என் மலர்
முக்கிய விரதங்கள்
புயல்-கனமழையை முன்கூட்டியே கணிக்க 2 அதிநவீன ரேடார்கள்
- வங்கக் கடலில் அவ்வப்போது புயல் மற்றும் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலங்கள் உருவாவது வழக்கம்.
- ரேடார்கள் நிறுவப்பட்டு பருவ, காலநிலைகளை முன்கூட்டியே இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்து வருகிறது.
மதுரை:
தமிழ்நாட்டில் வருகிற அக்டோபர் 20-ந்தேதி முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை வடகிழக்கு பருவமழை மூலம் 47 சதவீத மழை கிடைத்து வருகிறது. சராசரியாக 90 சென்டி மீட்டர் மழை வரை இந்த பருவமழை மூலம் தமிழ்நாட்டுக்கு கிடைக்கிறது. ஆனாலும் வடகிழக்கு பருவமழையின் போது வங்கக் கடலில் அவ்வப்போது புயல் மற்றும் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலங்கள் உருவாவது வழக்கம்.
இதனால் சென்னை, கடலூர், நாகை உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் புயல் சேதம் மற்றும் குறிப்பிட்ட இடங்களில் அதி கன மழையும், சில இடங்களில் கனமழையும் பெய்வதாலும் தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் இந்த பருவ மழையின் போது பெரும் சேதமடைகிறது. பருவ நிலைகளை முன்கூட்டியே கண்காணிக்கும் வகையில் ஏற்கனவே சென்னை, காரைக்கால், ஸ்ரீஹரிகோட்டா ஆகிய இடங்களில் அதிநவீன ரேடார்கள் நிறுவப்பட்டு பருவ, காலநிலைகளை முன்கூட்டியே இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்து வருகிறது.
ஆனாலும் சில சமயங்களில் இந்திய வானிலை ஆய்வு மைய கணிப்புகளை பொய்யாக்கும் வகையில் கனமழை மற்றும் புயல் காரணமாக அதிக பாதிப்புகளை தென் மற்றும் வட மேற்கு மாவட்டங்கள் சந்தித்து வருகின்றன. கடந்த ஆண்டு தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக பெரும் சேதம் ஏற்பட்டது ஆனாலும் இது தொடர்பாக இந்திய மாநில மையம் சரியான முன்னெச்சரிக்கை உத்தரவுகளை மாநில அரசுக்கு தெரிவிக்கவில்லை என்ற புகாரும் எழுந்தது.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் தெற்கு மற்றும் வட மேற்கு பகுதிகளை இயற்கை சீற்றத்தில் இருந்து பாதுகாக்கும் வகையில் பருவ காலநிலைகளை முன்கூட்டியே துல்லியமாக கண்டறிந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்த வசதியாக ராமநாதபுரம், ஏற்காடு ஆகிய 2 இடங்களில் அதிநவீன ரேடார்களை அமைக்க மாநில பேரிடர் மேலாண்மை துறை நடவடிக்கையில் இறங்கி உள்ளது .
இதற்கான டெண்டர் அறிவிப்புகளும் வெளியிடப்பட்டுள்ளன. வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு இன்னும் 2 மாதங்கள் உள்ள நிலையில் பேரிடர் மேலாண்மை துறை புதிய ரேடாரர்களை அமைக்க தீவிர நடவடிக்கையில் இறங்கியுள்ளது.
இந்த அதிநவீன ரேடார்கள் மின்காந்த அலைகள் மூலம் பருவ, காலநிலையில் நிலவும் திட மற்றும் திரவ மூலக்கூறுகளின் தன்மைகளை துல்லியமாக ஆராய்ந்து மழை மற்றும் புயலின் தன்மையை முன் கூட்டியே துல்லியமாக கணிக்க முடியும். மேலும் இந்த ரேடார்கள் புயல் மற்றும் கடலில் உருவாகும் குறைந்த அழுத்த தாழ்வு மண்டலம் மற்றும் புயல் மையம் கொள்ளும் பகுதிகள், கடக்கும் பகுதிகளையும் துல்லியமாக கணித்து எச்சரிக்கை செய்யும்.
