என் மலர்tooltip icon

    இஸ்லாம்

    பெரியபட்டினத்தில் மகான்செய்யது அலி ஒலியுல்லா தர்காவின் மதநல்லிணக்க சந்தனக்கூடு திருவிழா நடைபெற்றது.
    ராமநாதபுரம் மாவட்டம் பெரியபட்டினத்தில் உள்ள மகான் செய்யதுஅலி ஒலியுல்லா தர்காவின் 115–ம் ஆண்டு மத நல்லிணக்க சந்தனக்கூடு திருவிழா கடந்த 9–ந்தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி பெரியபட்டினம் ஜலால்ஜமால் பள்ளிவாசலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட சந்தனக்கூடு ரதம் ஊர்வலமாக புறப்பட்டு தர்காவை வந்தடைந்தது.

    இதில் மாவட்டம் முழுவதும் இருந்து அனைத்து சமுதாய பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். சந்தனக்கூடு ஊர்வலம் நடைபெற்ற முக்கிய வீதிகளில் ஏராளமான திருவிழா கடைகள், உணவகங்கள், குழந்தைகள் விளையாட்டு பொழுதுபோக்கு அம்சங்கள், கலைநிகழ்ச்சி அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. விழாவையொட்டி இசைக்கச்சேரியும், கிராமிய நகைச்சுவை தெம்மாங்கு பாட்டு மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    விழாவிற்கான ஏற்பாடுகளை விழாகமிட்டியினர் மற்றும் சுல்த்தானியா சங்கத்தின் சார்பில் செய்யது இப்ராம்சா தலைமையில் இணை தலைவர்கள் சிராஜ்தீன், சாகுல்ஹமீது, செயலாளர் அபிபுல்லா, அமைப்பாளர் தி.மு.க. ஊராட்சி செயலாளர் அப்துல்மஜீது, தொழிலதிபர் சிங்கம்பசீர், தி.மு.க. துணை செயலாளர் எம்.எஸ்.இஸ்மாயில், பெரியபட்டினம் ஊராட்சி தலைவர் கபீர், என்ஜினீயர் அக்கர் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

    வருகிற 30–ந் தேதி கொடி இறக்கத்துடன் சந்தனக்கூடு திருவிழா நிறைவடைகிறது. விழாவையொட்டி மாவட்டம் முழுவதும் இருந்து பெரியபட்டிணத்திற்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. விழாவையொட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் உத்தரவின்பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரி தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
    அல்லாஹ்வின் அருள் பெற்ற குழந்தை முஹம்மது (ஸல்) என்பதைப் புரிந்து கொண்டவர்களாக, செவிலித்தாயாக ஹலீமாவும் அவரது கணவரும் இன்முகத்துடன் குழந்தையை தமது கிராமத்திற்கு அழைத்து வந்தனர்.
    அல்லாஹ்வின் அருள் பெற்ற குழந்தை முஹம்மது (ஸல்) என்பதைப் புரிந்து கொண்டவர்களாக, செவிலித்தாயாக ஹலீமாவும் அவரது கணவரும் இன்முகத்துடன் குழந்தையை தமது கிராமத்திற்கு அழைத்து வந்தனர். 

    ஹலீமாவின் கிராமம் பஞ்சத்தால் பாதிக்கப்பட்டிருந்த பகுதி. அவர்களின் பூமி வறட்சியைக் கண்டிருந்தது. ஹலீமா தனது ஆடுகளை மேய்ச்சலுக்கு அனுப்பினார். விளைச்சல் இல்லாத பூமியிலும் ஹலீமாவின் ஆடுகள் மேய்ந்து, அவை வீடு திரும்பும்போது ஆடுகளின் மடி சுரந்து நிரம்பி இருந்தது. அந்தப் பாலை ஹலீமாவும் அவரது குடும்பத்தினரும் குடித்து வாழ்ந்தனர். இறைவனுக்கு நன்றி செலுத்தினர்.

    மடி நிரம்பி வரும் ஆடுகளைக் கண்டு மற்றவர்கள் ஆச்சர்யப்பட்டனர். அவர்கள் தங்கள் இடையர்களிடம், ஹலீமாவின் ஆடுகள் மேயும் பகுதியிலேயே தங்கள் ஆடுகளையும் மேய்க்கச் சொல்லி அனுப்பினார்கள். இருப்பினும் ஹலீமாவின் ஆடுகளைத் தவிர மற்ற எல்லா ஆடுகளின் மடிகளும் காய்ந்தே இருந்தன. ஆடுகளின் வயிறும் ஒட்டிக்காணப்பட்டது.

    இதெல்லாம் குழந்தை முஹம்மது (ஸல்) அவர்கள் வந்த நேரமென்று அறிந்தவர்களாக ஹலீமாவும் அவரது கணவரும் குழந்தையை மிகவும் பக்குவமாக வளர்த்தனர். குழந்தை கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் ஹலீமாவிடம் பால் குடித்தது. அதுவரை ஹலீமாவின் குடும்பத்தினர் இறைவனின் அனுகூலத்தால் பலவித பலன்களையும் நலன்களையும் பெற்று வந்தனர். அதன் காரணமாகவே அவர்களால் அக்குழந்தையைப் பிரிய மனம் வரவில்லை.
     
    இருப்பினும் தவணை முடிந்துவிட்டதால், தாய் ஆமினாவிடம் குழந்தையைக் கொண்டு வந்து தரும்போது ஹலீமா, ‘மக்காவில் பரவியிருக்கும் ஏதேனும் கொடிய நோய் குழந்தையைப் பாதித்துவிடும்’ என்று தாம் அஞ்சுவதாக முஹம்மது (ஸல்) அவர்களின் தாயார் ஆமீனாவிடம் சொல்லி வலியுறுத்தவே, அவர்களும் ஹலீமாவிடம் இன்னும் சில காலமிருக்க சம்மதம் தெரிவித்தார்.

    குழந்தையின் நலன் கருதி தாத்தா அப்துல் முத்தலிபும், தாயார் ஆமினாவும் குழந்தை முஹம்மது (ஸல்) அவர்களை இன்னும் சில காலம் ஹலீமாவுடன் தங்க அனுமதித்தனர்.

    அனுமதி பெற்ற ஹலீமா மீண்டும் தன் கிராமத்திற்கே குழந்தையை அழைத்து வந்தார். 

    (ஆதாரம்: சீறா இப்னு ஹிஷாம், அர்ரஹீக் அல்மக்தூம்)

    - ஜெஸிலா பானு.

    அல்லாஹ்வின் அருள் கொண்ட வளம் பொருந்திய குழந்தையை எடுத்து வந்திருப்பதாக ஹலீமாவும் அவருடைய கணவரும் நம்பினார்கள்.
    தாய் ஆமினா மற்றும் தாத்தா அப்துல் முத்தலிபிடமிருந்து குழந்தை முஹம்மது (ஸல்) அவர்களை, செவிலித்தாய் ஹலீமா பெற்றுக் கொண்டார். கிராமத்திலிருந்து வந்தவர்கள் அன்றிரவு நகரத்தில் தங்கி மறுநாள் காலையில் அவர்களின் ஊருக்குத் திரும்புவதாக இருந்தனர்.

