என் மலர்

  ஆன்மிகம்

  இஸ்லாம் வழிபாடு
  X
  இஸ்லாம் வழிபாடு

  இஸ்லாம் ஓரு வாழ்க்கை நெறியாகும்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  உங்களில் சிறந்தவர் யார் என்றால், உங்களது மனைவியரிடம் சிறந்தவர் எவரோ அவரே! என்னுடைய மனைவியரைக் குறித்து நான் மிகவும் சிறந்தவனாக இருக்கின்றேன் என்று கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அபுஹுரைரா (ரலி), நூல்: திர்மிதி).
  உலகில் ஏற்பட்ட முதல் உறவு கணவன், மனைவி என்ற குடும்ப உறவுதான். இந்த உறவுக்கு இஸ்லாத்தில் மிக அதிக முக்கியத்துவம் தரப்பட்டு, உயரிய நோக்கத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது.

  இஸ்லாம் ஓரு வாழ்க்கை நெறியாகும். வாழ்க்கையின் அனைத்துத் துறைகளுக்கும் வழிகாட்டுவது போல் குடும்ப வாழ்க்கை மலரவும், அதன் மூலம் அமைதியான ஆக்கப்பூர்வமான வாழ்க்கை கட்டிடத்தைக் கட்டமைக்கவும் இஸ்லாம் வழிகாட்டுகிறது.

  எந்த ஒரு சீர்திருத்தத்திற்கும் முதல் படி தனிமனித, குடும்ப சீர்திருத்தம் தான் என்பது இஸ்லாத்தின் அடிப்படை போதனையாகும். இந்த முதல் படியைப் புறக்கணித்து உருவாகும் எந்த சீர்திருத்தமும் நிலையான சீர்திருத்தமாக அமையாது. திருக்குர்ஆன், வீட்டை அமைதி பெறும் இடமாக சித்திரிக்கிறது. எனவே வீட்டில் அமைதியில்லையேல் நாட்டில் ஏது அமைதி? குடும்பத்தின் மீது அக்கறை செலுத்துவதும் இறைக்கட்டளை என்று இறைமறை போதிக்கிறது.

  ‘இறைநம்பிக்கை கொண்டவர்களே! மனிதர்களும் கற்களும் எரிபொருள்களாகக்கூடிய அந்த நரக நெருப்பிலிருந்து உங்களையும் உங்கள் மனைவி மக்களையும் காப்பாற்றிக் கொள்ளுங்கள்’. (திருக்குர்ஆன் 66:6)

  குடும்பத்தின் மீது அக்கறை செலுத்துவது குடும்பத்தலைவனின் மிக முக்கியமான பொறுப்பாக நபிகள் நாயகம் (ஸல்) வலியுறுத்தியிருக்கிறார்கள்.

  அண்ணல் நபி (ஸல்) அவர்கள் நவின்றார்கள்: ‘உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளரும், பாதுகாவலரும் ஆவார். உங்களில் ஒவ்வொருவரும் அவரது கண்காணிப்பின், பொறுப்பின் கீழ் உள்ளவர்களைப் பற்றிக் கேட்கப்படுவார். ஆட்சியாளரும் பொறுப்பாளரே, அவரிடமும் அவரது குடிமக்களைப் பற்றி வினவப்படும். கணவன் தன் வீட்டாருக்குப் பொறுப்பாளியாவான். பெண், தன் கணவனின் வீடு, அவனுடைய குழந்தைகளுக்குப் பொறுப்பாளியாவாள். பணியாள் தன் எஜமானின் பொருளுக்குப் பொறுப்பாளனாவான். உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளரே! உங்களில் ஒவ்வொருவரிடமும் அவர்களின் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டவர்களைப் பற்றிக் கேட்கப்படும்’. (அறிவிப்பாளர்: இப்னு உமர் (ரலி), நூல்: புகாரி, முஸ்லிம்)

  இவ்வுலகில் சிறந்த ஒழுக்க முறையிலும், இறையச்சத்தின் அடிப்படையிலும் வாழும் மக்களை நாம் விட்டுச் செல்லவேண்டும். இவர்களின் மூலமாக வீட்டிலும், நாட்டிலும் அமைதி நிலவவேண்டும். மறுமையில் அமைதிப் பூங்காவாகிய சொர்க்க சோலையில் குடும்பத்துடன் வாழும் பேற்றைப் பெறவேண்டும்.

