search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கும்பாபிஷேகத்தையொட்டி பூஜை நடத்த தயார் நிலையில் உள்ள யாகசாலை மண்டபத்தை படத்தில் காணலாம்.
    X
    கும்பாபிஷேகத்தையொட்டி பூஜை நடத்த தயார் நிலையில் உள்ள யாகசாலை மண்டபத்தை படத்தில் காணலாம்.

    திருநள்ளாறு கோவில் கும்பாபிஷேகம்: யாகசாலை பூஜைகள் இன்று தொடக்கம்

    திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி முதல் கால யாகசாலை பூஜை இன்று தொடங்குகிறது.
    காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறில் உலக புகழ்பெற்ற தர்பாரண்யேஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு சனீஸ்வர பகவான் அருள்பாலித்து வருகிறார். இந்த கோவிலில் 12 ஆண்டுகளுக்கு பிறகு வருகிற 11-ந் தேதி காலை 9.10 மணி முதல் 10.10 மணிக்குள் மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. இதில் கலந்துகொள்ளும் பக்தர்களுக்கு தேவையான ஏற்பாடுகளை மாவட்ட கலெக்டரும், கோவில் நிர்வாக அதிகாரியுமான விக்ராந்த் ராஜா செய்து வருகிறார்.

    கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் மாலை வாஸ்து சாந்தி பூஜையும், நேற்று தீர்த்த சங்ரகணம் பூஜையும் நடைபெற்றது. இன்று (வியாழக்கிழமை) மாலை முதல் கால யாகசாலை பூஜையுடன் கும்பாபிஷேக விழா தொடங்குகிறது.

    இந்த நிலையில் மாவட்ட கலெக்டர் விக்ராந்த் ராஜா நேற்று கும்பாபிஷேகத்திற்கு செய்யப்பட்டுள்ள பணிகளை பார்வையிட்டார். அப்போது அவர் கூறியதாவது:-

    தர்பாரண்யேஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா 12 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கிறது. இந்த விழாவில் கவர்னர் கிரண்பெடி, முதல்-அமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்துகொள்ள உள்ளனர். இதனால் விழா ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இன்று (வியாழக்கிழமை) மாலை 5 மணிக்கு முதல்கால யாகசாலை பூஜையுடன் கும்பாபிஷேக விழா தொடங்கி வருகிற 11-ந் தேதி அதிகாலை 4 மணிக்கு 8-ம் கால யாகசாலை நிறைவு பெறுகிறது.

    இதனால் இன்று முதல் கும்பாபிஷேகம் முடியும் வரை சன்னதி வழியாக சாமி தரிசனம் செய்ய இயலாது. அதனால் யாகசாலை பூஜைகளில் பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்யலாம். விழாவில் கலந்துகொள்ளும் பக்தர்களுக்கு குடிநீர், கழிவறை, பஸ், அன்னதானம் உள்பட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

    கோவிலின் எந்த பகுதியில் இருந்து கும்பாபிஷேகத்தை தரிசித்தாலும் அவர்கள் மீது புனிதநீர் தெளிக்க விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×