    குழந்தையை எடுத்து ஹலீமா அவருடைய மடியில் கிடத்தியதும் அவருடைய மார்புகளில் பால் சுரந்தது. அவராலேயே நம்ப முடியாத அளவுக்கு அவருடைய மார்கள் பால் சுரந்தது. குழந்தை முஹம்மது வயிறு நிரம்பப் பால் அருந்தி, அதன் பிறகு ஹலீமாவின் குழந்தையும்  வயிறு நிரம்பப் பாலருந்தி நிம்மதியாக இருவரும் தூங்கினர். 

    ஹலீமாவின் கணவர் அவர்களிடமிருந்த பெண் ஒட்டகத்திடம் நெருங்கும்போது அதனுடைய மடி நிரம்பியிருந்ததைக் கண்டார். பாலில்லாமல் வறண்டிருந்த மடி வலுவாக இருப்பதைக் கண்டு ஆச்சர்யத்தோடு பாலைக் கறந்து கணவன் – மனைவி இருவரும் பசியாறினர். பல நாட்களுக்குப் பிறகு அவர்களுக்கு அந்த இரவு மிகவும் நிம்மதியான நிறைவான இரவாக அமைந்தது. 

    மறுநாள் மக்காவிலிருந்து புறப்பட்டபோது ஹலீமா இரு குழந்தைகளுடன் கழுதையில் ஏறி உட்கார்ந்தார். அப்பெண் கழுதை வழக்கத்திற்கு மாறாக அக்குழுவினரே வியக்குமளவிற்கு வேகமெடுத்து முந்தியது. 

    அதற்கு முன்தினம் பலவீனமாக, சோர்வாக நடந்து குழுவினருக்குச் சிரமம் தந்த கழுதை முந்தியடிப்பதைக் கண்டு “நேற்று ஏறி வந்த அதே கழுதைதானா இது?” என்று சந்தேகத்துடன் கேட்டனர். “நேற்று பயன்படுத்திய அதே கழுதைதான்” என்று ஹலீமா உறுதி செய்தபோது. ஒரே நாளில் எப்படி இப்படியான மாற்றமென்று வியந்தனர்.

    அல்லாஹ்வின் அருள் கொண்ட வளம் பொருந்திய குழந்தையை எடுத்து வந்திருப்பதாக ஹலீமாவும் அவருடைய கணவரும் நம்பினார்கள். அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தினார்கள்.

    (ஆதாரம்: சீறா இப்னு ஹிஷாம், அர்ரஹீக் அல்மக்தூம்)

    - ஜெஸிலா பானு
    பெரியபட்டணம் மகான் செய்யதுஅலி ஒலியுல்லாஹ் தர்கா மதநல்லிணக்க சந்தனக்கூடு திருவிழா இன்று 19-ந்தேதி நடைபெறுகிறது.
    ராமநாதபுரம் மாவட்டம் பெரியபட்டணத்தில் மகான் செய்யதுஅலி ஒலியுல்லாஹ் தர்கா உள்ளது. ஆண்டு தோறும் இங்கு சந்தனக் கூடு திருவிழா வெகுவிமர்சையாக நடைபெறும். கடந்த 9-ந் தேதி 115-வது ஆண்டின் சந்தனக்கூடு திருவிழா கொடியேற்றம் நடந்தது.. இதை தொடர்ந்து இன்று (19-ம் தேதி) சந்தனக்கூடு திருவிழா நடைபெறுகிறது.

    பெரியபட்டணம் ஜலால், ஜமால் ஜூம்மா பள்ளி வாசலிருந்து யானை, குதிரைகளுடன் சந்தனக்கூடு ஊர்வலம் புறப்பட்டு முக்கிய வீதிகளின் வழியாக சென்று தர்கா வந்தடையும். வருகிற 20-ந்தேதி பகல் கூடு, 30-ந்தேதி கொடி இறக்கத்துடன் விழா நிறைவடைகிறது. இந்த விழாவில் அனைத்து சமூகத்தை சேர்ந்த மக்களும் கலந்து கொள்வதால் மத நல்லிணக்க விழாவாக நடத்தப்படுகிறது.
    அல்லாஹ்வின் அருள்‌‌ பெற்ற குழந்தை பற்றி விரிவாக கீழே பார்க்கலாம்.
    ஆமினாவிற்குப் பிறந்த நபி முஹம்மது (ஸல்) அவர்களுக்கு ஒரே ஒரு வாரம் மட்டும் தாய்ப்பால் புகட்டிவிட்டு, அவருக்குப் பாலூட்டுவதற்காகச் செவிலியைத் தேடிக் கொண்டிருந்தனர்.

    அந்தக் கால வழக்கத்தின்படி நகரத்தில் இருக்கும் அரபிகள் கிராமப்புற செவிலிகளை வைத்துத்தான் பாலூட்டுவார்கள். காரணம் நகரத்தில் நோய்கள் அதிகமாக இருக்கும் என்பதால்.

    கிராமப்புற செவிலிகள் தாய்ப்பால் தந்தால் குழந்தையின் உடல் உறுதியாகவும் நரம்புகள் வலிமையாகவும் இருக்குமென்று நகரத்துத் தாய்கள் கிராமத்து செவிலிகளைத் தாய்ப்பாலூட்டுவதற்கே அமர்த்துவார்கள். 

    தாத்தா அப்துல் முத்தலிப் பேரனுக்காகச் செவிலித்தாயை தேடிச் சென்றது போலவே, ஹலீமா என்பவர் தன் கணவர் குழந்தையுடன் பால் குடிக்கும் குழந்தை வேண்டி புறப்பட்டு வந்தனர். ஹலீமாவின் ஊரில் கடுமையான பஞ்சமாக இருந்தது. பால் குடிக்கும் குழந்தை கிடைத்தால், அந்தக் குழந்தையைப் பராமரிக்கப் போதிய ஊதியம் கிடைக்குமென்று புறப்பட்ட பயணம். 

    ஹலீமாவிடம் போதிய பாலில்லை. அவர்களிடமிருந்த பெண் ஒட்டகத்திடமும் ஒரு சொட்டு பால் இல்லை. அதனால் ஹலீமாவின் குழந்தை வழிநெடுகிலும் அழுது கொண்டே வந்தது. இரவு முழுக்கக் குழந்தையின் அழுகை ஓயாததால் அவர்கள் கண் அயரவில்லை.

