search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கூர்ம அவதாரம்
    X
    கூர்ம அவதாரம்

    சுபிட்சத்தை தரும் கூர்ம ஜெயந்தி விரதம்

    ஆனி மாதத்தில் தேய்பிறையில் வரும் துவாதசி திதியில் தேவர்களை காக்க திருமால் கூர்ம அவதாரம் எடுத்ததாக புராணங்கள் எடுத்துரைக்கின்றன.
    திருமால் அவதரித்த தசாவதாரங்களில் இரண்டாவது அவதாரம் கூர்ம அவதாரம் ஆகும். கூர்மம் என்றால் ஆமை எனப் பொருள்படும். அத்தகைய ஆமை வடிவம் கொண்டு பல நன்மைகள் ஏற்பட காரணமாக இருந்த கூர்ம அவதாரம் எடுத்த தினம் தான் கூர்ம ஜெயந்தி ஆகும். ஆனி மாதத்தில் தேய்பிறையில் வரும் துவாதசி திதியில் தேவர்களை காக்க திருமால் கூர்ம அவதாரம் எடுத்ததாக புராணங்கள் எடுத்துரைக்கின்றன.

    துர்வாச முனிவரின் சாபத்தால் அனைத்து செல்வத்தையும், பதவியையும் தேவேந்திரன் இழந்தார். தேவேந்திரன் பதவி இழந்ததை அறிந்த அசுரர்கள் தேவர்களுடன் போரிட்டனர். தேவர்கள் அசுரர்களை கொல்ல அசுரர்களின் குருவான சுக்கிராச்சாரியார் சிவபெருமானிடம் பெற்ற சஞ்சீவினி மந்திரத்தால் இறந்த அசுரர்களை உயிர் பெறச் செய்தார். இதனால் மிகவும் சோர்ந்த தேவர்கள் விஷ்ணுவை கண்டு இதற்கு ஒரு தீர்வு அளிக்குமாறு வேண்டினார்கள். திருமால் மந்திரமலையை கொண்டு பாற்கடலை கடைய அதில் இருந்து கிடைக்கும் அமிர்தத்தை உண்டால் மட்டுமே நீங்கள் போரில் வெற்றி பெற இயலும் என்று கூறினார்.

    பாற்கடலை கடைய தேவர்களின் பலம் மட்டும் போதுமானதாக இருக்காது என எண்ணி, இந்திரன் அசுரர்களுடன் சமாதானம் பேச சென்று அவர்களை சம்மதிக்க வைத்தார். திருமால் முன்னிலை நின்று மந்திரமலையை மத்தாகவும், வாசுகி பாம்பினை கயிராகவும் கொண்டு கடைய பருமன் தாங்காமல் மலையானது புரண்டு விழவும் தேவர்கள் மற்றும் அசுரர்கள் இது பயனற்ற செயலாக கருதினர். தேவர்களின் இன்னல்களை போக்கவும் பக்தர்களுக்கு அருள்பாலிக்கவும் திருமால் மிகப்பெரிய கூர்மமாக (ஆமை வடிவம்) அவதாரம் எடுத்து பாற்கடலில் நுழைந்து மந்திரமலையை தாங்கிக் கொண்டார். அதன் பின் தேவர்களும், அசுரர்களும் மலையை கடைய அதில் இருந்து காமதேனு, கற்பக விருச்சகம், வெண் குதிரை, அப்சர கன்னிகள், ஐரோத வதம், திருமகள் இறுதியாக அமிர்தத்தை ஏந்திய தன்வந்திரியும் வெளிப்பட்டார். தேவர்களும், பூவுலகமும் நன்மை பெற வேண்டும் என எண்ணி கூர்ம மூர்த்தியாக அவதாரம் கொண்டார் திருமால்.

    கூர்ம அவதாரம் என்பது யாரையும் அழிப்பதற்காக எடுக்கப்படாமல் அனைவரும் நல்லமுறையில் வாழ வேண்டும் என எடுக்கப்பட்ட மகத்தான அவதாரம் ஆகும். எனவே ஒருவரின் உருவமைப்பு கொண்டு அவரை இகழாமல் அவரிடம் உள்ள உண்மையும், பெருமையையும் உணர்ந்து போற்ற வேண்டும் என்பதை உணர்த்துவதே கூர்ம அவதாரத்தின் நோக்கமாகும்.

    இந்நாளில் எல்லா வளங்களையும் அளிக்கும் வல்லமை கொண்ட திருமாலை வணங்கினால் சுபிட்சம் உண்டாகும். மேலும் தாயையும், குடும்பத்தை எவ்விதமான துன்பம் நேராமல் காத்து வரும் தந்தையையும் வணங்கி ஆசி பெறுவது மிகுந்த புண்ணியத்தை அளிக்கும்.
    Next Story
    ×