search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    இஸ்லாம் வழிபாடு
    X
    இஸ்லாம் வழிபாடு

    கோபம் கொள்ளாதீர்கள்

    கோபம் கொள்வதினால் பிறரின் அன்பை இழப்பதோடு, நமது உடல்நலமும் பாதிக்கப்படுவதாக மருத்துவம் எச்சரிக்கின்றது. கோபத்தை தவிர்ப்போம், சாந்தியும், சமாதானம் நிறைந்த வார்த்தைகளைப்பேசி நலம் பெறுவோம், ஆமின்.
    இன்றைக்கு பலரும் அடிக்கடி சொல்லும் வார்த்தை, “எனக்கு கோபம் வந்தால் என்ன செய்வேன் என்று எனக்கே தெரியாது”.

    இதை சிலர் பெருமையாக கூறுவது தான் வேதனைக்குரியது.

    ஒரு மனிதரிடம் அடிக்கடி கோபம் கொள்ளும் குணம், ஆத்திரப்படும் வழக்கம், பழிவாங்கும் நோக்கம் இருந்தால், அவரிடம் எத்தனை நற்குணங்கள் இருந்தாலும் அதனால் அவருக்கு எந்தப்பயனும் கிடைக்காது.

    “அவர் நல்லவர் தான், ஆனால் கோபக்காரர்” என்ற விமர்சனம், அவரது நற்குணங்களை எல்லாம் அழித்துவிடும்.

    கோபத்தை தவிர்ப்பது குறித்தும், கோபம் ஏற்படுவதில் இருந்து தம்மை பாதுகாத்துக்கொள்வது குறித்தும் இஸ்லாம் பல்வேறு தளங்களில் வலியுறுத்தி வருகிறது. ஏக இறைவனாம் அல்லாஹ்வின் திருத்தூதர் முகம்மது நபி (ஸல்) அவர்களும், கோபத்தினால் ஏற்படும் தீமைகள் குறித்து மக்களுக்கு அறிவுரைகள் வழங்கி இருக்கிறார்கள். இது குறித்த ஒரு நிகழ்வை காண்போம்:

    அடிக்கடி கோபம் கொள்ளக்கூடிய குணம் கொண்ட மனிதர் ஒருவர், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை சந்தித்தார். அந்த மனிதர், “நாயகமே, எனக்கு ஏதாவது அறிவுரை கூறுங்கள்” என்று கேட்டுக்கொண்டார். அதற்கு அண்ணல் நபி அவர்கள், “கோபம் கொள்ளாதீர்கள்” என்று பதில் அளித்தார்கள்.

    அந்த மனிதர் நபிகளாரிடம் மீண்டும், அண்ணலாரே, “எனக்கு அறிவுரை கூறுங்கள்” என்றார்.

    இவ்வாறு அவர் மீண்டும் மீண்டும் பல முறை கேட்டபோதும், “நீங்கள் கோபம் கொள்ளாதீர்கள்” என்றே அவருக்கு நபிகளார் பதில் அளித்தார்கள்.

    நபி மொழிகள் தொகுப்பான புகாரி நூலிலே, நபித்தோழர் அபு ஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாக மேற்சொன்ன இந்த நிகழ்வு பதிவாகி இருக்கிறது.

    இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள், “ஒருவருக்கொருவர் கோபம் கொள்ளாதீர்கள். பொறாமை கொள்ளாதீர்கள். பிணங்கிக் கொள்ளாதீர்கள். (மாறாக,) அல்லாஹ்வின் அடியார்களே (அன்பு பாராட்டுவதில்) சகோதரர்களாய் இருங்கள். எந்தவொரு முஸ்லிமும் தம் சகோதரருடன் மூன்று நாட்களுக்கு மேல் பேசாமல் இருப்பது அனுமதிக்கப்பட்டதன்று”. (அறிவிப்பாளர்: அனஸ் இப்னு மாலிக் (ரலி), நூல்: புகாரி.

    அண்ணல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: “குத்துச்சண்டையில் அடுத்தவனை வீழ்த்துபவன் வலிமை வாய்ந்தவன் அல்லன்; மாறாக கோபம் வரும்போது தன்னைத்தானே அடக்கிக்கொள்பவனே உண் மையான வலிமை வாய்ந்தவன் ஆவான்”.

    அதாவது, கோபம் வரும்போது இறைவனுக்கும், அவனுடைய தூதருக்கும் விருப்பம் இல்லாத செயலை தவிர்ப்பவன்தான் வலிமை மிக்கவன் என்பது இந்த நபிமொழி மூலம் வலியுறுத்தப்படுகிறது.

    ‘கோபம் ஷைத்தானின் தூண்டுதலால் வரக்கூடியது’ என்று நபிகளார் தெரிவித்துள்ளதாக அபூதாவூத் நூலிலே அத்தியா அஸ் ஸஅதி (ரலி) அவர்கள் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்கள்:

    “கோபம் ஷைத்தானியப் பாதிப்பின் விளைவாகும். ஷைத்தான் நெருப்பால் படைக்கப்பட்டு இருக்கின்றான். நெருப்பு நீரால் மட்டுமே அணைகின்றது. எனவே, உங்களில் ஒருவருக்கு கோபம் வந்துவிட்டால் அவர் ‘ஒளு’ (அங்கசுத்தி) செய்துகொள்ளட்டும்”.

    ஒரு மனிதருக்கு கோபம் ஏற்படும்போது அவர் என்ன செய்ய வேண்டும் என்று குறிப்பிடும் மேற்கண்ட இந்த நபிமொழி போன்று மிஷ்காத் நூலிலே இன்னொரு நபிமொழியும் இடம்பெற்றுள்ளது. இதை அபூதர் (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்.

    “உங்களில் ஒருவருக்கு நின்று கொண்டிருக்கும்போது கோபம் வந்தால் அவர் உட்கார்ந்து கொள்ளட்டும். இப்படி செய்து கோபம் மறைந்துவிட்டால் சரி, இல்லாவிட்டால் அவர் படுத்துக்கொள்ளட்டும்”.

    ‘ஒருவர் தனக்கு ஏற்படும் கோபத்தை தடுத்துக்கொண்டால் அல்லாஹ் அவனது மறுமைநாளின் வேதனையை அகற்றிவிடுவான்’ என்று நபிகளார் குறிப்பிட்டுள்ளார்கள். இதுகுறித்து மிஷ்காத் நூலில் அனஸ் (ரலி) இவ்வாறு கூறியுள்ளார்.

    “அண்ணல் நபி (ஸல்) அவர்கள் நவின்றார்கள்: உண்மைக்கு மாறாக பேசுவதைவிட்டு, தன் நாவைக் காத்துக்கொள்பவனின் குறையை அல்லாஹ் மறைத்து விடுவான். தன் கோபத்தைத் தடுத்துக்கொள்பவனை விட்டு மறுமைநாளில் வேதனையை அல்லாஹ் அகற்றிவிடுவான். இறை வனிடம் மன்னிப்புக் கோருபவனை அல்லாஹ் மன்னித்துவிடுவான்”.

    கோபம் கொள்வதினால் பிறரின் அன்பை இழப்பதோடு, நமது உடல்நலமும் பாதிக்கப்படுவதாக மருத்துவம் எச்சரிக்கின்றது. கோபத்தை தவிர்ப்போம், சாந்தியும், சமாதானம் நிறைந்த வார்த்தைகளைப்பேசி நலம் பெறுவோம், ஆமின்.

    பேராசிரியர் அ.முகமது அப்துல்காதர், சென்னை.
    Next Story
    ×