    ஹலீமா தன் குழந்தையுடன் உட்கார்ந்து பிரயாணித்த பெண் கழுதையும் பலவீனமாக இருந்தது. அது மிகவும் மெதுவாக நடந்து அவர்களுடன் சென்ற குழுவினருக்கும் சிரமத்தை ஏற்படுத்தியது. போகிற இடத்தில் தமக்கு ஏதேனும் ஒரு விடிவு பிறக்குமென்று நம்பி அல்லாஹ்வை வேண்டியபடி நகரத்திற்கு வந்தனர். ஹலீமாவுடன் வந்திருந்த மற்ற எல்லாப் பெண்களுக்கும் பால் குடிக்கும் குழந்தைகள் கிடைத்தனர். ஆனால் ஹலீமாவுக்கு எதுவுமே அமையவில்லை. 

    நபி முஹம்மது (ஸல்) அவர்கள், தந்தை இல்லாத குழந்தை என்பதால் அவர்களிடமிருந்து பெரிய ஊதியம் கிடைக்காதென்று அக்குழந்தையை எடுக்கத் தயங்கினர். மற்ற எல்லாருக்கும் குழந்தைகள் கிடைத்த நிலையில் வேறு வழியின்றி ஹலீமா குழந்தை முஹம்மது (ஸல்) அவர்களை எடுத்துக் கொண்டார்கள். 

    அக்குழந்தையின் மூலம் அல்லாஹ் அவர்களுக்கு வளம் தருவான் என்று நம்பினார்கள். 

    (ஆதாரம்: சீறா இப்னு ஹிஷாம், அர்ரஹீக் அல்மக்தூம்)

    - ஜெஸிலா பானு
    அப்துல்லாஹ் மிக அழகிய தோற்றமுடையவராகவும், ஒழுக்கமானவராகவும், இளையவராகவும், தந்தையின் பிரியத்திற்குரியவராகவும் இருந்தார்.
    கினானா குடும்பத்தைச் சேர்ந்த அப்து மனாஃபின் மகனான ஹாஷிமுக்கு ஹஜ் பயணிகளுக்கு உணவளிப்பதும் தண்ணீர் கொடுப்பதும் பொறுப்பாக இருந்தது. அவருடைய மறைவிற்குப் பிறகு ஹாஷிமின் மகன் அப்துல் முத்தலிப் அந்த வேலையை மிகச் சிறப்பாகச் செய்தார். அவருக்கு மக்களிடையே பெரும் மதிப்பும் மரியாதையும் இருந்தது. மேலும் அவர் செல்வந்தராக இருந்தார். அவருடைய தாத்தா அப்து மனாஃபின் தாய் குஜாஆ என்ற வம்சத்தைச் சேர்ந்தவராக இருந்ததால் அப்துல் முத்தலிபுக்கு அந்தக் கோத்திரத்தினரிடமும் நன்மதிப்பிருந்தது.

    ஒருநாள் அப்துல் முத்தலிபுக்குக் கனவில் ஸம்ஸம் கிணற்றின் இடம் காண்பிக்கப்பட்டது. அந்தக் கனவை நினைவில் வைத்துக் கொண்டு அவர் அந்த இடத்தில் தோண்டியபோது, ஜுர்ஹும் கோத்திரத்தினர் ஸம்ஸம் கிணற்றில் போட்ட தங்கத்தாலான மான்களும் அஸ்வத் கல்லும் கிடைத்தன. மான்களை உருக்கி கஅபாவிற்குக் கதவாக்கினார் அப்துல் முத்தலிப். ஹஜ் பயணிகளுக்குத் தண்ணீர் மற்றும் உணவளிப்பதின் பொறுப்பை ஏற்றிருந்த அப்துல் முத்தலி்புக்கு ஸம்ஸம் தண்ணீர் வரப்பிரசாதமானது. அங்கு வரும் ஹஜ் பயணிகளுக்கு ஸம்ஸம் கிணற்று நீரை வழங்கி மகிழ்ந்தார்.

    அப்துல் முத்தலிபுக்கு இறைவன் பத்து ஆண் குழந்தைகளையும் ஆறு பெண் குழந்தைகளையும் வழங்கியிருந்தான். மகன்களின் பெயர்கள் ஹாரிஸ், சுபைர், அபூதாலிப், ஹம்ஸா, அபூலஹப், கைதாக், முகவ்விம், ழிரார், அப்பாஸ் மற்றும் அப்துல்லாஹ்.

    அப்துல் முத்தலிப் மகன்கள் தனக்கு உதவும் வயதை அடைந்ததும் அதில் ஒருவனை இறைவனுக்காகப் பலியிடுவதாக நேர்ச்சை செய்து கொண்டார். அதற்கான நேரம் வந்ததும் சீட்டுக் குலுக்கிப் பார்த்ததில் மகன் அப்துல்லாஹ்வின் பெயர் வந்தது.

    அப்துல்லாஹ் மிக அழகிய தோற்றமுடையவராகவும், ஒழுக்கமானவராகவும், இளையவராகவும், தந்தையின் பிரியத்திற்குரியவராகவும் இருந்தார். அப்துல்லாஹ்வின் பெயர் வரவே அப்துல் முத்தலிப் ‘ஹுபுல் சிலையிடம்’ பிரார்த்தித்து அப்துல்லாஹ்வின் பெயரையும், மற்றொரு சீட்டில் பத்து ஒட்டகங்கள் என்று குலுக்கி எடுத்த போது மீண்டும் அப்துல்லாஹ்வின் பெயரே வந்தது. ஆகையால் அப்துல் முத்தலிப் ஒட்டகங்களின் எண்ணிக்கையைக் கூட்டிக்கொண்டே சென்றார். நூறு ஒட்டகங்கள் ஒரு சீட்டிலும், அப்துல்லாஹ் என்று ஒரு சீட்டிலும் எழுதி குலுக்கிப் போட்டபோது நூறு ஒட்டகங்கள் என்று வந்தது. ஹுபுல் திருப்தியடைந்துவிட்டதென நூறு ஒட்டகங்களைப் பலியிட்டு, தமக்குச் சாதகமாக வரும் வரை குலுக்கி அப்துல்லாஹ்வை பலியிடாமல் காத்துக் கொண்டார் அப்துல் முத்தலிப்.

    தந்தையைப் போலவே அப்துல்லாஹ்வும் மக்காவில் நன்மதிப்புப் பெற்றிருந்தார். திருமண வயதில் ஆமினா என்பவரை மணமுடித்தார். ஆமினா கர்ப்பமாக இருந்தபோது மனைவியைவிட்டு விட்டு வணிகத்திற்காக மதீனா நகரத்திற்குச் சென்றிருந்தபோது அங்கேயே மரணமடைந்துவிட்டார் அப்துல்லாஹ்.

    அப்துல்லாஹ்வின் மனைவி ஆமினா குழந்தையைப் பெற்றெடுத்ததும் அந்த நற்செய்தியை தாத்தா அப்துல் முத்தலிபுக்குத் தெரிவித்தார். எல்லையில்லா மகிழ்ச்சியடைந்த அப்துல் முத்தலிப், பேரனை இறை இல்லத்திற்குத் தூக்கிச் சென்று இறைவனுக்கு நன்றி செலுத்தி பிரார்த்தித்தார். அந்தக் குழந்தைக்கு அதற்கு முன் எவருக்குமே சூட்டப்படாத பெயரை வைத்தார். அந்தப் பெயர் ‘முஹம்மது’.

