search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருவாரூர் தியாகராஜர் கோவில் ஆழித்தேரோட்டம்
    X

    திருவாரூர் தியாகராஜர் கோவில் ஆழித்தேரோட்டம்

    திருவாரூர் தியாகராஜர் கோவில் ஆழித்தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
    திருவாரூரில் வரலாற்று சிறப்புமிக்க தியாகராஜர் கோவில் உள்ளது. இக்கோவிலின் ஆழித்தேரோட்டம் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்த ஆழித்தேர் ஆசிய கண்டத்திலேயே மிகப்பெரிய தேர் ஆகும். சிறப்புமிக்க ஆழித்தேரோட்டம் நேற்று நடந்தது. தேரில் மூங்கில் மற்றும் அலங்கார துணிகள் கொண்டு அலங்கரிக்கப்பட்டு 300 டன் எடையுடன் தேரோட்டத்துக்கு தேர் தயார் நிலையில் இருந்தது. தேரோட்டத்துக்கு முன் திருவாரூர் தேரடி விநாயகர் கோவிலில் நேற்று அதிகாலை சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. பின்னர் தேர் சக்கரத்துக்கு தேங்காய் உடைத்து பூஜைகள் நடத்தப்பட்டன. காலை 6.40 மணிக்கு மங்கள இசை முழங்க தேரோட்டம் தொடங்கியது.

    அமைச்சர் காமராஜ் வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தார். தொடர்ந்து சென்னை ஐகோர்ட்டு நீதிபதி பாஸ்கரன், மாவட்ட கலெக்டர் நிர்மல்ராஜ், திருப்புகலூர் வேளாக்குறிச்சி ஆதீனம் சத்யஞான மகாதேவதேசிக பரமாச்சார்ய சுவாமிகள் மற்றும் திரளான பக்தர்கள் ஆரூரா, தியாகேசா என்று பக்தி கோஷமிட்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

    தேரின் பின்புறம் 2 புல்டோசர் எந்திரங்கள் தேர் சக்கரங்களை தள்ளிவிட சக்கரங்கள் மெதுவாக சுழன்று நிலையை விட்டு ஆடி அசைந்து புறப்பட்டது. தேரை வடம் பிடித்து இழுக்கும்போது பக்தர்கள் வெள்ளத்தில் ஆழித்தேர் அசைந்தாடி வந்தது கண்கொள்ளா காட்சியாக இருந்தது. தேருக்கு முன்னால் பக்தர்கள் மேளதாளத்துடன் வாத்தியங்கள் முழங்கியபடி சென்றனர். தேருக்கு பின்புறம் தீயணைப்பு வாகனங்கள், 108 ஆம்புலன்ஸ், பொது சுகாதாரம் சார்பில் நடமாடும் மருத்துவமனை ஆகியவை வந்தன.

    தேரோட்டத்தை காண திருவாரூர் மாவட்டம் மட்டுமின்றி, வெளியூரில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருவாரூருக்கு வந்து இருந்தனர். இதனால் காணும் திசை எல்லாம் எங்கு நோக்கினும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. ஆழித்தேரை பக்தர்கள் சாலைகளில் மட்டுமின்றி கட்டிடங்கள், மாடிகளிலும் ஏறி நின்று ரசித்தனர். ஆழித்தேர் கீழவீதியில் தொடங்கி தெற்குவீதி, மேற்கு வீதி, வடக்கு வீதி வழியாக வலம் வந்தது.
    Next Story
    ×