search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சிவன் பார்வதி
    X
    சிவன் பார்வதி

    இன்று கவுரிசங்கர சம்மேளன சிவராத்திரி விரதம்

    மிக விசேஷமான சிவராத்திரியை ‘கவுரிசங்கர சம்மேளன சிவராத்திரி’ என்றும் கூறுவர். இத்தகைய சிறப்பு வாய்ந்த சிவராத்திரி இன்று (வெள்ளிக்கிழமை) கடைப்பிடிக்கப்படுகிறது.
    மனிதன் தன் வாழ்வை செம்மையாக அமைத்துக் கொள்ள, 16 வகை செல்வங்கள் அவசியம். இத்தகைய செல்வங்கள் அனைத்தும் ஒரு மனிதனுக்கு, முன்வினை பயன் மற்றும் விடாமுயற்சி, கடின உழைப்பு போன்றவற்றால் கிடைக்கிறது. எனினும் பலருக்கு வாழ்வில் ஏதாவது ஒரு விதத்தில் தொடர் இழப்புகள், விரயங்கள் ஏற்படுகின்றன. இதனால் உடல் மற்றும் மனம் பாதிக்கப்பட்டு மேலும் கஷ்டங்கள் அதிகமாகின்றன. இவற்றையெல்லாம் போக்கும் வல்லமை பெற்றவர் சிவபெருமான்.

    நம்மில் சிலருக்கு சிவபெருமான் அழித்தல் தொழிலைச் செய்பவர். அவரை வணங்கக்கூடாது என்ற மூட நம்பிக்கை நிலவி வருகிறது. அது தவறான கருத்து. சிவபெருமான் தன்னை வணங்குபவர்களின் மனதில் இருக்கும் தீய எண்ணக் கழிவுகளான காமம், கோபம், குரோதம், பேராசை, பொறாமை போன்ற கர்ம வினைக் கழிவுகளை அழிப்பவர். அவரை வழிபடுபவர் களின் வாழ்வில் நிலவும் நோய்கள், மனக் கவலைகள், வறுமை நிலை போன்றவற்றை அறவே அழிப்பவர். ஒருவர் தனது மூன்று பிறவியில் செய்த பாவங் களையும் அழிப்பவர் சிவபெருமான்.

    ‘சிவன்’ என்ற சொல்லுக்கு ‘மங்கலம்’, ‘இன்பம்’ என்று பொருள். எனவே சிவராத்திரியை, ‘ஒளிமயமான இரவு’, ‘இன்பம் தருகின்ற இரவு’ என்று அழைக்கிறோம். ஒருவர் தன் வாழ்வின் வினைப்பயனை அழிக்க, எட்டு விதமான சிவ வழிபாட்டு முறைகளை கடைப் பிடிக்கலாம் என சாஸ்த்திரத்தில் கூறப்பட்டுள்ளது. அவற்றில் மிகச் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுவது மாசி மாதம் கிருஷ்ணபட்சம் சதுர்த்தசி திதி அன்று வரும் ‘மகா சிவராத்திரி’ விரதமாகும்.

    பகலில் திரயோதசியும், இரவில் சதுர்த்தசி திதியும் கூடும், சிவராத்திரியானது மிக விசேஷமானதாகும். ‘கவுரிசங்கர சம்மேளன சிவராத்திரி’ என்றும் இதைக் கூறுவர். இத்தகைய சிறப்பு வாய்ந்த சிவராத்திரி இன்று (வெள்ளிக்கிழமை) கடைப்பிடிக்கப்படுகிறது.

    விரதம் இருக்கும் முறை

    எல்லோருக்கும் மகா சிவராத்திரி விரதம் இருக்கும் பாக்கியம் கிடைக்காது. ‘அவன் அருளாலே அவன் தாள் வணங்கி’ என்ற வாக்கியத்திற்கு ஏற்ப, அந்த சிவனின் அருள் இருந்தால் மட்டுமே இந்த மகா சிவராத்திரி விரத வாய்ப்பு கிடைக்கும்.

    இந்த விரதத்தை மகா சிவராத்திரிக்கு முந்தைய தினமான வியாழக்கிழமையிலேயே தொடங்கிவிட வேண்டும். அன்றைய தினம் ஒரு வேளை மட்டுமே உணவருந்த வேண்டும். மறுநாள் மகா சிவராத்திரி அன்று காலையில் குளிர்ந்த நீரில் குளித்து, நெற்றியில் திருநீறு பூசி, இல்லத்தில் உள்ள இறைவனின் திருப்படம் முன்பாக விளக்கேற்றி விரதத்தைத் தொடங்க வேண்டும். சிவராத்திரி நாளில் சமைத்த உணவுகளை உண்ணாமல், சிவ சிந்தனையுடன் இருக்க வேண்டும். தண்ணீர் மட்டும் அருந்தலாம்.

    வெள்ளிக்கிழமை பகல் மற்றும் இரவு முழுவதும் எதுவும் சாப்பிடக்கூடாது. வயதானவர்கள் மற்றும் நோயாளிகள், சமைக்காத உணவுகளான பால், பழங்கள், அவல் சாப்பிடலாம்.

    மகா சிவராத்திரி அன்று முழுவதும் மவுன விரதம் இருந்து, மனதிற்குள்ளேயே ‘பஞ்சாட்சரம்’ அல்லது ‘ஓம் நமசிவாய’ என்ற மந்திரங்களை உச்சரித்து வந்தால் புண்ணிய பலன் மிகுதியாகும்.

    வெள்ளிக்கிழமை மாலை 6 மணி முதல் சனிக்கிழமை காலை 6 மணி வரை சிவன் கோவில்களில் நடைபெறும் 4 கால அபிஷேக பூஜைகளில் கலந்து கொண்டு சிவனை வழிபட வேண்டும். மறுநாள் காலையில் நீராடி சனிக்கிழமை பகல் முழுவதும் உறங்காமல் இருந்து விரதத்தை முடிக்க வேண்டும். சனிக்கிழமை பகலில் தூங்கினால் சிவராத்திரி பலன் முழுமையாக கிடைக்காது. இப்படி முழுமையாக விரதம் கடைப்பிடித்தால் சகல வினைகளும் நெருப்பில் விழுந்த தூசி போல் சாம்பலாகும்.

    விரத பலன்கள்

    மகா சிவராத்திரியன்று விரதம் இருப்பவர்களுக்கு நற்கதி கிடைப்பதுடன், சொர்க்கலோக பாக்கியமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. ஒருவர் தொடர்ந்து 24 வருடங்கள் சிவராத்திரி விரதம் இருந்துவந்தால் அவர் சிவகதியை அடைவதுடன், அவரது 21 தலைமுறைகளும் நற்கதி அடைந்து முக்தியை அடைவார்கள் என்பது ஐதீகம். அதோடு அசுவமேத யாகம் செய்த பலனும் கிடைக்கும். உணவு உண்ணாமல் பசியை அடக்குவதன் மூலம், காமம், குரோதம், கோபம், பேராசை பொறாமை ஆகியவற்றில் இருந்து விடுதலை கிடைக்கும். வாழ்வில் செல்வம் வெற்றி ஆகியவற்றை பெற விரும்புவோர், அவசியம் சிவராத்திரி விரதம் இருக்க வேண்டும்.

    பிரசன்ன ஜோதிடர் ஐ.ஆனந்தி
    Next Story
    ×