    அகிலத்தின் அருட்கொடையாகப் பிறந்த முஹம்மது நபி (ஸல்) பிறந்தது யானை ஆண்டு ரபீவுல் அவ்வல் மாதம், திங்கட்கிழமை கி.பி. 571 அதிகாலை.

    (ஆதாரம்: சீறா இப்னு ஹிஷாம், அர்ரஹீக் அல்மக்தூம்)

    - ஜெஸிலா பானு.
    அப்துல் முத்தலிபின் மகன்களில் ஒருவரான அப்துல்லாஹ்வின் மகனாக நபி முஹம்மது (ஸல்) அவர்களை மனிதகுலத்தின் விடிவெள்ளியாக இறைவன் அனுப்பி வைத்தான்.
    அல்லாஹ்வின் கட்டளையின்படி இப்ராஹீம் (அலை) அவர்களும் இஸ்மாயீல் (அலை) அவர்களும் இணைந்து இறை இல்லத்தைக் கட்டினார்கள். இஸ்மாயீல் (அலை) அவர்கள் ஜுர்ஹும் கோத்திரத்தாரிடம் அரபி மொழியைக் கற்றார்கள். ஜுர்ஹும் கோத்திரத்தார் தங்கள் இனத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை இஸ்மாயீலுக்கு மணமுடித்து வைத்தார்கள். அவர்களுக்கு, பன்னிரெண்டு ஆண் மகன்கள் பிறந்தனர். நபி இஸ்மாயீல் (அலை) அவர்களின் மகன்களில் ஒருவரான கைதாரின் சந்ததியில் வந்தவர்கள் அத்னானிய அரபியர்கள். நபி முஹம்மது (ஸல்) அவர்களின் வம்ச தலைமுறையில் அத்னான் என்பவர் இருபத்தியோராவது தலைமுறை பாட்டனாராவார். 

    இஸ்மாயீல் (அலை) அவர்கள் வாழ்ந்த காலம் வரை மக்கா நகரத்தின் தலைவராக இருந்து கஅபாவை நிர்வகித்து வந்தார்கள். அவருடைய மரணத்திற்குப் பிறகு, இஸ்மாயீல் (அலை) அவர்களின் மகன்கள் நிர்வகித்து வந்தாலும், இஸ்மாயீல் (அலை) அவர்களின் மனைவியின் தந்தை அதாவது ஜுர்ஹும் கோத்திரத்தினர் தலைமை வகித்தனர். 

    நபி ஈஸா (அலை), நபி இஸ்மாயீல் (அலை) அவர்களின் இளைய சகோதரன் இஸ்ஹாக் (அலை) அவர்களின் வழியில் ஏறக்குறைய இரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு தோன்றியவர். அப்படிப் பார்த்தால் அதுவரை ஜுர்ஹும் கோத்திரத்தினர் கிட்டத்தட்ட இரண்டாயிரத்து நூறு ஆண்டுகள் மக்காவில் இறை இல்லத்தை, தமது ஆதிக்கத்தில் வைத்திருந்தனர். ஜுர்ஹும் கோத்திரத்தினரின் நிலைமை மக்காவில் பொருளாதாரத்தில் மோசமடைந்ததால் கஅபாவை வழிபட வந்தவர்களிடம் வழிப்பறிச் செய்ய ஆரம்பித்தனர். இச்செயல் அத்னானியர்களுக்கு மிகுந்த வெறுப்பை உண்டாக்கியதால் அவர்கள் மீது போர் தொடுத்து அவர்களை மக்காவிலிருந்தே வெளியேற்றினர். மீண்டும் மக்காவை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். 

    ஜுர்ஹும் கோத்திரத்தினர் யமன் நாட்டுக்குக் குடிபெயர்ந்தனர். அவர்கள் போகும் முன்பு ஸம்ஸம் கிணற்றில் தங்க மான் சிலைகளையும், அஸ்வத் கல்லையும் போட்டு அது இருந்த இடம் தெரியாமல் மூடிவிட்டனர். 

    அத்னான் குடும்பத்தில் வந்த மஅதின் மகன் நஜார் என்பவரின் மகன்களான ரபீஆ மற்றும் முழர் மூலமாகப் பல குடும்பங்களும் கோத்திரங்களும் கிளைகளாக விரிந்தன. அதில் கினான குடும்பத்தில் குறைஷியர்களில் ஹாஷிம் குடும்பத்தை இறைவன் தேர்வு செய்தான். ஹாஷிமின் மகன் தான் அப்துல் முத்தலிப், கொடுங்கோல் ஆட்சியாளர் அப்ரஹா யானைப் படையுடன் வந்தபோது சலனமில்லாமல் இறைவனிடம் பிரார்த்தித்தவர். இறைவன் கஅபாவைக் காத்து அப்ரஹாவை அழித்தான். 

    ஹுபுல் சிலையை இறைவனாக வணங்கி வந்த அப்துல் முத்தலிப்தான் மக்காவின் தலைவர்களில் ஒருவராக இருந்தார். அவருக்கு பத்து மகன்களும் ஆறு மகள்களும் இருந்தனர். 

    அப்துல் முத்தலிபின் மகன்களில் ஒருவரான அப்துல்லாஹ்வின் மகனாக நபி முஹம்மது (ஸல்) அவர்களை மனிதகுலத்தின் விடிவெள்ளியாக இறைவன் அனுப்பி வைத்தான்.

    (ஆதாரம்: சீறா இப்னு ஹிஷாம், அர்ரஹீக் அல்மக்தூம்)

    - ஜெஸிலா பானு.
    இறை இல்லத்தை அல்லாஹ்வே காத்துக் கொள்வான் என்று அப்ரஹாவிடம் சொல்லியதோடு அல்லாஹ்விடம் கஅபாவை காக்கும்படி பிரார்த்தித்தார்.
    யமன் நாட்டின் ஒரு நகரத்தின் ஆட்சியாளரான அப்ரஹா, மக்காவில் உள்ள கஅபாவிற்கு மக்கள் குவிவதைப் பொறுக்க முடியாமல், அதனைத் தகர்க்க யானைப் படையைத் திரட்டிக் கொண்டு மக்காவிற்குச் சென்றான். மக்காவின் தலைவர்களில் ஒருவரான அப்துல் முத்தலிப்பை சந்தித்தபோது, அவர் தமது ஒட்டகத்தைத் திரும்பக் கேட்டார் தவிர, கஅபாவை இடித்துவிடாதீர்கள் என்ற கோரிக்கையை வைக்கவில்லை. காரணம் அவர் திடமாக இறைவனை நம்பினார். ‘இறை இல்லத்தை’ அல்லாஹ்வே காத்துக் கொள்வான் என்று அப்ரஹாவிடம் சொல்லியதோடு அல்லாஹ்விடம் கஅபாவை காக்கும்படி பிரார்த்தித்தார்.

