search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    இஸ்லாம் வழிகாட்டும் ஆரோக்கிய உணவுகள்
    X
    இஸ்லாம் வழிகாட்டும் ஆரோக்கிய உணவுகள்

    இஸ்லாம் வழிகாட்டும் ஆரோக்கிய உணவுகள்

    மனிதர்களின் ஊட்டச்சத்து குறையாமல் சமமான நிலையில் இருக்க, உணவுகளை இரண்டு வகையாக இஸ்லாம் பிரிக்கின்றது . 1) ஹலால் (சாப்பிட அனுமதிக்கப்பட்ட தூய்மையான உணவு). 2) ஹராம் (சாப்பிட அனுமதிக்கப்படாத தூய்மையற்ற உணவு)
    உலகம் அமைதியாக இயங்க அவசிய மானது வலுவான, தரமான மனித வளம். அந்த மனித வளத்தின் ஆதாரமே ‌ஆரோக்கியமான உணவுகள்தான். மனித வள மேம்பாட்டிற்குச் சாதகமான சூழ்நிலை அமைய முதல் காரணிகளான உணவு முறைகளை‌ இஸ்லாம் அனுமதிக்கிறது. அதுபோல மனித ஆரோக்கியத்தை அச்சுறுத்தும் உணவு முறைகளை‌த் தடுக்கிறது இஸ்லாம்.

    மனிதர்களின் ஊட்டச்சத்து குறையாமல் சமமான நிலையில் இருக்க, உணவுகளை இரண்டு வகையாக இஸ்லாம் பிரிக்கின்றது . 1) ஹலால் (சாப்பிட அனுமதிக்கப்பட்ட தூய்மையான உணவு). 2) ஹராம் (சாப்பிட அனுமதிக்கப்படாத தூய்மையற்ற உணவு)

    அல்லாஹ்வின் பெயர் கொண்டு அறுக்கப்பட்டு, அந்த மிருகங்களின் ரத்தம் உடலை விட்டு முழுமையாக வெளியேறிய பின்பு பெறப்படும் மாமிசங்கள் ஹலாலாகும். நேர்மையான முறையில் உழைத்து அதன் மூலம் பெறப்படும் உணவுகள் மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு அடித்தளமிடும் உணவுகளும் தூய்மையான (ஹலால்) உணவாகும்.

    அல்லாஹ்வின் பெயர் கூறி வெட்டப்படாத மாமிசங்கள் மட்டுமே ஹராமென்று சுருக்கிப் பார்க்க இயலாது. ஏனெனில், அல்லாஹ்வின் பெயர் கூறி வெட்டப்பட்ட உணவு, அநியாயமான முறையில் வருமாயின் அதுவும் ஹராமாகும். அதேபோல், மனிதனின் ஆரோக்கியத்திற்கு எதிராக இருக்கும் அத்தனை உணவுகளும் தடுக்கப்பட்ட (ஹராம்) உணவுகளாகும்.

    ‘நம்பிக்கை கொண்டோரே, நாம் உங்களுக்கு வழங்கிய தூய்மையானவற்றை உண்ணுங்கள். நீங்கள் அல்லாஹ்வையே வணங்குவோராக இருந்தால் அவனுக்கே நன்றி செலுத்துங்கள்’ என்று திருக்குர்ஆன் (2:172) சுட்டிக்காட்டுகிறது.

    உழைப்பில் கிடைத்த உணவாக இருந்த போதும் அவைகளை வீணடிப்பதை இறைவன் விரும்பவில்லை. தேவைகளை கருத்தில் கொண்டு உணவு தயாரித்தலை வலியுறுத்துகிறது இஸ்லாம். உணவின் மகிமையை அறியாமல் வீண் விரயம் செய்பவன் ஷைத்தானின் உடன் பிறப்பாகக் கூறி, வீண் விரயத்தை விட்டு தவிர்த்திருக்க இவ்வாறு சொல்கிறது திருக்குர்ஆன் (17:27):-

    ‘நிச்சயமாக விரயம் செய்பவர்கள் ஷைத்தான்களின் சகோதரர்களாவார்கள்; ஷைத்தானோ தன்னுடைய இறைவனுக்கு நன்றி கெட்டவனாக இருக்கிறான்’.

