என் மலர்

  முக்கிய விரதங்கள்

  குரங்கனி முத்துமாலை அம்மன் கோவில் கொடை விழா: இன்று விரதத்தை தொடங்கிய பக்தர்கள்
  X

  குரங்கனி முத்துமாலை அம்மன் கோவில் கொடை விழா: இன்று விரதத்தை தொடங்கிய பக்தர்கள்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • 15 நாட்கள் கோவிலில் பக்தர்கள் பக்தியுடன் விரதம் இருப்பர்.
  • ஜூலை 12-ம்தேதி சிகர நிகழ்ச்சியான கொடை விழா விமரிசையாக நடைபெறும்.

  தேவி தரிசனம் பாவ விமோசனம் என்பார்கள். மனித வாழ்க்கையில் தெரிந்தும், தெரியாமலும் பாவங்கள் செய்து வருகிறோம். அதிலிருந்து விடுபட தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குரங்கணி முத்துமாலை அம்மன் கோவிலுக்கு வந்து அன்னையின் திருமுகம் பார்த்து மனமுருகி வேண்டினால் விமோசனம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

  குரங்கணி முத்துமாலை அம்மன் கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் ஆனி பெருந்திருவிழா, தைத் திருமாலை பூஜை விழா மிகவும் விமரிசையாக கொண்டாடப்படும். கோவிலின் முக்கியமான விழா ஆனி மாதம் கடைசி செவ்வாய்க் கிழமை நடைபெறும். அப்போது முத்துமாலை அம்மனுக்கு சொக்கத் தங்கத்தால் திருமேனி அலங்காரம் செய்யப்படும். ஆனி திருவிழாவிற்கு 15 நாட்களுக்கு முன்னால் திருக்கால் நாட்டு வைபவம் நடைபெறும். முத்துமாலையம்மன் சன்னிதியின் தென்புறம் முப்பிடாதி அம்மன் முன்னிலையில் அன்று மதியம் அம்மன் மற்றும் பரிவார மூர்த்தங்களுக்கு மகா அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடத்தி கால் நடப்படும். அப்போது வானில் கருடன் வட்டமிடும் இந்த அதிசய காட்சி இன்றும் நடைபெற்று வருகிறது.

  ஆனி மாதம் விழாவையொட்டி திருக்கால் நடப்படும் அன்று இரவு அம்மன் கோவில் பணியாளர் ஒருவர் ஊருக்குள் செல்வார். அவர் சன்னிதியில் இருந்து புறப்பட்டு சென்று 15–ம் நாள் ''அம்மன் கொடை நோன்போ, நோன்பு'' என கூவி கொண்டு செல்வார். அந்த 15 நாட்கள் கோவிலில் பக்தர்கள் பக்தியுடன் விரதம் இருப்பர். விழாவிற்கு 8 நாட்கள் முன்பாக ஆண்கள் பெரிய சாமிக்கு கயிறு சுற்றி ஆடி நேர்த்திக்கடன் செலுத்துவர்.

  பெண்கள் அம்மனுக்கு மாவிளக்கு எடுத்து கோவிலை சுற்றி வருவர். ஆனி மாதம் கடைசி செவ்வாய்க்கிழமைக்கு முன்னே திங்கட்கிழமை மாலையில் அம்மன் தங்கத்திருமேனி அலங்கார ஆபரணங்களுடன் எடுத்து சென்று அம்மன் திருநடை திறப்பு வைபவம் நடைபெறும். அம்மனுக்கு மகா அபிஷேகம் செய்து, அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடைபெறும். இரவு ஸ்ரீநாராயணர், சப்பரத்தில் ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன், அம்மன் கோட்டையை வலம் வந்து வீதி உலா வருவார். ஆனி திருவிழா முடிந்து 8–ம் நாள் தீர்த்தவாரி நடைபெறும். அன்று உற்சவர்கள் தாமிரபரணி ஆற்றில் தீர்த்தவாரிக்கு எழுந்தருள்வர்.

  ஆனி கொடை விழாவை முன்னிட்டு நேற்று பகல் 1.30 மணி அளவில் குரங்கணி 60 பங்கு நாடுகளால் கால் நாட்டப்பட்டது. முன்னதாக காலை 6 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் வழிபட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

  பகல் 12 மணி அளவில் விநாயகர், நாராயணர், பெரியசாமி மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு புஷ்ப அலங்காரத்துடன் தீபாராதனை நடைபெற்றது. அதைத்தொடர்ந்து பெரியசாமி கோவிலுக்கு மேல்புறம் உள்ள முப்பிடாதி அம்மன் சன்னதி முன்பு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த மரத்தாலான கால் ஊர் பெரியவர்கள் நாட்டப்பட்டது.

  இந்நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மாவட்டத்தின் பல பகுதிகளிலிருந்து வந்த பக்தர்கள் அம்மனை வழிபட்டு தேங்காய் உடைத்து, மாலைகள் சாத்தி வழிபட்டனர்.

  இன்று(புதன்கிழமை) முதல் பக்தர்கள் விரதம் தொடங்கினர். ஜூலை 12-ஆம் தேதி சிகர நிகழ்ச்சியான கொடை விழா விமரிசையாக நடைபெறும்.ஆனி பெருந்திருவிழாவையொட்டி பக்கத்து கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் மாட்டு வண்டிகளில் குடும்ப சகிதம் அம்மன் கோவிலுக்கு வந்து ஆடு வெட்டி பொங்கலிட்டு வழிபாடு செய்வர். அன்று பக்தர்கள் நேர்த்திகடன் செலுத்தியும் வழிபாடு நடத்துவர்.

  இந்த ஆலயம் தினமும் காலை 5 மணி முதல் பகல் 1.30 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரையும் திறந்திருக்கும்.

  தூத்துக்குடி மாவட்டம் ஏரலில் இருந்து 3 கிலோமீட்டர் தூரத்தில் தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்து உள்ளது குரங்கணி முத்துமாலை அம்மன் கோவில். திருநெல்வேலி–திருச்செந்தூர் சாலையில் அமைந்து உள்ள தென்திருப்பேரை என்ற ஊரில் இருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் சென்றதும் இக்கோவிலை அடையலாம்.

  Next Story
  ×