    ஒட்டகத்தைத் திரும்பப் பெற்றுக் கொண்டு மக்கா நகரத்திற்குத் திரும்பிய அப்துல் முத்தலிப் அவர்கள், மக்களிடம் பாதுகாப்பான இடத்திற்குச் சென்றுவிடும்படி உத்தரவிட்டார்.  

    மறுநாள் காலையில் தம் படைகளோடு அப்ரஹா மக்கா நகரத்திற்குள் நுழைந்தான். பயிற்சியளிக்கப்பட்ட யானைகளோடு கஅபாவை நெருங்கினான். மக்களைக் கொலை செய்வதோ, மக்களுக்கு இடையூறு தருவதோ அப்ரஹாவின் நோக்கமாக இல்லை. மாறாக, கஅபாவை அழிக்க வேண்டுமென்ற ஒரே குறிக்கோளோடு வந்தவன் யானைகளுக்கு ஆணையிட்டான்.

    யானைகளை முன்னேறச் சொன்னான். பயிற்சியளிக்கப்பட்ட யானைகள் முன்னேறிச் சென்று, மிக வேகமாக கஅபாவின் அருகில் வந்து அமர்ந்து கொண்டன. படை வீரர்களும் யானைப்பாகர்களும் யானைகளை எழுந்து நிற்கும்படி அடித்துத் துன்புறுத்தினர். யானைகள் இறைவனின் கட்டளைக்கு அடிபணிந்து கஅபாவை முற்றுகையிட மறுத்தன. யானைகள் எழுந்து நின்றாலும் இறை இல்லத்தை எதிர்கொள்ளவில்லை. படுத்திருந்த தலைமை யானை நிற்க மறுத்தது.

    “யானைகளை விட்டொழியுங்கள், படைவீரர்களே நாமே கஅபாவை தகர்ப்போம்” என்ற அப்ரஹாவின் கட்டளையின்படி வீரர்கள் முன்னேறினர். அப்போது திடீரென்று மேகம் சூழ்ந்தது போலிருந்தது. அப்ரஹாவும் படைவீரர்களும் மழையை எண்ணி மேலே பார்த்தனர். ஆனால் அவர்கள் கண்டதை அவர்களால் நம்ப முடியவில்லை, அது மழை மேகமல்ல, கோடிக் கணக்கான கருநிற அபாபீல் பறவைகள்.

    ஒவ்வொரு பறவையின் அலகிலும், இரு கால்களிலும் சுடப்பட்ட பொடிக் கற்கள் இருந்தன.  வானத்திலிருந்து அப்பொடிக் கற்களை, படைகள் மீது பறவைகள் எறிந்தன. மழைபோல் விழுந்த கற்கள் மேனியின் மேல் பட்டவுடன் படைவீரர்கள் சுருண்டு கீழே விழுந்து வைக்கோல்களின் சக்கைபோல்  மடிந்தனர்.

    ஆங்காங்கே மறைந்திருந்த மக்காவாசிகள் குரைஷியினர் இக்காட்சியைக் கண்டு திகைத்தனர். கஅபாவை தாக்க வந்த பெரும்படையோடு ஒப்பிடும் போது பறவைகள் மிகச் சிறிய உயிரினம். ஆயினும், எண்ணிக்கையில் அதிகமாக இருந்ததாலும், அல்லாஹ்வின் அருளாலும் அதனைக் கொண்டு எதிர்த்து, அன்று இறை இல்லம் காப்பாற்றப்பட்டது.

    யமனுக்குத் திரும்பிய பிறகு கொடுங்கோல் ஆட்சியாளரான அப்ரஹாவை அல்லாஹ் அழித்தொழித்தான்.

    ஹிஜ்ராவை அடிப்படையாகக் கொண்டு இஸ்லாமிய ஆண்டு முறையை அமல்படுத்தும் வரை, அரேபியர்கள் இந்த நிகழ்ச்சியினை `யானைகளின் ஆண்டு` என்று காலக்கணக்கை வைத்திருந்தனர்.

    திருக்குர்ஆன் 105:1-5

    - ஜெஸிலா பானு
    கஅபா என்பது ‘இறை இல்லம்’ அதற்கான உடைமைக்குரியவன் அல்லாஹ். அவன் அதனைக் காத்துக் கொள்வான், எல்லாவற்றையும் பார்த்துக் கொள்வான்.
    யமன் நாட்டில் ஒரு நகரத்தை ஆட்சி செய்து வந்த அப்ரஹா என்பவன் மக்காவில் அமைந்துள்ள கஅபாவின் மீது பொறாமை கொண்டான். இப்ராஹிம் (அலை) மற்றும் இஸ்மாயீல் (அலை) அவர்கள் சொல்லித் தந்து போயிருந்த அதே வழிமுறையைப் பல தலைமுறைகளுக்குப் பிறகும் மக்கள் தொடர்ந்து கடைப்பிடித்து `ஹஜ்` செய்து வருவதை வெறுத்தான் அப்ரஹா.

    மக்காவில் உள்ள கஅபாவிற்குக் குவியும் மக்களைத் தம் பக்கம் திருப்ப எண்ணித் திட்டம் தீட்டினான். தன் நகரத்தில் மிகுந்த வேலைப்பாடுகள் நிறைந்த அழகிய வடிவமைப்பில் ஒரு பிரமாண்டமான தேவாலயத்தை எழுப்பினான். மக்களைக் கவரும் வகையில் அந்த ஆலயத்தை விலை மதிப்பற்ற கற்களைக் கொண்டு நிறுவினான். கண்கவர் வண்ணங்களைத் தீட்டி அதன் அழகைக் கூட்டினான். மக்களும் அங்குச் செல்ல ஆரம்பித்தனர். அந்த ஆலயத்தைக் கண்டு வியந்தனர். அதனைச் சுற்றிப் பார்த்து வர்ணித்தனர். ஆனாலும், யமனுக்கு ஆலயத்தைப் பார்க்கச் சென்றவர்களும் மக்காவிலுள்ள கஅபாவிற்கே யாத்திரை சென்று `ஹஜ்` செய்தனர்.

    மக்கள் மக்காவிற்குச் சென்று ஹஜ் செய்யக் கூடாதென்பதற்காகவே பிரமாண்ட ஆலயத்தை எழுப்பியிருந்த கெட்ட குணம் கொண்ட அப்ரஹா, மக்கள் `ஹஜ்` செய்வதையும் கஅபாவிற்குத் தொடர்ச்சியாகச் செல்வதையும் தடுத்து நிறுத்த முடியாததை எண்ணி மனம் வெதும்பினான்.

