்தி, பிரபு, கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 
    Next Story
    ×