search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    மயிலம் கோவிலில் ஆடிக்கிருத்திகை
    X

    மயிலம் கோவிலில் ஆடிக்கிருத்திகை

    ஆடிக்கிருத்திகை முருகனுக்கு உகந்த நன்னாள். மயிலம் சுப்ரமணிய சுவாமி கோயிலில் ஆடிக்கிருத்திகை விழாவுக்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
    ஆடிக்கிருத்திகை முருகனுக்கு உகந்த நன்னாள். இந்நாளில் பக்தர்கள் காவடி எடுத்து தம் பிரார்த்தனைகளை நிறைவேற்றிக் கொள்கிறார்கள். அனைத்து முருகன் தலங்களிலும் ஆடிக்கிருத்திகை சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

    கயிலை நாதனின் நெற்றிக் கண்ணிலிருந்து உதிர்ந்த ஆறு பொறிகள் சரவணப் பொய்கையில் ஆறு குழந்தைகளாக மாற அந்தக் குழந்தைகளை கார்த்திகை பெண்கள் எடுத்து சீராட்டி பாராட்டி வளர்த்தார்கள். உலக மக்களின் நன்மைக்காக உதித்த அந்த சரவணனை வளர்த்த கார்த்திகைப் பெண்களையும் சேர்த்து நினைவு கூறும் வகையில் ஆடிக் கிருத்திகை தினத்தன்று முருகனைப் போற்றி பிராத்தனைகள் நிறைவேற்றுவது வழக்கம்.

    மயிலம் சுப்ரமணிய சுவாமி கோயிலில் ஆடிக்கிருத்திகை விழாவுக்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஆடிக்கிருத்திகையையொட்டி அதிகாலை 4.30 மணிக்கு நடை திறக்கப்படும். தொடர்ந்து வள்ளி, தெய்வானை சமேத சுப்ரமணிய சுவாமிக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், தேன், சந்தனம், விபூதி ஆகியவற்றால் அபிஷேகங்கள் செய்யப்படும்.

    பின்னர் தங்க கவசத்தில் அலங்கரிக்கப்பட்ட மூலவர் பக்தர்களுக்கு காட்சியளிப்பார். விழாவிற்கு பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் பக்தர்கள் மலையை சுற்றியுள்ள நெல்லி மற்றும் மாந்தோப்புகளில் உணவு சமைத்து அன்னதானம் வழங்குவார்கள். கோயில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு குடிநீர், கழிவறை வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

    அதேபோல் பக்தர்கள் வசதிக்காக விழுப்புரம் போக்கு வரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ் நிலையம் அமைக்கப்பட்டு சிறப்பு பஸ்கள் விழுப்புரம், செஞ்சி, திண்டிவனம், புதுச்சேரி, கடலூர் ஆகிய மார்க்கங்களில் விடப்படவுள்ளன. சென்னை பஸ்கள் செண்டூர் வழியாக மயிலம் வந்து செல்லும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    புதுச்சேரி, திண்டிவனம், விழுப்புரம் பகுதியை சேர்ந்த பக்தர்கள் அதிகளவில் இருசக்கர வாகனங்களில் வந்திருந்து தரிசனம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்பாடுகளை மயிலம் பொம்மபுரம் ஆதீனம் 20ம் பட்டம் ஸ்ரீல ஸ்ரீசிவஞான பாலயசுவாமிகள் தலைமையில் திருமடத்தினர் செய்துள்ளனர்.
    Next Story
    ×