    நேரடியாக மக்காவிற்குப் படையெடுத்துச் சென்று கஅபாவை இடித்துவிட வேண்டுமென்று முடிவெடுத்தான். அதற்கான படைகளைத் திரட்டினான். அவன் படை தயார் நிலையில் இருந்தது. படைவீரர்கள் தேவையான ஆயுதங்களையும் ஒட்டகங்களையும் மக்காவாசிகளிடமிருந்தே வாங்கி, தங்கள் படைக்கு பலம் சேர்த்திருந்தனர். படையில் சேர்க்கப்பட்ட ஒட்டகங்கள் மக்காவைச் சேர்ந்த அப்துல் முத்தலிபிற்குச் சொந்தமானது.

    மக்காவை நோக்கிப் படையுடன் நகர்ந்தான் அப்ரஹா. அந்தப் படையில் மிகப் பெரிய யானையும் இருந்தது. மக்காவிற்கு அருகில் மாபெரும் கூடாரம் அமைத்து, தம் படையினரோடு தங்கியிருந்தான் அப்ரஹா. மக்காவின் முக்கியத் தலைவரோடு தாம் பேச வேண்டுமென்று அழைப்புவிடுத்திருந்தான் அப்ரஹா.

    மக்காவின் தலைவராக விளங்கிய அப்துல் முத்தலிப் இன்னும் இரண்டு தலைவர்களுடன் அப்ரஹாவை சந்தித்தார்கள். அவர்களைப் பார்த்ததும் இனம் புரியாத மரியாதையோடு மிகப் பவ்யமாக நடந்து கொண்டான் அப்ரஹா. தன்னிடமிருப்பதிலிருந்து ஏதேனும் அவர்களுக்கு வேண்டுமா என்று அப்ரஹா கேட்டான்.

    அதற்கு அப்துல் முத்தலிப் “தங்களின் படை வீரர்கள் என்னுடைய இருநூறு ஒட்டங்களை எடுத்துச் சென்றுவிட்டனர். அதனைத் திருப்பிக் கொடுத்துவிடுங்கள்” என்று கேட்டார். அதைக் கேட்டு மிகுந்த ஆச்சர்யத்துடன் அப்ரஹா, “அவ்வளவுதானா? நான் நீங்கள் உங்கள் மக்களின் நலம் விரும்பி என்று உங்களைத் தவறாக நினைத்துவிட்டேன். நான் கஅபாவை அழிக்க வந்துள்ளேன், நீங்கள் அதனைக் காக்க வந்தவராகத் தெரியவில்லை, மாறாக உங்கள் ஒட்டகங்களை அல்லவா கேட்கிறீர்கள்?” என்று ஏளனமாகப் பேசினான்.

    அதற்கு அப்துல் முத்தலிப் அவர்கள் “நான் ஒட்டகங்களின் உரிமையாளர், அதனைக் காக்கும் பொறுப்பு எனக்குள்ளது. அதனால்தான் நான் எனக்குரியதை மட்டும் கேட்கிறேன். கஅபா என்பது ‘இறை இல்லம்’ அதற்கான உடைமைக்குரியவன் அல்லாஹ். அவன் அதனைக் காத்துக் கொள்வான், எல்லாவற்றையும் பார்த்துக் கொள்வான்” என்று உறுதி்பட யாரும் எதிர்பார்த்திராத பதிலைத் தந்தார்.

    வாயடைத்த அப்ரஹா ஒட்டகங்களை அப்துல் முத்தலிப்புக்குத் திருப்பித் தந்துவிட்டான்.

    - ஜெஸிலா பானு
    அப்ரஹா மக்காவில் உள்ள கஅபாவிற்குக் குவியும் மக்களைத் தன் பக்கம் திருப்ப எண்ணித் திட்டம் தீட்டினான்.
    'அரப்’ என்ற சொல்லுக்குப் பாலைவனம், புற்பூண்டு முளைக்காத வறட்சியான இடம் எனப் பொருள் வருகிறது. அந்தக் காலத்திலேயே அரேபிய தீபகற்பத்தில் இருந்தவர்களை ‘அரப்’ ‘அரபி’ என்றே அழைக்கப்பட்டார்கள்.

    இன்றைய சவூதி அரேபியாவான அந்த இடத்தின் மேற்கே செங்கடலும், கிழக்கே அரேபிய வளைகுடாவும், வடக்கே சிரியா என்னும் ஷாம் தேசம், வட-கிழக்கில் ஈராக், தெற்கே அரபிக் கடல் இந்தியப் பெருங்கடல் வரையிலும் பரந்துள்ளது.

    புவியியல் ரீதியாக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததான இந்த அமைப்பின் காரணமாகவே அரேபிய தீபகற்பத்தை வெளிநாட்டவர்கள் ஆதிக்கம் செலுத்த முடியாதபடி இருந்தனர். அப்படியே ரோம்- பாரசீகம் வல்லரசுகள் அரேபிய தீபகற்பத்தில் ஆதிக்கம் செலுத்த முடியாதபடியே அப்பகுதியின் புவியியல் அமைப்பு அமைந்திருந்தாலும், அரேபியர்களுக்குள்ளே ஏற்பட்ட உள்நாட்டு குழப்பங்களையும், சண்டைகளையும் பயன்படுத்தி ரோமானியர்களும் பாரசீகர்களும் அங்கு சில பகுதிகளைக் கைப்பற்றினர்.

    ஆப்பிரிக்கா, ஐரோப்பியா, ஆசியா என்று எல்லாக் கண்டங்களும் கடல் வழியாக அரேபிய தீபகற்பத்துடன் இணைவதால் அப்பகுதி பண்பாடு, கலை மற்றும் வியாபாரப் பரிமாற்றங்களின் மையமாக இருந்து வந்தது.

    அவர்கள் ஒற்றுமையின்றிப் பலவாறாகப் பிரிந்து வாழ்ந்தனர். அல்லாஹ்வை நினைக்காமல், நன்றி செலுத்தாமல் பாவங்கள் புரிந்தனர். மிகப் பெரிய வெள்ளப்பிரளயம் ஏற்பட்டு நகரங்கள் சேதம் அடைந்ததால் மக்கள் பல இடங்களுக்குச் சென்று குடியேறினர்.

    ஈஸா (அலை) அவர்களின் காலத்திற்குப் பிறகும், அவர்கள் போதித்துச் சென்ற ஏகத்துவத்தைப் பின்பற்றி ஓரிறைக் கொள்கையில் இருந்தவர்களின் மீது யமன் நாட்டை ஆட்சி செய்த யூதக் கொடுங்கோல் மன்னனின் ஆணையின் பேரில் தாக்குதல் நடந்தது. அவர்களை அக்கொள்கையைக் கைவிடும்படி யூதர்கள் வற்புறுத்தினர். இறைவன் ஒருவனே என்று துதித்துக் கொண்டிருந்த கிறிஸ்தவர்களை யூதர்கள் அகழிகளைத் தோண்டி, அதில் நெருப்புக் குண்டத்தை வளர்த்து, அதனுள் அவர்களை உயிருடன் போட்டு எரித்தனர்.

