search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    அம்மன் வழிபாடு
    X
    அம்மன் வழிபாடு

    அம்பிகை அருள் தரும் ‘ஆடி வெள்ளி’ விரதம்

    ஆடி மாதத்தில், அம்பிகையை நோக்கி விரதம் இருந்து நம் கோரிக்கைகளை நினைத்துக் கொண்டால் இன்பங்கள் அனைத்தும் இல்லம் தேடி வந்து கொண்டேயிருக்கும்.
    கோடி மாதங்கள் கிடைத்தாலும் ஆடி மாதம் போல் ஒரு மாதம் வழிபாட்டிற்கு கிடைக்காது. காரணம் ஆடி மாதத்தில் வெள்ளிக்கிழமை தோறும் ஆலயங்களில் விளக்கு பூஜை செய்து அம்மனை வழிபடுவது வழக்கம். விளக்கு இருக்கும் இடமெல்லாம் ஒளியிருப்பதுபோல விளக்கு வைத்து ஜோதியை வழி படுவதன் மூலம் ஒளிமயமான எதிர்காலம் நமக்கு அமையும்.

    சூரியன் கடக ராசியில் சஞ்சரிக்கும் ஆடி மாதத்தில், அம்பிகையை நோக்கி விரதம் இருந்து நம் கோரிக்கைகளை நினைத்துக் கொண்டால் இன்பங்கள் அனைத்தும் இல்லம் தேடி வந்து கொண்டேயிருக்கும். துன்பங்கள் ஓடி ஒளியும் என்பது நம்பிக்கை. வெள்ளிக்கிழமை அன்று அம்பிகையை வழிபட்டால் வெற்றிகள் குவியும், வேதனைகள் அகலும் என்பது முன்னோர்கள் வாக்கு.

    அப்படிப்பட்ட அற்புதமான மாதத்தில் வாழ்க்கையில் வளர்ச்சி ஏற்பட, வாய்ப்புகள் வீடு தேடி வர, கடகத்தில் சூரியன் சஞ்சரிக்கும் இந்த ஆடி மாதத்தில் செவ்வாய்க் கிழமையும், வெள்ளிக்கிழமையும் லட்சுமி தேவியையும் ஆதி பராசக்தியையும் முறையாக வழிபட்டால் குறைகள் தீரும், நம்பிக்கைகள்அனைத்தும் நடைபெறும்.

    எட்டுவகை லட்சுமியின் அருள் இருந்தால் நாம் பண மழையில் நனையலாம். நினைத்த காரியத்தை நினைத்த நேரத்தில் செய்யலாம். அந்த லட்சுமியை நாம் வீட்டு பூஜையறையில் ஆடி வெள்ளியன்று சமய மாலை பாடி வழிபட்டால் இமயத்தில் இருந் தால் கூட சமயத்தில் வந்து கைகொடுத்து காப்பாற்றுவாள். லட்சுமி அருள் இருந்தால் பணவரவு திருப்தி தரும். லட்சியங்கள் நிறைவேறும்.

    பொதுவாக லட்சுமி வழிபாட்டை மேற்கொள்ளும் பொழுது விளக்கு ஏற்றி வைத்து குங்குமம், சந்தனம், பூ சூட்டிய குடம் வைத்து தேங்காய், வெற்றிலை, பாக்கு வைத்து இனிப்புப் பொருட்களை நைவேத்தியமாக வைத்து வழிபாடு செய்ய வேண்டும்.

    வழிபாட்டின் பொழுது அஷ்டலட்சுமி வருகைப்பதிகம், துதிப்பாடல்கள் பாடி தீபம் பார்த்து வழிபாடு செய்தால் செல்வ வளம் பெருகும். கணவன்-மனைவிக்குள் கருத்துவேறுபாடு அகலும். கல்யாணக் கனவு நிறைவேறும். எந்தக் கோரிக்கையை நினைத்து வழிபட்டாலும் அது விரைவில் நிறைவேறும்.

    லட்சுமியை ‘வரலட்சுமி’ என்று அழைத்து விரதமிருந்து வழிபட ஏற்ற நாளும் ஆடி மாதம் தான். வெள்ளிக்கிழமையன்று அதிகாலையில் வீட்டை மெழுகிக் கோலமிட்டு, மாவிலைத் தோர ணம் கட்டி லட்சுமிக்கு வரவேற்பு கொடுக்க வேண்டும். வீட்டுவாசலில் லட்சுமிக்குரிய கோலங் களான தாமரைக்கோலம், இதயக்கமலம், ஐஸ்வர்யக்கோலம் போன்றவற்றை வரைந்து ‘திருமகள் வருக’ என்று கோலமாவினால் கூட எழுதிவைக்கலாம். லட்சுமியின் அருளால் இனிய வாழ்வு அமையும்.

    -‘ஜோதிடக்கலைமணி’ சிவல்புரி சிங்காரம்
    Next Story
    ×