search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பறக்கும் காவடி எடுத்து வந்த பக்தர்களை படத்தில் காணலாம்
    X
    பறக்கும் காவடி எடுத்து வந்த பக்தர்களை படத்தில் காணலாம்

    செல்லியம்மன் கோவிலுக்கு செடல் குத்தி பக்தர்கள் ஊர்வலம்

    விருத்தாசலத்தில் பிரசித்தி பெற்ற விருத்தகிரீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு பக்தர்கள் செடல் குத்தி ஊர்வலமாக சென்றனர்.
    விருத்தாசலத்தில் பிரசித்தி பெற்ற விருத்தகிரீஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு மாசிமாதம் மாசிமக பெருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான விழா வருகிற 10-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. இந்த விழா தொடங்குவதற்கு முன்பாக கிராம தேவதைகளுக்கு உற்சவம் நடைபெறுவது வழக்கம். அதன்படி, மணிமுக்தாற்றங்கரையில் உள்ள செல்லியம்மனுக்கும், அதை தொடர்ந்து விருத்தகிரீஸ்வரர் கோவிலின் உள்ளே உள்ள ஆழத்து விநாயகருக்கும் உற்சவம் நடைபெறும்.

    அந்த வகையில் கடந்த 22-ந்தேதி செல்லியம்மனுக்கு காப்பு கட்டுதலுடன் விழா தொடங்கியது. தொடர்ந்து தினசரி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்து, மகா தீபாராதனை நடைபெற்று வந்தது. விழாவில் நேற்று மணிமுக்தாற்றில் இருந்து பக்தர்கள் செடல் குத்தி பால்குடம் எடுத்து வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. அம்மனை வேண்டி விரதம் இருந்த பக்தர்கள் பால்குடம் எடுத்தும், செடல் குத்தியும், பறக்கும் காவடி எடுத்தும் கோவிலுக்கு ஊர்வலமாக வந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.

    ஊர்வலம் கோவிலை வந்தடைந்த பின்னர், செல்லியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்து, மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதில் விருத்தாசலம் பூக்கடை வியாபாரிகள் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் தேரோட்ட நிகழ்ச்சி நடந்தது.

    செல்லியம்மனுக்கு திருவிழா நேற்றுடன் நிறைவு பெற்றதை அடுத்து, இன்று ஆழத்து விநாயகருக்கு திருவிழா தொடங்க உள்ளது. இதையொட்டி விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று, காலை 9.30 மணியில் இருந்து 11 மணிக்குள் அங்குள்ள கொடிமரத்தில் விழா கொடியேற்றப்படுகிறது. தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் விழாவில், வருகிற 7-ந்தேதி தேரோட்டமும், 8-ந்தேதி தீர்த்தவாரியும் நடைபெற உள்ளது.

    இதையடுத்து 10-ந் தேதி விருத்தகிரீஸ்வரர் கோவிலில் மாசிமக பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. 10 நாட்கள் நடைபெறும் விழாவில் 15-ந்தேதி விபசித்து முனிவருக்கு விருத்தகிரீஸ்வரர் காட்சியளிக்கும் ஐதீக விழாவும், 18-ந்தேதி தேரோட்டமும் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ரேணுகாதேவி, ஆய்வாளர் லட்சுமி நாராயணன் மற்றும் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.
    Next Story
    ×