search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    அம்மன் வழிபாடு
    X
    அம்மன் வழிபாடு

    வறுமையை போக்கும், வளங்களை குவிக்கும் அம்பிகை விரத வழிபாடு

    வெள்ளிக்கிழமை அன்று விரதம் இருந்து குத்துவிளக்கு பூஜை செய்து, சுமங்கலிப் பெண்களுக்கு ரவிக்கைத் துணி, தேங்காய், பழம், வெற்றிலை, பாக்கு, மஞ்சள், குங்குமம் கொடுத்தால் நல்ல பலன்கள் வந்து சேரும்.
    பெண் தெய்வ வழிபாட்டிற்கு பெருமை சேர்க்கும் மாதம், ஆடி மாதமாகும். கோடி மாதங்கள் கிடைத்தாலும் ஆடி மாத வழிபாட்டில் கிடைக்கும் அற்புதப் பலன், வேறு எந்த மாதங்களுக்கும் கிடைப்பதில்லை. சூரியன் கடகத்தில் சஞ்சரிக்கும் மாதம் ஆடியாகும். கடகம் என்பது சந்திரனுக்கு சொந்த வீடு. மனதுகாரகன் சந்திரனுக்குரிய வீட்டில், ராஜகிரகமான சூரியன் சஞ்சரிக்கும் போது நாம் மனதில் எதை நினத்து வழிபடுகின்றோமோ அந்த வழிபாட்டால் வாழ்வில் வளம் கிடைக்கும். இதை நம் முன்னோர்கள் கண்டறிந்துதான் ஆடி மாதம் அம்பிகை வழிபாட்டிற்கென்று ஒதுக்கி இருக்கிறார்கள். ஆடி மாதம் வெள்ளிக்கிழமை அன்று அம்பிகையை வழிபட்டால் கோடி கோடியாய் நற்பலன்கள் கிடைக்கும்.

    ‘ஆடிச் செவ்வாய் தேடிப்பிடி’, ‘ஆடிப்பட்டம் தேடி விதை’, ‘ஆடிப்பெருக்கு கோடியாய் பெருகும்’ என்பதெல்லாம் முன்னோர் வாக்கு. தமிழ் வருடத்தில் நான்காவது மாதமான ஆடி, தட்சிணாயன புண்ணிய காலமாகும். இது தேவர்களின் இரவு நேரம் என்று புராணங்கள் சொல்கின்றன. எனவே ஆடி வெள்ளிக்கிழமை அன்று மாலை நேரத்தில் அம்பிகையை, ஆதிபராசக்தியை, அகிலாண்டேஸ்வரியை அலங்கரித்து வழிபாடு செய்தால் வளங்கள் அனைத்தும் வந்து சேரும்.

    ஆடி மாத செவ்வாய்க்கிழமை அன்று, செட்டி நாட்டுப் பகுதிகளில் பெண்கள் மட்டும் வழிபடும் அவ்வையார் பூஜை பிரசித்தி பெற்றது. ஒரு சந்திக் கொழுக்கட்டை நைவேத்தியம் படைத்து வழிபாடு செய்வார்கள். இதன்மூலம் குடும்ப முன்னேற்றமும், மாங்கல்ய பாக்கியமும், கணவருக்கு தொழில் மேன்மையும் அமையும் என்பது நம்பிக்கை.

    ஆடி வெள்ளிக்கிழமை அன்று குத்துவிளக்கு பூஜை செய்து, சுமங்கலிப் பெண்களுக்கு ரவிக்கைத் துணி, தேங்காய், பழம், வெற்றிலை, பாக்கு, மஞ்சள், குங்குமம் கொடுத்தால் நல்ல பலன்கள் வந்து சேரும். ஆடி அமாவாசை அன்று கடல் அல்லது நதியில் நீராடி முன்னோர் களுக்கு திதி கொடுத்தால், அவர்களுக்கு ஆசி கிடைக்கும். அதன்மூலம் இல்லத்தில் உள்ள தடைகள் அகன்று சுப காரியங்கள் முடிவடையும்.

    ஆடி வெள்ளியன்று லட்சுமியை வழிபட்டால் நாம் பண மழையில் நனையலாம். ஒரு மனிதனின் வாழ்க்கைக்குத் தேவையான பொருள் வளம் கொடுப்பவளை ‘லட்சுமி’ என்றும், ‘திருமகள்’ என்றும் வர்ணிக்கிறோம். எட்டு வகை லட்சுமியின் அருள் இருந்தால் நாம் திட்டமிட்டபடி வாழ்க்கை நடத்த இயலும். அப்படி வரம் தரும் லட்சுமியை ‘வரலட்சுமி’ என்று அழைத்து, விரதம் இருந்து வழிபட ஏற்ற நாள் ஆடி மாதம் கடைசி வெள்ளிக்கிழமை ஆகும். அன்றைய தினம் அதிகாலையில் வீட்டை சுத்தம் செய்து கோலமிட்டு, மாவிலைத் தோரணம் கட்டி, லட்சுமிக்கு வரவேற்பு கொடுக்க வேண்டும். மாவிலைத் தோரணம் கட்டி லட்சுமிக்குரிய தாமரைக் கோலமிட்டு ‘திருமகளே வருக’ என்று கோல மாவினால் எழுதலாம்.

    பூஜை அறையில் லட்சுமி படத்தைப் பலகையின் மேல் நடுவில் வைக்க வேண்டும். அதன் அருகில் ஐந்துமுக விளக்கில் பஞ்ச எண்ணெய் ஊற்றி, பஞ்சமுக தீபம் ஏற்ற வேண்டும். அருகில் நெல் பரப்பி, அதன்மேல் ஒரு தட்டில் அரிசி பரப்பிவைக்க வேண்டும். பூச்சூட்டிய குடம், மாவிலை, தேங்காய் போன்றவற்றை சேர்த்து வைக்க வேண்டும். சந்தனம், குங்குமம் பொட்டு குடத்திற்கு வைத்து தேங்காய், பழம், வெற்றிலை, பாக்கு, இனிப்பு பொருள் நைவேத்தியத்தோடு லட்சுமி கவசம், லட்சுமி வருகைப் பதிகம் பாடி வழிபாடு செய்தால் பணத்தேவைகள் பூர்த்தியாகும்.

    “அன்றாட வாழ்க்கையினில் அனுபவிக்கும் துன்பமெல்லாம் இன்றோடு விலக வேண்டும்” என்று சொன்னால் லட்சுமியின் அருள் உங்களுக்கு கிடைக்கும். அவளது அருள் இருந்தால் வறுமை விலகும், வளங்கள் குவியும். மறுமலர்ச்சியால் வாழ்க்கை மலரும்.

    அஷ்டலட்சுமி படத்தை இல்லத்தில் வைத்து லட்சுமிக்குரிய வருகைப் பதிகம் படித்தால், இமயத்தில் இருந்தாலும் சமயத்தில் கைகொடுத்து உதவுவாள். எல்லா தெய்வங்களுக்கும் போற்றிப் பதிகம் பாடலாம். ஆனால் லட்சுமியை வழிபடும்போது மட்டும் வருகைப் பதிகம் பாடி வழிபடுவதே நல்லது. லட்சுமி இல்லத்தில் அடியெடுத்து வைத்தால் நம்முடைய கலக்கம் அகலும். கவலை விலகும். அந்த அம்பிகையை ஆடிவெள்ளி தோறும் வழிபடுங்கள், வளமான வாழ்வு அமையும்.
    Next Story
    ×