  அண்ணல் நபி (ஸல்) அவர்கள் நவின்றார்கள்: ‘மனிதன் இறந்துவிடும்போது அவனது செயல்களும் முடிவடைந்து விடுகின்றன. ஆனால் மூன்று வகையான செயல்களுக்கு மட்டும் அவன் இறந்த பின்னாலும் நற்கூலி கிடைத்துக் கொண்டே இருக்கின்றது. தொடர்ந்து நீடித்துப் பலன் தரும் நிலையான நல்லறம் எதையேனும் ஆற்றிவிட்டுச் செல்வது. மக்கள் பயனடையக்கூடிய கல்வியை அளித்துவிட்டுச் செல்வது. அவனுக்காக இறைஞ்சிய வண்ணமிருக்கும் அவன் பெற்றெடுத்த மகன். (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்: மிஷ்காத்)

  அல்லாஹ் திருமறையில் கூறுகின்றான்: ‘மேலும் அவனுடைய சான்றுகளில் இதுவும் ஒன்றாகும். அவன் உங்களுக்காக உங்கள் இனத்திலிருந்தே மனைவியரைப் படைத்தான். நீங்கள் அவர்களிடம் அமைதி பெறவேண்டும் என்பதற்காக. மேலும் உங்களிடையே அன்பையும் கருணையையும் தோற்றுவித்தான். திண்ணமாக சிந்திக் கும் மக்களுக்கு இதில் நிறையச் சான்றுகள் உள்ளன’. (திருக்குர்ஆன் 30:21)

  மகிழ்ச்சியான குடும்பம் உருவாக முதலாவது அடிப்படை கணவன், மனைவி உறவுகளில் அன்பும், கருணையும், பாசமும் மலர வேண்டும். தம்பதிகளுக்கிடையே அமைதி நிலவ அவர்களுக்குள் அன்பையும், கருணையையும் அல்லாஹ் உருவாக்குகிறான் என்பதை மேற்குறிப்பிட்ட வசனம் சுட்டிக்காட்டுகிறது.

  இரண்டாவதாக: கணவன், மனைவி இருவரும் இஸ்லாம் அவர்களுக்கு அளித்திருக்கின்ற கடமைகளையும், உரிமைகளையும் உணர்ந்து பேணுபவர்களாக இருக்கவேண்டும்.

  கணவன் ஆற்ற வேண்டிய கடமைகளும் உள்ளன, பெற வேண்டிய உரிமைகளும் உள்ளன. அவ்வாறே மனைவியும் கணவனுக்கு ஆற்ற வேண்டிய கடமைகளும் உள்ளன, பெற வேண்டிய உரிமைகளும் உள்ளன. இந்த அடிப்படைக் கல்வியை இருவரும் கற்று, சரிவர உணர்ந்து செயல்படவேண்டும். இருவரில் யாராவது குறை செய்தாலும் குடும்பம் சீர்பெறாது.

  இதற்குக் குர்ஆன் கூறும் அழகான எடுத்துக்காட்டு ‘ஒருவர் மற்றவர்க்கு ஆடையாக அமைய வேண்டும்’ என்பதே. ஆக இருவரும் இந்த ஆடையை அணியவேண்டும். அக ஒழுக்கங்களாகிய மானம், மரியாதை பேணப்படவேண்டும். புற அபாயங்களிலிருந்து தற்காத்துக் கொள்ளவேண்டும்.

  மூன்றாவதாக: குடும்ப சீர்திருத்தத்தின் தொடக்கம் கணவன், மனைவியிலிருந்து தொடங்கி பிள்ளைகள், உற்றார் உறவினர்கள், சமூகம் என்று பரவவேண்டும். தன்னை மறந்து பிறரின் சீர்திருத்தத்திற்காக உழைப்பது பெரும் மடத்தனமாகும். ஆக தொடக்கம் தன்னிடமிருந்துதான்.

  நமது சொல்லும், செயலும் ஒன்றாக இருக்கவேண்டும். தம்பதிகள் இருவரும் இஸ்லாமிய வாழ்க்கையின் வடிவங்களாய்த் திகழ வேண்டும். மாற்றத்தையும், முன்னேற்றத்தையும் ஏற்படுத்தாத கல்வி எந்தப் பயனும் அளிக்காது. ஒருவர் மிக அழகாகச் சொன்னார், ‘கல்வி - செயலின் வீட்டைத் தட்டும், பதில் வரவில்லையெனில் திரும்பி விடும்’.

  நமது செயல் சான்றுதான் வீட்டில் பிள்ளைகள் மத்தியில் சாதக அல்லது பாதக விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை நாம் மறந்து விடக்கூடாது.

  பெற்றோர்கள் என்ற வகையில் குடும்பத்தில் உலக செல்வச் செழிப்பை மட்டும் பார்க்காமல் அவர்களின் ஈருலக செழிப்பும் நமது இலக்காக இருக்கவேண்டும். இல்லையேல் மறுமையில் நமது பிள்ளைகள் நம்மைச் சபிப்பவர்களாக மாறிவிடக்கூடும்.

  இஸ்லாமியக் குடும்பத்தின் முன்மாதிரி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் குடும்பம். அன்பும், பாசமும், பரிவும் நிறைந்த முழுமையான குடும்பம் அது. பிள்ளைகளின் பயிற்சிக்கும், பேரப்பிள்ளைகளின் பயிற்சிக்கும் மிகச் சிறந்த எடுத்துக்காட்டு.

  இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘உங்களில் சிறந்தவர் யார் என்றால், உங்களது மனைவியரிடம் சிறந்தவர் எவரோ அவரே! என்னுடைய மனைவியரைக் குறித்து நான் மிகவும் சிறந்தவனாக இருக்கின்றேன் என்று கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அபுஹுரைரா (ரலி), நூல்: திர்மிதி).

  நசீர் அதாவுல்லாஹ், சென்னை.
  Next Story
  ×