search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    வரலட்சுமி
    X
    வரலட்சுமி

    லட்சுமி விரதத்தின் மகிமை அறிந்து கொள்ளலாம்

    நிலைத்த செல்வம், நிலையான மாங்கல்ய பேறு, நீண்ட ஆயுளோடு கூடிய மக்கட்செல்வம் அனைத்தையும் குறையில்லாமல் தரும் வரலட்சுமி விரத தினம் உருவான காரணத்தை அறிந்து கொள்ளலாமா?
    செல்வத்தை வற்றாமல் அள்ளித்தரும் இந்நாளே, வரலஷ்மி விரதம் என்றழைக்கப்படுகிறது. நிலைத்த செல்வம், நிலையான மாங்கல்ய பேறு, நீண்ட ஆயுளோடு கூடிய மக்கட்செல்வம் அனைத்தையும் குறையில்லாமல் தரும் இன்றைய விரத தினம் உருவான காரணத்தை அறியலாமா? இந்த விரதத்தின் மகிமையை தேவர்களோ, முனிவர்களோ எடுத்து சொல்லவில்லை. யாரை நினைத்து விரதம் மேற்கொள்கிறோமோ அந்த மஹாலஷ்மியே விரதத்தின் முக்கியத்துவத்தை எடுத்து கூறியிருக்கிறாள்.

    மகதநாட்டில் வசித்துவந்த சாருமதி என்னும் பெண் அன்பில் குணவதியாக இருந்தாள். புகுந்தவீட்டில்  மாமானார், மாமியாரை பெற்றவர்களுக்கும் மேலாக பாவித்து  அவர்களை வணங்கி பணிவிடை செய்துவந்தாள். எத்தருணத்திலும் முகம் கோணாமல் மனம் முழுக்க அன்பை நிரப்பி முகமலர்ந்து வாழ்ந்து வந்த அவளிடம் மகாலஷ்மிக்கும் பிரியம் வந்தது. அவளுடன் வசிக்க வேண்டும் என்னும் எண்ணம் தோன்றியது. சாருமதியின் கனவில் தோன்றிய மகாலஷ்மி என்னை நினைத்து வரலஷ்மி விரதம் கடைப்பிடிப்பவர்களது இல்லத்தில் நான் வசிப்பேன் என்று விரதத்துக்கான வழிமுறையையும் கற்றுக்கொடுத்தாள்.

    மறுநாள் காலை சாருமதிக்கு இரவு லஷ்மி தேவி கனவில் வந்து கற்றுக்கொடுத்த விரதமுறை நினைவுக்கு வந்தது. லஷ்மி தேவி கூறியபடி விரதம் இருந்தாள்.  இதனால் மேலும் பல நன்மைகளை அடைந்தாள். லஷ்மி தேவி அருளிய நன்மைகளை பிறரிடம் எடுத்துசொல்லி அவர்களையும் விரதம் கடைப்பிடிக்க வலியுறுத்தினாள். அவளது வேண்டுகோளுக்கேற்ப வரலஷ்மி விரதம் கடைப்பிடிக்க தொடங்கிய பெண்களின் வாழ்விலும் நன்மைகள் மலர்ந்தது.இதைக் குறித்து மற்றொரு புராணக் கதையும் உண்டு.

    மகாவிஷ்ணுவின் பக்தனான பத்ரஸ்வரஸ் என்னும் மன்னம் ஒருவன் இருந்தான். அவனது மனைவி சுரசந்திரிகா. இவர்களது அன்பில் சியாமபாலா என்னும் பெண்குழந்தையைப் பெற்றெடுத்தார்கள். சீரும் சிறப்புமாக வளர்க்கப்பட்ட தங்களது மகளை சக்கரவர்த்தி மாலாதரன் என்பவருக்கு மணமுடித்துவைத்தார்கள். தங்களது ஒரே மகளை பிரிந்த ஏக்கத்தில் சுரசந்திரிகா வாடினாள். அதைக் கண்டு மனமிறங்கிய லஷ்மிதேவி முதிய பெண்மணி வேடம் தரித்துசுரசந்திரிகாவிடம் வரலஷ்மி நோன்பை பற்றி சொல்லி இந்த விரதம் இருந்தால் உனக்கு அழகிய ஆண் குழந்தை பிறக்கும் என்று கூறினாள். 

    ஆனால் வந்தவள் லஷ்மி தேவி என்பதை அறியாமல் அவளை விரட்டிவிட்டாள் சுரசந்திரிகா. நடந்ததைக் கேள்வியுற்ற சியாமாபாலா லஷ்மி தேவியிடம் மன்னிப்பு வேண்டி விரத முறைகளைக் கற்றாள். அதன்படி விரதமும் மேற்கொண்டு செல்வத்திலும் கொழித்தாள்.  இடையில் லஷ்மியை விரட்டிய சுரசந்திரிகா நாடு, செல்வம் அனைத்தையும் இழந்து  வறுமையில் தவித்தாள். செல்வத்தோடு மிளிர்ந்த சியாமாபாலா தனது பெற்றோருக்கு  தங்ககாசு நிரம்பிய குடத்தை அனுப்பினாள்.

    ஆனால் லஷ்மியை விரட்டியதால் தரித்தரம் ஏற்பட்டிருந்த சுரசந்திரிகா மகிழ்ச்சியோடு அதை தொட்டதும் அவை அனைத்தும் கரியாகி போனது. அனைத்தையும் கேள்வியுற்ற சியாமபாலா லஷ்மி தேவியை மகிழ்ச்சிபடுத்த வேண்டும் என்று  உறுதிகொண்டாள். அந்த ஆண்டு வரலஷ்மி நோன்பின் போது தாய் வீட்டுக்கு வந்து அங்கிருந்து தாயுடன் சேர்ந்து வரலஷ்மி விரதத்தைக் கடைப்பிடித்தாள்.

    லஷ்மி தேவியும் சுரசந்திரிகாவின் மனமாற்றத்தில் மகிழ்ச்சியுற்று இழந்த செல்வங்களை மீண்டும் அத்தம்பதியருக்கு அருளினாள்.  மேலும் ஆண் குழந்தை செல்வத்தையும் அளித்தாள். இத்தகைய சிறப்பு மிக்க வரலஷ்மி விரதத்தைக் காலங்காலமாக கடைப்பிடித்துவருகிறார்கள் பெண்கள். பொருள் செல்வம், குழந்தை செல்வம், தீர்க்க சுமங்கலி என்னும் பேறும் அருளும் லஷ்மியை போற்றிட வார்த்தைகள் தான் ஏது?
    Next Story
    ×