search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    நவராத்திரி விரதம்
    X
    நவராத்திரி விரதம்

    மூன்று செல்வங்களை வழங்கும் நவராத்திரி விரதம் இன்று தொடக்கம்

    ஒன்பது நாட்கள் தொடர்ச்சியாக அன்னையை விரதம் இருந்து வழிபடக்கூடிய ஒரு விழாவாக, நவராத்திரி விழா இருப்பதே காரணம். புரட்டாசி மாத அமாவாசைக்குப் பின் வரும் பிரதமை திதியில் தொடங்கி ஒன்பது நாட்கள் இந்த விழா கொண்டாடப்படுகிறது.
    சிவபெருமானுக்கு ஒரு ராத்திரி ‘சிவராத்திரி’. அம்பாளுக்கு ஒரு ராத்திரி ‘நவராத்திரி’ என்பது ஆன்றோர்கள் வாக்கு. அம்மனை வழிபடுவதற்கு என்று பல விழாக்கள் இருந்தாலும், நவராத்திரி அதில் இருந்து வேறுபட்டும், முக்கியத்துவம் பெற்றும் விளங்குகிறது. இதற்கு ஒன்பது நாட்கள் தொடர்ச்சியாக அன்னையை விரதம் இருந்து வழிபடக்கூடிய ஒரு விழாவாக, நவராத்திரி விழா இருப்பதே காரணம். புரட்டாசி மாத அமாவாசைக்குப் பின் வரும் பிரதமை திதியில் தொடங்கி ஒன்பது நாட்கள் இந்த விழா கொண்டாடப்படுகிறது. அதைத்தொடர்ந்து வரும் 10-வது நாளான தசமி அன்று ‘விஜயதசமி’ வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது.

    மகிஷாசுரனுடன் ஒன்பது நாட்கள் போரிட்ட அம்பாள், பத்தாவது நாளான தசமி அன்று வெற்றிபெற்றார். பெரும்பாலும் கோவில்களில் 10 நாட்கள் திருவிழா நடத்தப்படும். அவற்றை பிரம்மோற்சவ விழா என்று அழைப்பார்கள். அதுபோல் வீட்டில் 10 நாட்கள் தொடர்ச்சியாக நடத்தப்படும் ஒரே விழாவான நவராத்திரி விழா, வீடுகளில் கொண்டாடப்படும் பிரம்மோற்சவம் என்று கூறினால் அது மிகையாகாது.

    சித்திரை, புரட்டாசி ஆகிய இரு மாதங்களையும் எமனின் கோரப் பற்கள் என்று கூறுவார்கள். இந்த இரு மாதங்களிலும் பிணிகள் உடலை துன்புறுத்தி, நலிவடையும்படி செய்யும். அதனைப் போக்கும் விதமாகவே சக்தி வழிபாடு உள்ளது. சித்திரை மாதத்தில் வசந்த நவராத்திரியும், புரட்டாசி மாதத்தில் சாரதா நவராத்திரியும் கொண்டாடப்படுகிறது. இதில் சாரதா நவராத்திரி அனைவரும் கொண்டாடும் தனிச்சிறப்பு பெற்றது.

    நவராத்திரியின் ஒன்பது நாட்களும் முப்பெரும் தேவியரின் வழிபாடாக இருக்கிறது. முதல் மூன்று நாட்கள் துர்க்கையை வேண்டியும், இடை மூன்று நாட்கள் லட்சுமி தேவியை வேண்டியும், கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதி தேவியை போற்றியும் வழிபாடு செய்ய வேண்டும். முதல் மூன்று நாட்களில் துர்க்கையை மகேசுவரி, கவுமாரி, வராகியாகவும், இடை மூன்று தினங்களில் லட்சுமிதேவியை மகாலட்சுமி, வைஷ்ணவி, இந்திராணியாகவும், கடைசி மூன்று நாட்களில் சரஸ்வதி தேவியை, சரஸ்வதி, நரசிம்கி, சாமுண்டியாகவும் முறையாக விரதமிருந்து வழிபாடு செய்ய வேண்டும். ஒரு தேவியை முதன்மையாகவும், மற்றவர்களைப் பரிவார தெய்வங்களாகவும் கொள்ளவேண்டும்.

    லட்சுமிதேவி, அலமேலுமங்கை என்ற நாமத்துடன் பிறந்து, திருப்பதி வெங்கடேசப் பெரு மாளை அடையும் பொருட்டு, ஒன்பது நாட்கள் விரதம் இருந்து பெருமாளை அடைந்ததாக ஒரு கதையுண்டு. அதன் காரணமாகவே இந்த நவராத்திரி விழா கொண்டாடப்படுவதாகவும் கூற்று உள்ளது. இந்தியா மட்டுமின்றி இலங்கை உள்பட ஆசிய நாடுகள் மற்றும் உலகில் உள்ள மக்களால் எங்கும் நவராத்திரி விரதம் சிறப்பாக அனுஷ்டிக்கப்படுகிறது.

    நவராத்திரி விழாவின் ஒன்பது நாட்களில் வீடுகளில் கொலு வைக்கும் நிகழ்ச்சி அரங்கேறும். கலை உணர்வு, பக்தி ஆகியவற்றை வெளிப்படுத்தும் விதமாக இது அமைந்துள்ளது. இதன் தத்துவம் தாமச குணம், ரஜோ குணம், சத்துவ குணம் ஆகிய மூன்று குணங்களையும் குறிக்கும். முதல் இரண்டு குணங்களைக் கடந்து சத்துவ குணத்தை அடையும் வழியையே, இந்த நவராத்திரி கொலுப்படிகள் நமக்கு உணர்த்துகின்றன.

    இந்த விரதத்தை அனுஷ்டித்ததன் பயனாக இந்திரன், விருத்திராசுரனை அழித்தான் என்று புராணம் கூறுகிறது. நவராத்திரி விரதத்தை மேற்கொண்டால் தாங்கள் விரும்பிய பலனை அடையலாம் என்றும் கூறுகிறார்கள். இவ்விரதம் இருப்பவர்கள் வீரம், செல்வம், கல்வி ஆகிய மூன்று பலன்களையும் அடைவார்கள்.

    இந்த விரதம் பெண்களுக்கே உரியதாகும். அனைத்து வயதுடைய, பருவத்தைச் சார்ந்த பெண்களும் நவராத்திரி வழிபாட்டில் ஈடுபடலாம். நவராத்திரி வழிபாட்டால் பெண் குழந்தைகள் பெறுவது மகிழ்ச்சியின் பயனாகும். அதே போல் இவ்விரதத்தை மேற்கொள்ளும் கன்னிப் பெண்கள் திருமணப் பயனையும், திருமணமான பெண்கள் மாங்கல்யப் பயனையும் பெறுவார்கள். மூத்த சுமங்கலி பெண்கள் மன மகிழ்ச்சியையும், மன நிறைவையும் பெறுவார்கள். இந்த வழிபாட்டை மேற்கொள்ளும் மற்றவர்களுக்கு பரிபூரண திருப்தி கிடைக்கும்.
    Next Story
    ×