search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கரந்தமலை கன்னிமார் தீர்த்தத்தில் இருந்து குடங்களில் புனித நீரை பக்தர்கள் ஊர்வலமாக கொண்டு வந்த காட்சி.
    X
    கரந்தமலை கன்னிமார் தீர்த்தத்தில் இருந்து குடங்களில் புனித நீரை பக்தர்கள் ஊர்வலமாக கொண்டு வந்த காட்சி.

    நத்தம் மாரியம்மன் கோவில் திருவிழா: காப்பு கட்டி விரதம் தொடங்கிய பக்தர்கள்

    நத்தம் மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி காப்பு கட்டி பக்தர்கள் விரதம் தொடங்கினர்.
    நத்தம் மாரியம்மன் கோவில் மாசி திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று முன்தினம் தொடங்கியது. இதையொட்டி நேற்று அதிகாலையில் பக்தர்கள் உலுப்பக்குடி அருகே உள்ள கரந்தமலை கன்னிமார் தீர்த்தத்தில் புனித நீராடினர். பின்னர் அவர்கள், மஞ்சள் ஆடைகள் அணிந்து அங்கிருந்து தீர்த்தக்குடங்கள் எடுத்து சந்தன கருப்பு கோவிலுக்கு வந்தனர்.

    அதன்பிறகு அங்கிருந்து மேளதாளம் முழங்க, வர்ண குடைகள் மற்றும் தீ வட்டி பரிவாரங்களுடன் அங்கு கூடியிருந்த பக்தர்கள் ஊர்வலமாக வந்தனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீர்த்த குடங்களை தலையில் சுமந்தபடி மஞ்சள் ஆடைகள் அணிந்த நிலையில் ‘கோவிந்தா‘ கோ‌‌ஷம் முழங்க மாரியம்மன் கோவிலை வந்தடைந்தனர்.

    பின்னர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகள் நடந்தது. இதைத்தொடர்ந்து பக்தர்கள் காப்பு கட்டினர். சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் காப்பு கட்டி 15 நாள் விரதம் தொடங்கினர். இதைத்தொடர்ந்து இரவு 9 மணி அளவில் அம்மன்குளத்தில் இருந்து கம்பம் நகர்வலமாக கொண்டு வரப்பட்டு கோவிலில் ஊன்றப்பட்டது.

    திருவிழாவையொட்டி வருகிற 28-ந்தேதி மற்றும் 3, 6-ந்தேதிகளில் சர்வ அலங்காரத்தில் மயில், சிம்மம், அன்ன வாகனங்களில் அம்மன் எழுந்தருளி மின்ரதத்தில் நகர்வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். விழா நாட்களில் அக்னிசட்டி, மாவிளக்கு எடுத்தல், கரும்புதொட்டில், அங்கபிரதட்சனம், அலகு குத்துதல், அரண்மனை பொங்கலிடுதல் உள்ளிட்ட நேர்த்திக்கடனை பக்தர்கள் செலுத்துவர்.

    வருகிற 10-ந்தேதியன்று விழாவின் முக்கிய நிகழ்வான கழுமரம் ஏறும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதைத்தொடர்ந்து பக்தர்கள் பூக்குழி இறங்குவர். 11-ந்தேதி காலையில் அம்பாள் மஞ்சள் நீராடுதலை தொடர்ந்து, அன்றிரவு அலங்கரிக்கப்பட்ட பூப்பல்லக்கில் அம்மன் குளத்தில் இருந்து புறப்பட்டு நகர்வலமாக வந்து கோவிலை சென்றடையும். இத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

    விழாவுக்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், கோவில் பூசாரிகள் மற்றும் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர். பக்தர்களுக்கு தேவையான குடிநீர், சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நத்தம் பேரூராட்சி நிர்வாகம் செய்து வருகிறது.
    Next Story
    ×