என் மலர்

  ஆன்மிகம்

  இஸ்லாம் வழிபாடு
  X
  இஸ்லாம் வழிபாடு

  நடப்பவை எல்லாம் நன்மைக்கே

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நடப்பதெல்லாம் நன்மைக்கே என்ற நம்பிக்கையில் உறுதியோடு நிலைத்து இருந்தால் பாறை போன்று கடுமையாய் வந்ததெல்லாம் பனித்துளிகள் போல் நீங்கி விடும்.
  உலகில் வாழும் உயிரினங்கள் அனைத்தையும் படைத்தவன் அல்லாஹ். மனிதனை தன்னுடைய அடியானாக படைத்தது மட்டுமல்லாமல், அவனை சுற்றி சூழ்ந்த அத்தனையுமே மனிதனின் பயன்பாட்டிற்காக உருவாக்கினான்.

  தனக்கு நிகழ்கின்ற நன்மை-தீமை எதுவாகிலும் அது அல்லாஹ்வின் புறத்திலிருந்து வருகின்றது என்பதை மனிதன் நம்புவதே இறையச்சத்தின் அடையாளம். அந்த உறுதி ஏற்படும் போது மனிதன் எதற்காகவும் அச்சப்படத் தேவையில்லை. இதையே திருக்குர்ஆன் இவ்வாறு குறிப்பிடுகிறது:

  “ஏதேனும் துன்பத்தை அல்லாஹ் உமக்குக் கொடுத்தால், அதனை அகற்றுபவர் அவனைத் தவிர வேறு யாரும் இல்லை. மேலும், உமக்கு ஏதேனும் நன்மை அளிக்க அவன் நாடினால், அவனுடைய அருளைத் தடுப்பவரும் யாரும் இல்லை. தன்னுடைய அடியார்களில், தான் நாடுபவருக்குத் தன் அருளை அவன் வழங்குகின்றான். மேலும், அவன் மாபெரும் மன்னிப்பாளனாகவும் பெருங்கருணையாளனாகவும் இருக்கின்றான்”. (திருக்குர்ஆன் 10:107).

  அதேநேரத்தில் “எந்த மனிதனையும் அதிகமாக சோதிக்கமாட்டேன்” என்றும் இறைவன் திருக்குர்ஆனில் குறிப்பிட்டுள்ளான்.

  “நாம் எந்த ஆத்மாவையும் அதன் சக்திக்கு மீறி கஷ்டப்படுத்துவதில்லை”. (திருக்குர்ஆன் 6:152).

  சிலருக்கு பல திசையிலிருந்தும் பிரச்சினைகள் வந்து கொண்டே இருக்கும். அதில் இருந்து மீண்டுவரவும் வழி உள்ளது. இதையே, “பொறுமையைக் கொண்டும் தொழுகையைக் கொண்டும் அல்லாஹ்விடம் உதவி தேடுங்கள்” என்று திருக்குர்ஆனில் (2:153) குறிப்பிடுகின்றான்.

  தனக்கு ஏற்படும் கஷ்டங்களையும், சோதனைகளையும் பொறுமையுடன் ஏற்றுக் கொள்பவர்களை அல்லாஹ் நேசிக்கின்றான். அதன்பொருட்டு இம்மையிலும் மறுமையிலும் நன்மைகளை அள்ளி வழங்க காத்திருக்கின்றான்.

  எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வு உண்டு, அதற்காகவே அல்லாஹ் ‘துவா’ (பிரார்த்தனை) என்ற கவசத்தை நமக்கு வழங்கியுள்ளான். நமக்கெல்லாம் வழிகாட்டியாக வந்த நபிமார்களும் தங்கள் வாழ்வில் பல்வேறு சோதனைகளை சந்தித்தவர்கள் தான். அவற்றிலிருந்து மீள்வதற்கு துஆவையும் அவர்களுக்கு கற்றுக் கொடுத்துள்ளான்.

  ஐயுபு நபி (அலை) அவர்கள் கடுமையான நோயினால் பாதிக்கப்பட்டார்கள். “யாஅல் லாஹ் நிச்சயமாக என்னை நோய் பீடித்துள்ளது அதை நீக்கி விடு. நீ கிருபையாளருக்கெல்லாம் மகா கிருபையாளன்” (திருக்குர்ஆன் 21:83) என்று துஆச் செய்தார்கள், இறையருளால் நலம் அடைந்தார்கள்.

  நபி யூனுஸ் (அலை) மீன் வயிற்றில் கடும் இருட்டில் மாட்டிக் கொண்டார்கள். தப்பிப்பதற்கு வழியே இல்லை, இருந்தும் நம்பிக்கை இழக்கவில்லை. “எங்களின் இறைவா! வணக்கத்திற்குரிய இறைவன் உன்னைத்தவிர வேறு யாருமில்லை. நீயோ மிகப் பரிசுத்தமானவன், என்னை மன்னித்து அருள்புரிவாயாக” (திருக்குர்ஆன் 21:87) என்று இரு கரம் ஏந்தி துஆ செய்தார்கள். இறையருளால் அவர்கள் கடற்கரையில் கொண்டு வந்து விடப்பட்டார்கள்.

  எத்தனைப்பெரிய நெருக்கடிகள் இருந்தாலும், நாம் நினைத்தறியாத திசைகளிலிருந்து அல்லாஹ் உதவி செய்வான், என்ற நம்பிக்கையில் துஆ செய்தால் நிச்சயமாக வழி பிறக்கும். அது நம்பிக்கையின் உறுதித்தன்மையை பொறுத்தே அமையும்.

  நோய், வறுமை, கடன், மற்றும் பிரச்சினைகள் எல்லாம் இறைவன் விதித்தபடியே நடந்தது என்று நம்ப வேண்டும். அந்த நம்பிக்கை, மன அழுத்தங்களை நம்மை விட்டும் தூரமாக்கும்.

  நடப்பதெல்லாம் நன்மைக்கே என்ற நம்பிக்கையில் உறுதியோடு நிலைத்து இருந்தால் பாறை போன்று கடுமையாய் வந்ததெல்லாம் பனித்துளிகள் போல் நீங்கி விடும். தொடர்ந்து மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கும். காலம் மனதிற்கு ஆறுதலைத் தந்து, மகிழ்ச்சியில் திளைக்க வைக்கும்.

  நம்பிக்கையோடு காத்திருப்போம், எல்லா நிலைகளிலும் இறைவனிடம் கையேந்துவோம், ஈருலக நன்மைகள் அனைத்தும் பெற்றுக்கொள்வோம்.

  “மன அழுத்தங்களை மறப்போம், மனமகிழ்ச்சியை மனதில் நிறைப்போம்”.

  மு. முகமது யூசுப், உடன்குடி.
  Next Story
  ×