search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    காமாட்சி அம்மன்
    X
    காமாட்சி அம்மன்

    கைநிறையப் பொருள் வழங்கும் தை வெள்ளி விரதம்

    சகல செல்வங்களையும் பெற்றுச் சந்தோஷமாக வாழ்க்கை நடத்த தை வெள்ளிக்கிழமை விரதத்தை கடைப்பிடியுங்கள். தை வெள்ளிக்கிழமைகளில் லட்சுமியை வழிபாடு செய்தால், நாம் பண மழையில் நனையலாம்.
    வெள்ளிக்கிழமையில் விரதம் இருந்து அம்பிகையை வழிபட்டால், நமக்கு செல்வத்தை அவள் அள்ளிக் கொடுத்து அருள் மழை பொழிவாள். எத்தனை வெள்ளிக்கிழமை வந்தாலும், தை வெள்ளிக்கிழமைகளுக்கும், ஆடி வெள்ளிக்கிழமைகளுக்கும் தனிப்பெருமை உண்டு என்பது நமக்கெல்லாம் தெரியும். இந்த இரண்டு மாதங்களிலும் வரும் வெள்ளிக்கிழமைகளில் தெற்கு நோக்கிய அம்பிகையையும், வடக்கு நோக்கிய அம்பிகையையும் வழிபாடு செய்து வரலாம்.

    வடக்கு நோக்கிய அம்பிகையை வழிபட்டால் எதிர்ப்புகள் அகலும். இன்னல்கள் தீரும். போராட்டநிலை மாறி, வாழ்வில் புதிய திருப்பங்கள் ஏற்படும். தெற்கு நோக்கிய அம்பிகையை வழிபட்டால் செல்வநிலை உயரும். செயல்பாடுகளில் வெற்றி கிடைக்கும். எனவேதான் அள்ளித் தரும் சுக்ரனுக்குரிய வெள்ளிக்கிழமையை, உத்தராயன காலமாகிய தைமாதத்தில், தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும் என்று முன்னோர்கள் வகுத்து வைத்துள்ளனர்.

    இதுதவிர, தை வெள்ளிக்கிழமைகளில் லட்சுமியை வழிபாடு செய்தால், நாம் பண மழையில் நனையலாம். ‘ஒரு மனிதனின் வாழ்க்கைக்குத் தேவை அருளா? பொருளா?’ என்று ஆராய்ந்து பார்க்கும் பொழுது, அருளோடு வரும் பொருள்தான் என்று பதில் கிடைக்கும். அந்தப் பொருள் வளம் கொடுப்பவளை, நாம் ‘லட்சுமி’ என்றும், ‘திருமகள்’ என்றும் வர்ணிக்கிறோம். எட்டு வகை லட்சுமியின் அருள் இருந்தால், நாம் எண்ணியபடியே வாழ்க்கையை நடத்த இயலும். ஆகவே வரம் கொடுக்கும் லட்சுமியை ‘வரலட்சுமி’ என்று அழைத்து, விரதமிருந்து வழிபட ஏற்றநாள் தை வெள்ளிக்கிழமை ஆகும்.

    லட்சுமியை நாம் வழிபட்டால் நமது லட்சியக் கனவுகள் நனவாகும். பொருளாதாரத்தில் மிகுந்த முன்னேற்றம் ஏற்படும். லட்சுமி கடைக்கண் பார்க்க தைமாத வெள்ளிக்கிழமைகளில் சமய மாலை படித்து அதிகாலை நேரம் வழிபடுவது நல்லது. தை மாதத்தில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமை அன்றும் அதிகாலையில் வீட்டை மெழுகி, கோலமிட்டு மாவிலைத் தோரணம் கட்டி, லட்சுமிதேவிக்கு வரவேற்பு கொடுக்க வேண்டும். ஒவ்வொரு பெண்களும் ‘நாம் சுமங்கலியாக இருக்க வேண்டும்’ என்றுதான் விரும்புகிறார்கள். தவிர, ‘கணவனுக்கு ஆயுள் நீடிக்க வேண்டும், குடும்ப முன்னேற்றம் கூடுதலாக இருக்க வேண்டும், பிள்ளைகளின் வாழ்க்கை பெருமைப்படத்தக்கதாக அமைய வேண்டும்’ என்பது போன்ற விருப்பங்களும் அவர்களுக்கு இருக்கும்.

    வீட்டுவாசலில் தாமரைக் கோலம் இட்டு, ‘திருமகளே வருக! செல்வ வளம் தருக!’ என்று கோலமாவினால் கூட எழுதலாம். வீட்டு பூஜையறையில் விநாயகர் மற்றும் வரலட்சுமியின் படத்தை பலகையின் மேல் வைத்து, அதன்அருகில் பஞ்சமுக விளக்கேற்றி வழிபட வேண்டும். அருகில் நெல்பரப்பி, அதன் மேல் ஒருதட்டில் அரிசியைப் பரப்பி வைக்கவேண்டும். பூச்சூட்டிய குடம், மாவிலை தேங்காய் போன்றவற்றைச் சேர்த்து, லட்சுமி படத்தின் முன்னால் வைக்கவேண்டும். கும்பத்திற்கு சந்தனம், குங்குமப் பொட்டுவைப்பது அவசியம். தேங்காய், பழம், வெற்றிலை பாக்கு, இனிப்பு பொருள் ஆகிய நைவேத்தியத்தோடு, லட்சுமி கவசம் மற்றும் வருகைப் பதிகம் பாடி வழிபாடு செய்தால் பணத்தேவைகள் பூர்த்தியாகும். பலரும் போற்றும் வாழ்க்கை அமையும்.

    “அன்றாட வாழ்க்கையினில் அனுபவிக்கும்
    துன்பமெல்லாம்
    உந்தனருள் பெற்றுவிட்டால் ஓடுவதும்
    உண்மையன்றோ!
    இன்றோடு துயர்விலக இனிய தனலட்சுமியே!
    மன்றாடிக் கேட்கின்றேன் வருவாய் இதுசமயம்”

    என்று சமயமாலை லட்சுமியின் முன்னால் பாடுங்கள். உங்கள் கலக்கங்கள் அகலும். கவலைகள் தீரும். பக்கபலமாக பல்வகைச் செல்வங்களையும் லட்சுமிதேவி வழங்குவாள். அத்துடன் மனதில் தெளிவோடு தை வெள்ளிக் கிழமை அன்று அம்பிகையைப் பூஜித்தால் இன்பங்கள் யாவும் இல்லம் வந்துசேரும்.

    சகல செல்வங்களையும் பெற்றுச் சந்தோஷமாக வாழ்க்கை நடத்த தை வெள்ளிக்கிழமை விரதத்தை கடைப்பிடியுங்கள்.

    அலமு ஸ்ரீனிவாஸ்
    Next Story
    ×