search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    தீபாவளி விரதம்
    X
    தீபாவளி விரதம்

    தீபாவளி விரதம் ஏன்? - வாரியார் சுவாமிகள்

    தீபாவளியன்று பகல் இரவு முழுவதும் பட்டினி இருந்து இரவில் தீபங்களை வரிசையாக வைத்துச் சிவபூசை செய்து நீராடி, சிவபூசை செய்து விடியுமுன் புத்தாடை உடுத்தி சுத்த சைவ உணவு உண்டு அனுஷ்டிப்பது தீபாவளி விரதமாகும்.
    விரதம் இருந்தால் உடலும் உள்ளமும் தூய்மை பெறும். விரதங்கள் பல. அவற்றில் சிவபெருமானை வழிபடும் விரதங்கள் எட்டு எனக் கந்தபுராணத்தில் கூறப்பட்டுள்ளது.
    1. சோமவிரதம்
    2. திருவாதிரை விரதம்
    3. உமா மகேசுவர விரதம்
    4. மகாசிவராத்திரி விரதம்
    5. கேதார விரதம்
    6. கல்யாண சுந்தரர் விரதம்
    7. சூல விரதம் (பாசுபத விரதம்)
    8. இடப விரதம் (அஷ்டமி விரதம்) ஆகியவையே அந்த 8 விரதங்களாகும்.

    இனி தீபாவளித் தத்துவத்தைப் பார்ப்போம்.

    தீபாவளி என்னும் நன்னாளைப் பொன்னாளாக எங்கும் கொண்டாடுகின்றார்கள். ஆனால், அதன் உண்மையை அறிந்தவர்கள் ஒரு சிலரே. பெரும்பாலானோர் நரகாசுரனைக் கண்ணபிரான் சம்கரித்தார் அந்த அரக்கனை அழித்த நாளே தீபாவளி என்று கூறிக் கொண்டிருக்கின்றார்கள்.

    பிராக்சோதிடபுரியை ஆண்ட நரகாசுரனைச் சம்கரித்த நாள் அதுவாக இருக்கட்டும். ஆனால், கேவலம் அரக்கனை அழித்த நாளுக்கு ஒரு கொண்டாட்டம் நிகழ்வது எங்கும் எக்காலத்தும் இருந்தது இல்லை. அப்படி இருக்குமாயின் இரணியனைக் கொன்ற நாள், இராவணனைக் கொன்ற நாள், கம்சனைக் கொன்ற நாள், இடும்பனை, பகனைக் கொன்ற நாள், துரியோதனனைக் கொன்ற நாள், அவ்வாறே அந்த நாகாசுரன், ஜலந்தராசுரன், இரண்யாட்சன், திருணாவர்த்தன் இப்படி புகழ் பெற்ற அசுரர்களை எல்லாம் கொன்ற நாளைக் கொண்டாடுவதாயின் நம் ஆயுளே அதற்குச் சரியாகிவிடும். ஆகவே, நரகாசுரனைக் கொன்றதற்காக தீபாவளி ஏற்படவில்லை.

    தீபம் = விளக்கு; ஆவளி = வரிசை.

    தீபத்தை வரிசையாக வைத்து பிரம்ம முகூர்த்தத்தில் எண்ணெய் ஸ்நானம் செய்து நீராடி, சிவபெருமானை வழிபடுவதற்கு உரிய நாள் தீபாவளி என உணர்க. தீபாவளியன்று பகல் இரவு முழுவதும் பட்டினி இருந்து இரவில் தீபங்களை வரிசையாக வைத்துச் சிவபூசை செய்து நீராடி, சிவபூசை செய்து விடியுமுன் புத்தாடை உடுத்தி சுத்த சைவ உணவு உண்டு அனுஷ்டிப்பது தீபாவளி விரதமாகும்.

    தீப மங்கள ஜோதியாக விளங்கும் சிவபெருமானை நிரம்பவும் விளக்கேற்றி வணங்கினார்கள் நமது முன்னோர்கள். திருக்கார்த்திகையில் விளக்கேற்றி வணங்குகின்றார்களன்றோ?

    விளக்கீடு காணாதே போதியோ பூம்பாவாய்
    என்பது ஞானசம்பந்தர் வாக்கு.

    தீபாவளி யன்று மது மாமிசங்களை சாப்பிட்டு களியாட்டம் செய்கின்ற மாந்தர் பெரும் பாவத்திற்கு ஆளாவர். இனியேனும் இந்தத் தீய நெறியைக் கைவிட்டுத் தூயநெறி நின்று மக்கள் நலமும், பலமும் பெற வேண்டும்.

    தீபாவளி விரதத்தில் கால ஓட்டத்தில் பல மாறுதல்கள் ஆகிவிட்டது. தீபாவளியன்று பகலும் இரவும் வயிறுபுடைக்க சாப்பிட்டுத் தூங்கி விழித்து அதிகாலை எண்ணெயிட்டு நீராடி புத்தாடை உடுத்தி பலப்பல ஆகாரங்கள் சாப்பிட்டுப் பட்டாசுகள் வெடித்துக் குசாலாக இருந்து கொண்டு நண்பர்களையும் பந்துமித்திரர்களையும் “கங்கா ஸ்நானம் ஆச்சோ” என குசலம் விசாரிப்பது நடைமுறையாகிவிட்டது.

    தீபங்களை ஏற்றினால் இருள்தானே விலகிவிடும். அதுபோல, நம் உள்ளக்கோயிலில் ஞானவிளக்கை ஏற்றினால் அறியாமையாகிய இருள்தானே விலகிவிடும். இதை அப்பர் சுவாமிகள்

    உடம்பெனு மனைய கத்து வுள்ளமே தகளி யாக
    மடம்படு முணர்நெய் யட்டி யுயிரெனுந் திரிம யக்கி
    இடம்படு ஞானத் தீயா லெரிகொள விருந்து நோக்கில்
    கடம்பமர் காளை தாதை கழலடி காணலாமே.
    என்று அற்புதமாக பாடுகின்றார்.

    இவ்வாறு ஞானவிளக்கேற்றி அறியாமையை அகற்றுவதே தீபாவளிப் பண்டிகையின் உண்மையான நோக்கமாகும். நம்மிடம் உள்ள காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மாச்சரியம் என்ற தீய சக்திகளை இறைவனுடைய திருநாமங்களாகிய பட்டாசுகளினால் சுட்டுத் தள்ளவேண்டும். இறைவனுடைய திருநாமங்கள் தீய சக்திகளை அழிக்கும் படைக்கலங்கலாகும்.

    படைக்கல மாகவுன் னாமத் தெழுத்தஞ்சென் நாவிற்கொண்டேன்
    இடைக்கல மல்லே னெழுபிறப் பும்முனக் காட்செய்கின்றேன்
    துடைக்கினும் போகேன் றொழுது வணங்கித் தூநீறணிந்துன்
    அடைக்கலங் கண்டா யணிதில்லைச் சிற்றம் பலத்தரனே.

    என்று அருளிச்செய்த திருநாவுக்கரசரது நற்றமிழ்ப்பாடலால் இது விளங்குகின்றது. இதனை அறிந்து நாம் தீபாவளி விரதமிருந்து சிவபெருமானின் திருவருளை அடைய வேண்டும்.
    Next Story
    ×