search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா 26-ந்தேதி தொடங்குகிறது
    X

    உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா 26-ந்தேதி தொடங்குகிறது

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதசுவாமி கோவிலின் உபகோவிலான உறையூரில் உள்ள கமலவல்லி நாச்சியார் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா வருகிற 26-ந் தேதி தொடங்குகிறது.
    ஸ்ரீரங்கம் ரெங்கநாதசுவாமி கோவிலின் உபகோவிலான உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவில் விளங்குகிறது. வைணவ திவ்ய தேசங்கள் 108-ல் இரண்டாவது தலமாகவும், திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்றதும் திருப்பாணாழ்வார் அவதரித்த திருத்தலமாகவும் விளங்கும் இக்கோவிலில் வருகிற 26-ந் தேதி முதல் வைகுண்ட ஏகாதசி திருவிழா தொடங்குகிறது.

    தொடர்ந்து அடுத்த மாதம் (பிப்ரவரி) 4-ந் தேதி வரை விழா நடக்கிறது. 26-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை (பகல் பத்து நாட்கள்) மாலை 5 மணிக்கு மூலஸ்தானத்தில் திருமொழி சேவித்தல் நிகழ்ச்சியும், இரவு 7 மணிக்கு திருவாராதனம், வெள்ளிச்சம்பா அமுது செய்தல், தீர்த்த கோஷ்டி நடக்கிறது. இரவு 7.30 மணிக்கு பொதுஜன சேவை நடக்கிறது. 30-ந் தேதி இரவு 8.30 மணிக்கு முத்துக்குறி, வியாக்யானம், அபிநயம், அரையர் தீர்த்தம் மற்றும் சடகோபம் சாதித்தல் நடக்கிறது. இந்த 5 நாட்களிலும் மாலை 5 மணி முதல் இரவு 7.30 மணி முடிய மூலஸ்தான சேவை கிடையாது.

    31-ந் தேதி முதல் பிப்ரவரி 4-ந் தேதி முடிய திருவாய்மொழி என்னும் ராப்பத்து திருநாள் நடக்கிறது. அன்றைய நாட்களில் தினமும் மாலை 5 மணிக்கு கமலவல்லி நாச்சியார் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பாடு கண்டருளி, மாலை 5.30 மணிக்கு பரமபதவாசல் திறப்பு நடக்கிறது.

    4-ந் தேதியன்று தீர்த்தவாரி, திருமஞ்சனம் மற்றும் திருவாய் மொழித் திருநாள் சாற்றுமறை நடைபெறுகிறது.

    மேற்கண்ட தகவலை ஸ்ரீரங்கம் ரெங்கநாத சுவாமி கோவில் இணை ஆணையர் ஜெய ராமன் தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×