    சாப்பிடும் சமயங்களில் பணிவாகத் தரையில் அமர்ந்து சாப்பிட வேண்டும். சாய்ந்து கொண்டு, படுத்துக் கொண்டு சாப்பிடுவது பெருமை, ஆணவத்தின் அடையாளமாக எண்ணி, அவ்வாறு சாப்பிடுவதை நபி தடுத்த தரவுகள் நம் கண் முன்னே உள்ளன. மனிதனை அழிவுவரை இழுத்துச் செல்லும் பெருமை, ஆணவத்தை எப்போதும் இஸ்லாம் விரும்புவதில்லை. சாப்பிடும் நேரங்களில் உணவிற்கு மதிப்பளித்து சாப்பிடுதலை விரும்புகிறது. இதுபற்றிய நபி மொழி வருமாறு:

    ‘நான் நபி (ஸல்) அவர்களிடம் இருந்தேன். அப்போது அவர்கள் தம்முடனிருந்த ஒரு மனிதரிடம், ‘நான் சாய்ந்துகொண்டு சாப்பிட மாட்டேன்’ என்று கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூ ஜுஹைஃபா (ரலி), நூல்: புகாரி)

    இஸ்லாமிய வணக்கங்களில் விதிவிலக்கில்லாதது இறைவணக்கம் (தொழுகை). பசி அதிகமான நேரங்களில் தொழுகையின் நேரம் குறுக்கிட்டால், சாப்பிட்ட பிறகே இறைவணக்கம் செய்ய வேண்டும். ஏனெனில் உயிர் காப்பது இறைவணக்கம் செய்வதை விட மேலானது என்ற உயரிய கருத்தாழத்தை சில நபி மொழிகளைக் கொண்டு நாம் விளங்க முடிகின்றது.

    “இறைத்தூதர் (ஸல்) கூறினார்கள்: ‘இரவு உணவு உங்களுக்கு முன் வைக்கப்பட்டுக் கொண்டிருக்கத் தொழுகைக்கான அழைப்பு சொல்லப்பட்டால், முதலில் உணவை உண்ணுங்கள். (பிறகு தொழச் சொல்லுங்கள்)”. (நூல்: புகாரி)

    உணவு வைக்கப்பட்ட தட்டில் அங்குமிங்கும் உணவுகளை எடுத்துச் சாப்பிடுவது நாகரிகமான செயல்கள் அல்ல. நடுப்பகுதியிலிருந்து அல்லது அங்குமிங்கும் சாப்பிடுவது மற்றவர்களுக்கு முக சுளிப்பை ஏற்படுத்தும். அதனால்,நம் அருகிலிருந்து சாப்பிடுவதே. நாகரிகமான முறையில் சாப்பிடும் வழிமுறையாகும். நபியின் வழிமுறைகள் இதற்கும் வழிகாட்டுகின்றன.

    “ஒரு நாள் நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் உணவு அருந்தினேன். தட்டின் மூலைகளிலிருந்து இறைச்சியை எடுக்கலானேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “உன(து கை)க்கு அருகிலிருந்து எடுத்து உண்பாயாக!” என்று கூறினார்கள். (அறிவிப்பாளர்: உமர் பின் அபீசலமா (ரலி), நூல்: ஸஹீஹ் முஸ்லிம்).

    உயிர் வாழ தேவையான அளவிற்கு சாப்பிட வேண்டும். தேவைக்கு அதிகமாக சாப்பிடுவது மற்றவரின் உணவைச் சாப்பிடுவது போன்றாகும். மற்றவர்கள் பசியில் வாடும்போது அவர்களுக்கு பகிராமல் நாம் மட்டும் சாப்பிடுவது மனிதத் தன்மைக்கு எதிரானதாகும். நம் தேவைக்கு அதிகமான உணவுகள் இருந்தால் அதனைத் தேவையானவர்களுக்குக் கொடுப்பது நன்மையாகும். உங்களுக்கு ஒரு உணவு கொடுக்கப்பட்டால், இருவர் சாப்பிடும் அளவிற்கு இருக்கும் என்பதால் பகிர்ந்துண்ண கூறுகிறது மற்றோர் நபி மொழி.

    “நபி (ஸல்) கூறினார்கள்: ‘ஒரு மனிதருடைய உணவு இரு மனிதருக்குப் போதுமானதாகும். இரு மனிதரின் உணவு நால்வருக்குப் போதுமானதாகும். நால்வரின் உணவு எண்மருக்குப் போதுமானதாகும்”. (அறிவிப்பாளர்: ஜாபிர் (ரலி), நூல்: முஸ்லிம்)

    உணவின்றி அமையாது மனித வாழ்வு. உணவுகளுக்கு மதிப்பளித்து அதனை வீணடிக்காமல் உணவருந்தி, மற்றவர்களுக்கும் உணவுகளைப் பகிர்ந்து பல உயிர்களைக் காப்பாற்றுதல் இஸ்லாம் தொகுத்த உணவிற்கான அறங்களாகும்.

    ஏ.எச். யாசிர் அரபாத் ஹசனி, லால்பேட்டை.

    Next Story
    ×