search icon
என் மலர்tooltip icon

    கோவில்கள்

    குழந்தை வரம் அளிக்கும் குழந்தை இயேசு
    X

    குழந்தை இயேசு தேவாலயம்.

    குழந்தை வரம் அளிக்கும் 'குழந்தை இயேசு'

    • இந்த திருத்தலத்திற்கு ஏராளமானோர் வந்து பிரார்த்தனை செய்துவிட்டு செல்கிறார்கள்.
    • கிறிஸ்தவர்கள் அல்லாதவர்களும் இந்த திருத்தலத்திற்கு வந்து ஜெபிக்கிறார்கள்.

    குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இந்த திருத்தலத்திற்கு அதிகம் வருகிறார்கள். அவர்கள் 9 நாட்கள் நவநாள் ஜெபம் அல்லது 9 வாரம் நவநாள் என்ற அடிப்படையில் குழந்தை இயேசுவை பிரார்த்தனை செய்கிறார்கள். அவ்வாறு செய்தவன் மூலம் ஏராளமானோருக்கு குழந்தை பாக்கியம் கிடைத்திருப்பதாக கூறுகிறார்கள்.

    அன்பு, அமைதி, பொறுமை, தியாகம் இவற்றையெல்லாம் கிறிஸ்தவம் மிகவும் வலியுறுத்தி வருகிறது. கிறிஸ்தவத்தில் கத்தோலிக்க திருச்சபையில் குழந்தை இயேசுவின் மீதுள்ள பக்தி பல ஆண்டுகளாக கிறிஸ்தவர்கள் மனதில் இருந்து வருகிறது. இயேசுவின் புனிதமான குழந்தை பருவத்தை கிறிஸ்தவர்கள் இன்றளவும் வணங்கி வருவதுபோல் புனித குழந்தை தெரசா, புனித பிரான்சிஸ் அசிசி, புனித அந்தோணியார் மற்றும் புனித அவிலா தெரசா போன்ற பல புனிதர்கள் தெய்வீக குழந்தை இயேசுவின் மீது மிகவும் பக்தி கொண்டிருந்தார்கள்.

    பூங்கா நகரம் என்று வர்ணிக்கப்படும் பெங்களூருவில் கடந்த 1969-ம் ஆண்டில் குழந்தை இயேசு மீதான பக்தி மக்களிடையே மிக அதிகமாக பரவ தொடங்கியது. பெங்களூருவில் உள்ள சொன்னேனஹள்ளி, வண்ணாரப்பேட்டை, நீலசந்திரா, ஆஸ்டின் டவுன், ஆனேபாளையா, ஈஜிபுரா போன்ற பகுதிகளில் பெருந்திரளான மக்கள் குழந்தை இயேசுவை வேண்டி ஜெபிக்க ஆரம்பித்தனர்.

    குழந்தை இயேசு மீது கொண்ட தீவிர ஈடுபாட்டால்பெண் ஒருவர் விவேக்நகரில் குழந்தை இயேசுவுக்கு பேராலயம் கட்ட இடம் தேடினார். ஆனால் கிடைக்கவில்லை. பின்னர் இதுபற்றி அவர் ஒரு பாதிரியாரிடம் கூறி முறையிட்டார். அப்போது விவேக்நகரில் குழந்தை இயேசுவுக்கு தேவாலயம் கட்ட இடம் கிடைக்க குழந்தை இயேசுவிடம் ஜெபிக்குமாறு கேட்டுக் கொண்டார். இதையடுத்து அந்த பாதிரியார் குழந்தை இயேசுவை நோக்கி நவநாள் ஜெபத்தை ஆரம்பித்தார். அதன்பேரில் அங்கு தேவாலயம் கட்ட இடம் கிடைத்தது.

    1971-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 18-ந்தேதி குழந்தை இயேசுவுக்கு தேவாலயம் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது. தேவாலயம் கட்டப்பட தொடங்கிய நிலையில் அங்கு அமைக்கப்பட்டு இருந்த ஜெபக்கூடத்தில் குழந்தை இயேசுவின் சொரூபம் மக்கள் வணங்குவதற்காக வைக்கப்பட்டது. அங்கு தினமும் மக்கள் வந்து குழந்தை இயேசுவிடம் தங்கள் பிரச்சினைகளை கூறி பிரார்த்தனை செய்தனர். சுமார் 8 ஆண்டுகளுக்கும் மேலாக சூறாவளி காற்று, புயல் இப்படி பல்வேறு இயற்கை சீற்றங்களை தாண்டி அந்த ஜெபக்கூடம் குழந்தை இயேசுவின் அருளால் எந்தவித சேதமும் இன்றி இருந்தது. இதுவே கிறிஸ்தவர்கள் அல்லாதவர்களையும் மெய்சிலிர்க்க வைத்தது. பின்னர் தொடர்ந்து நவநாள் ஜெபமும் நடத்தப்பட்டது.

    குழந்தை இயேசுவின் அற்புதத்தைக் கண்டு ஏராளமான மக்கள் தேவாலயத்துக்கு வந்து பிரார்த்திக்க ஆரம்பித்தனர். 1972-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 24-ந் தேதி வியாழக்கிழமை அன்று முதல் நவநாள் ஜெபம் தொடங்கப்பட்டது. அதுமுதல் இன்றுவரை ஒவ்வொரு வியாழக்கிழமை அன்று இந்த தேவாலயத்தில் நவநாள் ஜெபம் நடக்கிறது. இதுபோல் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் 14-ந் தேதி இந்த திருத்தலத்தின் ஆண்டு விழா கொண்டாடப்பட வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டு அதுவும் இன்றுவரை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

    பல்வேறு காலக்கட்டத்திற்கு பிறகு தற்போதுள்ள தேவாலயம் கடந்த 2005-ம் ஆண்டு ஜூன் மாதம் 9-ந்தேதி முழுமையாக கட்டப்பட்டு திறக்கப்பட்டது. அனைத்து தரப்பு மக்களும் குழந்தை இயேசுவால் ஆசீர்வதிக்கப்பட வேண்டும் என்ற எண்ணத்தால் தமிழ், ஆங்கிலம் மற்றும் கன்னடத்தில் திருப்பலிகள் நிறைவேற்றப்பட்டு வருகிறது. இந்த திருத்தலத்திற்கு இன்று ஏராளமானோர் வந்து பிரார்த்தனை செய்துவிட்டு செல்கிறார்கள். கிறிஸ்தவர்கள் அல்லாதவர்களும் இந்த திருத்தலத்திற்கு வந்து ஜெபிக்கிறார்கள்.

    மேலும், குழந்தைகள் உடல்நிலை ஆரோக்கியமாகவும், அவர்கள் சிறந்த அறிவுத்திறனுடன் இருக்க வேண்டியும், கல்வியில் சிறந்து விளங்க வேண்டியும் குழந்தைகளுடன் இந்த திருத்தலத்திற்கு வந்து குழந்தை இயேசுவை பிரார்த்திக்கிறார்கள்.

    Next Story
    ×