    இதைக் கேள்விப்பட்ட மற்ற நாட்டில் இருக்கும் கிறிஸ்தவர்கள் ரோமானிய அரசர்களின் ஆதரவுடன் யமன் நாட்டை முற்றுகையிட்டனர். ஆப்பிரிக்க நாடான ஹபஷாவின் பொறுப்பில் இருந்த அர்யாத் என்பவர் மிகச் சாமர்த்தியமாக யமன் நாட்டைக் கைப்பற்றினார். அர்யாத்தின் தளபதிகளில் ஒருவனான அப்ரஹா மிகத் தந்திரமாக அர்யாத்தையே கொலை செய்துவிட்டுப் பொறுப்பில் அமர்ந்தான்.

    யமனின் ஒரு நகரத்தை தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்த அப்ரஹா, மக்காவில் கஅபாவிற்கு மக்கள் குவிவதும், இப்ராஹிம் (அலை) மற்றும் இஸ்மாயீல் (அலை) அவர்கள் சொல்லித் தந்து போயிருந்த அதே வழிமுறையைப் பல தலைமுறைகளுக்குப் பிறகும் தொடர்ந்து கடைப்பிடித்து `ஹஜ்` செய்தும் வந்தவர்களை வெறுத்தான். மக்காவில் உள்ள கஅபாவிற்குக் குவியும் மக்களைத் தன் பக்கம் திருப்ப எண்ணித் திட்டம் தீட்டினான்.

    நயவஞ்சகம் செய்பவர்களுக்கும், பொறாமை கொள்பவர்களுக்கும் வெற்றி கிடைப்பதில்லை.

    திருக்குர்ஆன் 25:18, 85:4-7

    - ஜெஸிலா பானு.

    இஸ்லாம் என்பது ஐந்து தூண்களின் மீது எழுப்பப்பட்டுள்ளதாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வாறு எடுத்துரைக்கிறார்கள்.
    இஸ்லாம் என்பது ஐந்து தூண்களின் மீது எழுப்பப்பட்டுள்ளதாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வாறு எடுத்துரைக்கிறார்கள்:

    ‘இஸ்லாம் ஐந்து தூண்களின் மீது (அதன் கூடாரம்) அமைக்கப்பட்டிருக்கிறது. அவை: 1. வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு எந்தக் கடவுளும் இல்லை. மேலும் முகம்மது நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அடியாராகவும், அவனின் திருத்தூதராகவும் இருக்கிறார்கள் என சாட்சியம் கூறுவது. 2. தொழுகையை தவறாமல் தொழுது வருவது. 3. புனித ரமலானில் நோன்பு நோற்பது. 4. கடமையான ஜகாத்தைக் கொடுத்து வருவது. 5. ஹஜ் செய்வது,

    இவ்வாறு நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: இப்னு உமர் (ரலி), புகாரி, முஸ்லிம்)

    மேற்கூறப்பட்ட இஸ்லாமிய அடிப்படையான ஐந்து கடமைகளும், ஐந்துவிதமான தத்துவங்களை எடுத்துரைக்கிறது. அந்த தத்துவங்கள் வருமாறு:-

    ‘கலிமா’: ‘ஒன்றே குலம்; ஒருவனே தேவன்’ எனும் உயர்ந்த இறை கோட்பாட்டை நினைவு கூர்கிறது.

    ‘தொழுகை’: ஆடம்பர வாழ்க்கையின் ஆதாரத்தைத் தேடுவதில் இருந்து ஆன்மாவைக் கட்டுப்படுத்தாத வரை தொழுகையை நிறைவு செய்ய முடியாது. தொழுகை ஆன்மாக் கட்டுப்பாட்டை நினைவு கூர்கிறது.

    ‘ஜகாத்’: சேமித்து வைத்துள்ள பொருளின் மீதுள்ள பற்றைத் துறக்காத வரை ஜகாத்தை நிறைவேற்ற முடியாது. ‘ஜகாத்’ என்பது பணப்பற்றை துறப்பதை நினைவு கூர்கிறது.

    ‘நோன்பு’: மனோ இச்சைகளைக் கட்டுப்படுத்தாத வரை நோன்பை நோற்க முடியாது. நோன்பு மனக்கட்டுப்பாட்டை நினைவு கூர்கிறது.

    ‘ஹஜ்’: வீடு, வாசல், மனைவி, மக்கள், நிலபுலன்கள் போன்றவற்றின் ஆசைகளை அடக்கிக் கொள்ளாத வரை ஹஜ்ஜை பூர்த்தி செய்ய முடியாது. ‘ஹஜ்’ என்பது அனைத்துவிதமான ஆசைகளையும் துறந்து விடும் தியாகத்தை நினைவு கூர்கிறது.

    இஸ்லாமிய ஐந்து கடமைகளும் ஐந்துவிதமான அம்சங்களை எடுத்துரைத்தாலும் அடிப்படை அம்சமாக உள்ள ‘ஒற்றுமை’யை இதில் வலியுறுத்துகிறது.

    ‘லாயிலாஹ இல்லல்லாஹ்’ என்று கூறுவதன் மூலம் அனைத்து முஸ்லிம்களும் ஒரே குடையின் கீழ் ஒன்றுபடுகிறார்கள். ‘அல்லாஹ் தான் ஒரே இறைவன்; நாம் அனைவரும் அவனது அடிமைகள்’ என்ற வார்த்தை இனவாதம், நிறவாதம், மொழிவாதம், சாதிவாதம், மதவாதம் போன்ற அனைத்து வெறிகளையும் தவிடு பொடியாக்கி தகர்த்து விடுகிறது.

    தொழுகை என்பது அந்தந்த ஊரில் வசிக்கும் மக்களை ஐந்து வேளை ஒன்று திரட்டி, ஒரே அணியாக நிற்பதற்கு பயிற்சி கொடுத்து ஒற்றுமையை மென்மேலும் ஓங்கச் செய்கிறது. தொழுகைக்காக அணி வகுத்து வரிசையாக நிற்கும்போது வெள்ளைத் தோலும், கருப்புத் தோலும், முதலாளியின் காலும், தொழிலாளியின் காலும் ஒன்று சேர்கிறது. ஏழையின் தோளும், பணக்காரரின் தோளும் ஒன்றுபடுகிறது.

