search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    மகாலட்சுமி
    X
    மகாலட்சுமி

    மகாலட்சுமி விரத பூஜையை எப்படி செய்ய வேண்டும்

    மகாலட்சுமி பூஜையை செய்து வந்தால் எல்லாவித செல்வங்களும் கிடைக்கும். இந்த மகாலட்சுமி விரத பூஜையை எப்படி செய்ய வேண்டும் என்று அறிந்து கொள்ளலாம்.
    மகாலட்சுமி பூஜையை ஒரு வெள்ளிக்கிழமை தொடங்கி எட்டு வெள்ளிக்கிழமைகள் செய்ய வேண்டும். இடையில் ஒரு வெள்ளிக்கிழமை விட்டுப் போனாலும் பரவாயில்லை. அடுத்து வரும் வெள்ளிக்கிழமை செய்யலாம். தனியாகவோ, சுமங்கலிகள் பலர் சேர்ந்தோ இப்பூஜையைச் செய்யலாம். காலையில் எழுந்து குளித்து தினசரி வேலைகளுடன் மனதிற்குள் ‘ஜெய மகாலட்சுமி’ என்று சொல்லிக் கொண்டிருக்க வேண்டும்.

    மாலையில் விளக்கு வைக்கும் நேரத்தில் பூஜையைத் தொடங்க வேண்டும். மகாலட்சுமி படம், யந்திரம், அரிசி, தேன், பஞ்சாமிர்தம், மஞ்சள்பொடி, குங்குமம், சந்தனம், வெற்றிலை, பாக்கு, பழம், ஊதுபத்தி, சூடம், நல்ல உயர்தர சாம்பிராணி, தேங்காய், கற்பூரம், நைவேத்தியத்திற்கு சர்க்கரைப் பொங்கல், ஆசன பலகை, வெள்ளி அல்லது பித்தளை சிறிய குடம் அல்லது செம்பு, அர்ச்சனை செய்ய வெள்ளி அல்லது சாதாரண காசுகள், தூய்மையான தண்ணீர் இவற்றை சேகரித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

    மகாலட்சுமி படம், யந்திரம் வைத்திருக்கும் இடம் தூய்மையாக இருக்க வேண்டும். அதற்கு முன்பாக ஆசனபலகை வைத்து அதற்கு முன்புறம் கோலம் போட வேண்டும். ஆசனப் பலகை மீது அரிசியை சதுரமாகப் பரப்ப வேண்டும். வெள்ளி அல்லது பித்தளை செம்பில் தூய்மையான தண்ணீரை விட்டு அதில் ஏலக்காய், கிராம்பு, குங்குமப்பூ, கற்பூரம் போட வேண்டும். இதன் மேல் சிறு பித்தளைத் தட்டை வைத்து அதன் மேல் நாணயங்களை வைக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் எவர்சிலர் பொருட்களைப் பயன்படுத்த வேண்டாம்.

    மகாலட்சுமி படம், யந்திரம் ஆகியவற்றிற்கு மஞ்சள், குங்குமம் வைத்து சிகப்பு நிற மலர்களால் அலங்கரிக்க வேண்டும். மஞ்சள் பிள்ளையார் பிடித்து வைக்கவும். ஊதுபத்தி ஏற்றி வைக்கவும். முதலில் விநாயகரை வழிபட்டு கணபதி மந்திரம் தெரிந்ததைக் கூறவும். பின்னர் லட்சுமி அஷ்டோத்திரம் (108) கூறவும். பிறகு நைவேத்தியம் செய்து கற்பூரம் காட்டவும்.

    பிரசாதத்தை நிவேதனம் செய்வதுடன் சுமங்கலிகளுக்கு குங்குமம் மற்றும் தாம்பூலம் கொடுக்கவும். பூஜையில் வைத்த நாணயத்தை செலவழிக்காமல் எல்லா பூஜைகளுக்கும் அதைப் பயன்படுத்தவும். பிறகு அதை பீரோவில் பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும். அடுத்து தேவைப்படும் பொழுது பூஜைக்குப் பயன்படுத்தலாம். மகாலட்சுமி பூஜையை இப்படி செய்து வந்தால் எல்லாவித செல்வங்களும் கிடைக்கும். நினைத்த காரியம் தடையின்றி நிறைவேறும். 
    Next Story
    ×