search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    இறையருள் மீது நம்பிக்கை கொள்வோம்
    X
    இறையருள் மீது நம்பிக்கை கொள்வோம்

    ரமலான் நோன்பின் மகத்துவங்கள்: இறையருள் மீது நம்பிக்கை கொள்வோம்

    30 நாட்கள் கொண்ட ரமலான் மாதம் மூன்று பத்துகளாக பாகம் பிரிக்கப்படுகின்றது. அவற்றில் முதல் பத்து நாட்கள் ‘இறையருள்’ நிறைந்தவையாக கருதப்படுகிறது என்பது நபி (ஸல்) அவர்களின் வாக்கு.
    மகத்துவமிக்க ரமலானுக்கு ‘ஷஹ்ருர் ரஹ்மத்’ - ‘இறையருள் மிக்க மாதம்’ எனும் தத்துவப் பெயரும் உண்டு. 30 நாட்கள் கொண்ட ரமலான் மாதம் மூன்று பத்துகளாக பாகம் பிரிக்கப்படுகின்றது. அவற்றில் முதல் பத்து நாட்கள் ‘இறையருள்’ நிறைந்தவையாக கருதப்படுகிறது என்பது நபி (ஸல்) அவர்களின் வாக்கு.

    இயற்கையாகவே இறையருள், என்றும் எப்போதும் நிறைந்தே காணப்படுகிறது. இறைவனும் திருக்குர்ஆனில் அவ்வாறுதான் தன்னை அறிமுகம் செய்கின்றான்:

    ‘அவன் (அல்லாஹ்) அளவற்ற அருளாளன்; நிகரற்ற அன்பாளன்’. (திருக்குர்ஆன் 1:2)

    ஒரு தாய் தன் குழந்தையின் மீது செலுத்தும் அன்பு, கருணையை விட எழுபது மடங்கு அன்பையும், கருணையையும், இறைவன் தமது அடியார்கள் மீது பொழிகின்றான். இதற்கு சான்றாக, தன்னை ஏற்க மறுக்கும் மனிதர்களுக்குக் கூட அல்லாஹ் வாழ்வாதாரத்தை வழங்கி, அவர்கள் மீது அருள்மழை பொழிவதை காணலாம்.

    ‘ஒரு இறை மறுப்பாளர் இறைவனின் வற்றாத கருணையை அறிந்தால், எந்த ஒருவரும் இறையருள் குறித்து நிராசை அடையமாட்டார் என நபி (ஸல்) கூறினார்கள்’ (அறிவிப்பாளர்: அபூஹூரைரா (ரலி), நூல்: முஸ்லிம்)

    இறையருள் குறித்து யாரும் வாழ்வில் நிராசை அடையக்கூடாது என திருக்குர்ஆன் பின்வருமாறு அறிவுறுத்துகிறது:

    ‘என் அடியார்களே! (உங்களில்) எவரும் வரம்பு மீறி தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்ட போதிலும், இறைவனுடைய அருளில் நீங்கள் நம்பிக்கை இழக்க வேண்டாம். நிச்சயமாக இறைவன் பாவங்கள் யாவையும் மன்னிப்பான். நிச்சயமாக அவன் மிக்க மன்னிப்பவன்; மிக்க கருணையுடையவன் (என்று நான் கூறியதை நபியே!) நீர் கூறுவீராக’. (திருக்குர்ஆன் 39:53)

    இந்த அடிப்படையில் ரமலானின் முதல் பத்தில் இறையருள் அதிகம் இறங்குகிறது. அதை அடைவதற்கு சிறந்த பிரார்த்தனைகள் மூலம் நாம் முயற்சி செய்ய வேண்டும்.

    முற்காலத்தில் பாவச் செயல்களால் ஒருவர் தமக்குத் தாமே எல்லை மீறி நடந்தார். அவருக்கு மரண வேளை வந்தபோது, தம் புதல்வர்களிடம் இறுதி ஆசையை தெரிவித்தார்.

    ‘நான் இறந்ததும் என்னை எரித்துத் தூளாக்கி, பிறகு கடலில், காற்றில் தூற்றுங்கள். இறைவன் மீதாணை! என் மீது என் இறைவனுக்குச் சக்தியேற்பட்டால் எவரையும் வேதனை செய்யாத அளவுக்கு எனக்கு அவன் வேதனை அளிப்பான்’ என்றார்.

    தந்தை கூறியபடி புதல்வர்களும் செய்தனர்.

    பிறகு இறைவன் பூமியை நோக்கி, ‘நீ எடுத்ததை கொடுத்துவிடு’ என்று கட்டளையிட்டான்.

    அப்போது அந்த மனிதர் முழுவடிவில் இறைவனிடம் நின்றார்.

    ‘நீ இப்படிச் செய்ய என்ன காரணம்?’ என விசாரித்தான்.

    ‘இறைவா, உன் மீதான அச்சம் தான்’ என்று பதிலளித்தார்.

    இறைவன் அவரை மன்னித்தான்.

    ‘ஒரு பெண் ஒரு பூனையை அது சாகும் வரை (பட்டினி போட்டு) கட்டி வைத்த காரணத்தால் நரகத்தில் நுழைந்தாள்’ என நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூஹூரைரா (ரலி), புகாரி)

    ‘எந்த மனிதரும் முதல் நபரைப் போன்று இறையருள் மீது அவநம்பிக்கை கொள்ளக்கூடாது. மேலும், எவரும் இரண்டாம் நபரைப் போன்று இறையருளை முழுவதுமாக நம்பி நல்லறங்கள் செய்யாமல் இருந்து விடக்கூடாது’ என ஸூஹ்ரீ (ரஹ்) கூறுகிறார்.

    மவுலவி அ. செய்யது அலி மஸ்லஹி, பாட்டப்பத்து, திருநெல்வேலி டவுண்.

    இப்தார்: மாலை 6.37 மணி

    நாளை சஹர் முடிவு: அதிகாலை 4.37 மணி
    Next Story
    ×