    “நீங்கள் உங்களின் தொழுகையின் வரிசைகளை சரி சமமாகச் சீர்படுத்திக் கொள்ளுங்கள். இல்லையென்றால், அல்லாஹ் உங்களுக்கு மத்தியில் விரோதத்தையும், குரோதத்தையும் ஏற்படுத்தி விடுவான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

    மக்காவில் ஹஜ்ஜுக்காக ஒன்று கூடும்போது, புனித ஹரமும், அரபா மைதானமும், முஸ்தலிபா எனும் திடலும், மினா எனும் பரந்த கூடாரங்களும் அனைத்து நாட்டவரையும், அனைத்து நிறத்தவரையும், அனைத்து மொழியினரையும் ஒன்று திரட்டி உலக மகா ஒற்றுமையை ஒவ்வொரு ஆண்டும் புனித ஹஜ் ஏற்படுத்தி பிரமிக்க வைக்கிறது. இத்தகைய ஒற்றுமையைத்தான் முஸ்லிம்களையும் தாண்டி அகில உலக மக்களிடமும் இஸ்லாம் எதிர்நோக்குகிறது.

    “நிச்சயமாக உங்கள் சமுதாயம் (வேற்றுமை ஏதுமில்லா) ஒரே சமுதாயம்தான். மேலும் நானே உங்கள் இறைவன்; ஆகையால் என்னையே நீங்கள் வணங்குங்கள்” என்கிறது திருக்குர்ஆன். (21:92)

    “படைப்பினங்கள் அனைத்தும் இறைவனின் குடும்பம் ஆகும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அனஸ் (ரலி)

    கலிமாவில் இருந்து ஹஜ் வரைக்கும் ஊர் ஒற்றுமையில் இருந்து உலக ஒற்றுமை வரைக்கும் போதிக்கிறது. இஸ்லாம் கூறும் ஒற்றுமை என்பது ஒரு மதம் சார்ந்த ஒற்றுமை இல்லை. அனைத்து மதத்தினரும் ஒன்றுபட்டு வாழும் ஒற்றுமையைத்தான் இஸ்லாம் எதிர்பார்க்கிறது.

    இதையே திருக்குர்ஆன் வசனங்கள் இவ்வாறு கூறுகிறது:

    “மனிதர்களே! உங்கள் இறைவனுக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள். அவன் உங்கள் யாவரையும் ஒரே ஆத்மாவில் இருந்து படைத்தான். அவரில் இருந்து அவர் மனைவியையும் படைத்தான். பின்னர் இவ்விருவரில் இருந்து அநேக ஆண்களையும், பெண்களையும் (வெளிப்படுத்தி உலகில்) பரவச் செய்தான்” (4:1).

    “மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண், பெண்ணில் இருந்தே படைத்தோம். நீங்கள் ஒருவரையொருவர் அறியும் பொருட்டு பின்னர் உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம். உங்களில் எவர் மிகவும் பயபக்தியாளராக உள்ளாரோ அவர்தாம் அல்லாஹ்விடம் மிக்க கண்ணியமானவர். நிச்சயமாக அல்லாஹ் நன்கறிபவன். மிகத் தெரிந்தவன்” (49:13).

    “நீங்கள் ஒருவருக்கொருவர் உறவை முறித்துக் கொள்ள வேண்டாம்; ஒருவருக்கொருவர் முதுகைத் திருப்பிக் கொள்ள வேண்டாம்; ஒருவருக்கொருவர் குரோதம் கொள்ள வேண்டாம்; ஒருவருக்கொருவர் பொறாமைப்பட வேண்டாம். அல்லாஹ்வின் அடியார் களாகிய நீங்கள் சகோதரர்களாக ஆகி விடுங்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

    மேலும், “ஒரு முஸ்லிம் தமது சகோதரனை மூன்று நாட்களுக்கு மேல் வெறுப்பது அவருக்கு ஆகுமாகாது” என்றும் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அனஸ் (ரலி) அவர்கள்)

    மனிதனுக்கு பலமே ஒற்றுமைதான். ஒன்றுபட்டால் நன்றாக வாழலாம். ஒற்றுமை சீர் குலைந்தால் நிம்மதியாக வாழ முடியாது. உலகம் என்பது வாழ்க்கை களம். இது வாழ்வதற்கு, வீழ்வதற்கு அல்ல. வாழ்வதற்கு வழி ஒற்றுமையில் உள்ளது. வீழ்வதற்கு வழி சண்டை சச்சரவில் உள்ளது.

    இஸ்லாத்தின் அனைத்து வழிபாடு முறைகளும் ஒற்றுமையை அடிப்படையாகக் கொண்டுதான் அமைக்கப்பட்டு நிறைவேற்றப்படுகிறது.

    இது ஹஜ்ஜுடைய காலம். ஹஜ்ஜின் அனைத்து நடவடிக்கைகளும் ஒற்றுமையை மையமாக வைத்து கடைப்பிடிக்கப்படுகிறது. இத்தகைய ஒற்றுமையை இஸ்லாமிய வணக்க வழிபாடுகளும் குறிப்பாக ஹஜ்ஜும் உலக மக்களுக்குக் கற்றுக்கொடுக்கிறது. முஸ்லிம்கள் அனைவரும் உலகளாவிய ஒற்றுமைக்காக குரல் கொடுக்க வேண்டும்; பாடுபட வேண்டும்.

    - மவுலவி அ.செய்யது அலி மஸ்லஹி,

    பாட்டப்பத்து, திருநெல்வேலி டவுண்.
    பெரியபட்டணம் மகான் செய்யது அலி ஒலியுல்லாஹ் தர்கா மத நல்லிணக்க சந்தனக்கூடு திருவிழாவை முன்னிட்டு நாளை 9-ந்தேதி கொடியேற்றம் நடைபெறுகிறது.
    ராமநாதபுரம் மாவட்டம் பெரியபட்டணத்தில் மகான் செய்யது அலி ஒலியுல்லாஹ் தர்கா உள்ளது. ஆண்டுதோறும் இங்கு சந்தனக்கூடு திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். அதன்படி 115-வது ஆண்டு சந்தனக்கூடு திருவிழா நாளை மாலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    வரும் 19-ந்தேதி சந்தனக் கூடு திருவிழா, 20-ந்தேதி பகல்கூடு, செப்.30-ந்தேதி கொடியிறக்கத்துடன் விழா நிறைவடைகிறது. இதில் அனைத்து சமூகத்தை சேர்ந்த மக்களும் கலந்து கொள்வதால் மத நல்லிணக்க விழாவாக நடத்தப்படுகிறது.

    விழா ஏற்பாடுகளை கமிட்டி தலைவர் செய்யது இபுராம்சா, தொழில் அதிபர் சிங்கம் பஷீர், ஊராட்சி தலைவர் எம்,எஸ்.கபீர், ஊராட்சி துணைத் தலைவர் ராஜேந்திரன், கமிட்டி துணைத் தலைவர்கள் சிராஜ்தீன், சாகுல் ஹமீது, செயலாளர் கவுன்சிலர் அபிபுல்லா, முத்தரையர் நகர் கோவிந்தன், தங்கையா நகர் சுந்தரலிங்கம், சுல்தான், சதக், களஞ்சியம், சாகுல் ஹமீது, கமிட்டி ஒருங் கிணைப்பாளர் அப்துல் மஜீது மற்றும் சுல்தானியா சங்க நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
    ×