search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பெருமாள் பூஜை
    X
    பெருமாள் பூஜை

    ஆயுள், ஆரோக்கியம் அருளும் புரட்டாசி கடைசி சனிக்கிழமை விரத வழிபாடு

    பெருமாள் மாதம் என்றழைக்கப்படும் புரட்டாசி விஷ்ணுவுக்குரிய பூஜைகளையும், விரதங்களையும், வழிபாடுகளையும் செய்ய உகந்தது.
    இந்துக்களின் கலாச்சாரத்தில் விரதங்கள், பண்டிகைகள் முக்கியபங்கு வகிக்கின்றன. வாரந்தோறும் விரத நாட்கள் இருந்தாலும், ஒரு மாதம் முழுவதும் விரதம்  கடைக்கப்பிடிக்கப்படுவது புரட்டாசி மாதம். புரட்டாசியில் வரும் சனிக்கிழமைகளுக்கு தனி மகத்துவம் உண்டு. இந்த நாளில் மேற்கொள்ளப்படும் விரதம் பல  தடைகளை நீக்கி நலன்களை வாரி வழங்கும் என்பது நம்பிக்கை. பணம் இல்லாமல் இவ்வுலகம் இல்லை. பணமிருந்தால் மட்டும் போதாது. அதை அனுபவிக்க  போதிய ஆயுளும், ஆரோக்கியமும் அவசியம். செல்வம், ஆயுள், ஆரோக்கியம் ஆகிய முப்பலனையும் தருவது சனிக்கிழமை விரதம்.

    சனிக்கிழமைகளில் பொதுவாக பெருமாளுக்கு விரதமிருப்பது வழக்கம். இதில், புரட்டாசி மாத சனிக்கிழமைக்கென ஒரு விசேஷம் இருக்கிறது. புரட்டாசி  சனிக்கிழமையில்தான் சனி பகவான் அவதரித்தார். அதன் காரணமாக, அவரால் ஏற்படும் கெடுபலன்கள் குறைய காக்கும், கடவுளான திருமாலை வணங்குவது  வழக்கத்தில் வந்தது. ஜாதகத்தில் சனி நல்ல நிலையில் இருந்தால், மிகச்சிறப்பான பலன்களே கிடைக்கும். சனியை போல் கொடுப்பாருமில்லை. கெடுப்பாரும்  இல்லை என்று சொல்வார்கள். நவக்கிரகங்களில் சனிபகவானை ஆயுள்காரகன் என்பர். அவரது ஆதிக்கத்தை பொருத்தே ஆயுள்காலம் அமையும்.

    ஆனால், அந்த கிரகத்தை கட்டுப்படுத்துவராக இருப்பவர் பெருமாள். சனிக்கு அதிபதி அவரே. எனவே, சனிக்கிழமைகள் பெருமாளுக்கு உகந்தது. ஒவ்வொரு  தெய்வத்துக்கும், தேவர்களுக்கும் சில மாதங்களில் வரும் பண்டிகைகள் முக்கியமானதாக இருக்கும். பெருமாள் மாதம் என்றழைக்கப்படும் புரட்டாசி  விஷ்ணுவுக்குரிய பூஜைகளையும், விரதங்களையும், வழிபாடுகளையும் செய்ய உகந்தது.

    புரட்டாசி மாத சனிக்கிழமை  விரதத்துக்கு மகிமை உண்டு. உண்மையான பக்தியே இந்த விரதத்திற்குரிய தேவையான பொருள். ஒவ்வொரு சனிக்கிழமையிலும், விரதமிருக்க முடியாதவர்கள், புரட்டாசி சனிக்கிழமை விசேஷமாக விரதம் அனுஷ்டிப்பர். சனீஸ்வரனுக்குரிய தானியம் எள்ளு, வர்ணம் கறுப்பு, வாகனம் காகம். எனவே கரியப்பட்டினை  அவனுக்கு சாத்துதலும், எள்ளுச்சாதம் நிவேதனம் செய்தலும், காகத்திற்கு உணவிடுதலும் சனிக்கிழமைகளில் செய்ய வேண்டியவை.

    உணவிலே நல்லெண்ணை மற்றும் எள்ளு பதார்த்தங்கள் சேர்த்தல் நன்று. இத்தினத்திலே எள்ளு, கறுப்புத்துணி, நல்லெண்ணை முதலியவற்றை தானம்  செய்வதால் சனி தோஷத்தை நீக்கலாம். செப்பு பாத்திரத்தில் நல்லெண்ணை விட்டு தமது முகத்தை அதில் பார்த்துவிட்டு தானம் செய்தல் வேண்டும். ஏனைய விரதங்களுக்கு எண்ணெய் முழுக்கு விலக்கப்பட்ட ஒன்று. ஆனால், சனீஸ்வர விரதத்திற்கு எண்ணெய் தேய்த்து நீராடல் வேண்டும்.

    கறுப்புத்துணியில் எள்ளுப்பொட்டலம் கட்டி அதனை சிறிய மண்சட்டியில் வைத்து நல்லெண்ணை விட்டு அதனை தீபமாக ஏற்றி சனிதோஷங்களுக்கு பிரீதி  செய்யலாம். இது முழுதாக எரிந்து நன்றாக நீராகும் வரை நிறைய நல்லெண்ணை விட வேண்டும். அரைகுறையாக எரிந்து பொருமுவது கூடாது. அதிலும்,  புரட்டாசி மாதத்தில் நாளை கடைசி சனிக்கிழமை என்பதால் சனீஸ்வரரை மனமுருகி வேண்டி விரதமிருந்தால் அதன் பலன் நிச்சயம் கிட்டும் என்பது நம்பிக்கை.
    Next Story
    ×