இது தொடர்பாக இந்திய வானிலை மைய இயக்குனர் மிருத்தியூஜாய் மோகபத்ரா கூறியதாவது:-
தமிழ்நாட்டில் ராமநாதபுரம், ஏற்காடு ஆகிய 2 இடங்களில் புதிதாக அதிநவீன ரேடார்கள் நிறுவும் பட்சத்தில் தமிழகத்தின் தென்பகுதி மற்றும் வடமேற்கு பகுதிகளை இயற்கை சீற்றத்தில் இருந்து முழுமையாக தடுக்க முடியும். மேலும் தமிழகத்தில் ஏற்கனவே சென்னையில் எஸ்-பாண்ட், எக்ஸ்-பாண்ட் வகையான 2 ரேடார்களும், காரைக்கால்-ஸ்ரீஹரிகோட் டாவில் எஸ்-பாண்ட் ரேடார்களும் நிறுவப்பட்டு உள்ளன.
கேரள மாநிலம் கொச்சி மற்றும் திருவனந்தபுரத்தில் நிறுவப்பட்டுள்ள ரேடார்கள் மூலம் தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் நிலவும் பருவ நிலைகள் ஒரளவுக்கு கண்காணிக்கப்படுகிறது ஆனாலும் பல பகுதிகளை இதன் மூலம் கண்காணிப்பதில் சிக்கல்கள் இருந்து வருகிறது. இதனை சரிசெய்யும் வகையிலும், தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் நிலவும் பருவநிலைகளை முன்கூட்டியே கண்காணிக்க வசதியாகவும் 2 புதிய ரேடார்கள் நிறுவப்படுகின்றன.
இதன் மூலம் தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலும் பருவ நிலைகளை முன்கூட்டியே கண்டறிந்து இயற்கை சீற்றங்களில் இருந்து பொதுமக்களை பாதுகாக்க தேவையான முன்னேற்பாடுகளை செய்ய முடியும். மேலும் ராமநாத புரத்தில் நவீன புதிய ரேடார் நிறுவப்படுவதால் கிழக்கு கடலோர பகுதிகள்,தென் மாவட்டங்கள் உள்ளிட்ட பகுதிகளில் நிலவும் பருவ நிலை மாற்றங்களை முன் கூட்டியே கணிக்க முடியும். எஸ்-பாண்ட் வகை ரேடார் கள் மூலம் 500 கிலோமீட்டர் சுற்றளவையும், எக்ஸ்-பாண்ட் ரேடார்கள் மூலம் 150 கிலோமீட்டர் சுற்றளவையும் கணிக்க இயலும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தற்போது உள்ள ரேடார்கள் மூலம் தமிழகத்தின் அனைத்து பகுதிகளையும் நிலவும் பருவ நிலைகளை கண்காணிப்பதில் ஏற்பட்டுள்ள சிக்கலை தவிர்க்க வசதியாக ராமநாதபுரத்தில் அமைகின்ற ரேடார் மூலம் கிழக்கு கடலோர பகுதிகள் மற்றும் தமிழகத்தின் தென் மாவட்டங்கள் முழுவதிலும் பருவ நிலை மாற்றங்களை துல்லியமாக கணிக்க இயலும். மேலும் ஏற்காட்டில் நிறுவப்படும் ரேடார் மூலம் வட மேற்கு மற்றும் வடபகுதி மாவட்டங்களின் நிலவும் பருவநிலை மாற்றங்களை முன்கூட்டியே துல்லியமாக கணிக்க இயலும் என்று இந்திய வானிலை மைய மண்டல இயக்குனர் செந்தாமரை கண்ணன் தெரிவித்துள்ளார்.
வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பே அதிநவீன 2 ரேடார்கள் ராமநாதபுரத்திலும் ஏற்காட்டிலும் நிறுவ மாநில பேரிடர் மேலாண்மை துறை எடுத்துள்ள நடவடிக்கை காரணமாக வடகிழக்கு பருவமழையின் மூலம் தமிழகத்தில் ஏற்பட்டு வரும் வெள்ள சேதங்கள் மற்றும் பாதிப்புகளை தடுக்கவும், பொது மக்களை பாதுகாக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன் கூட்டியே எடுக்கவும் பேருதவியாக இருக்கும் என்று பேரிடர் மேலாண்மை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.