search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    இஸ்லாம் வழிபாடு
    X
    இஸ்லாம் வழிபாடு

    இறைவன் நம்மோடு இருக்கின்றான்

    தப்பவே முடியாது என்ற ஆபத்தின் உச்சகட்டத்தை அடைந்த நிலையிலும் நம்மைக் காப்பதற்கு அல்லாஹ் நம்மோடு இருக்கின்றான் என்ற நம்பிக்கையில் நாம் உறுதியாக இருக்க வேண்டும்.
    மேன்மை மிகுந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தோழர்களில் குறிப்பிடத்தக்கவர் அபூபக்கர் சித்தீக் (ரலி). அண்ணல் நபிநாதர் (ஸல்) அவர்கள் மீது இவர் கொண்ட அன்பையும், நட்பையும் எதனாலும் கணக்கிட்டு அறிந்து விட முடியாது. இவர், தன் உயிரை விட அதிகமாக நபிகளாரை நேசித்தார். நபிகளாரின் கட்டளையை ஏற்று செயல்படும் தளபதியாகவும், உற்ற தோழராகவும் இவர் விளங்கினார்.

    அல்லாஹ்வின் கட்டளைப்படி நண்பர்கள் இருவரும் மக்காவை விட்டு புலம் பெயர்ந்து மதீனாவிற்குச் சென்றனர். வழிநெடுகிலும் எதிரிகளால் ஆபத்து சூழ்ந்திருந்தது. எதிரிகளிடம் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக மலை உச்சியில் இருந்த ஒரு பாழடைந்த குகையில் தஞ்சம் அடைந்தார்கள்.

    முதலில் குகைக்குள் சென்ற அபூபக்கர் (ரலி) அவர்கள், குகையை நன்றாக சுத்தம் செய்தார். அந்தக்குகையில் ஆங்காங்கே ஓட்டைகள் காணப்பட்டன. எனவே, தன் ஆடையைக் கிழித்து குகையில் உள்ள ஓட்டைகளை அடைத்தார். இதன் பின்னரே நபிகளாரை குகைக்குள் அழைத்தார். நபிகளார் உள்ளே சென்றதும் களைப்பின் மிகுதியால் அப்படியே கண்ணயர்ந்து விட்டார்கள். அபூபக்கர் (ரலி) அவர்கள், உறங்கும் நபிகளாரின் தலையை தன் மடியில் ஏந்திக்கொண்டார்.

    சிறிதுநேரத்தில் துணியால் அடைக்கப்பட்டு இருந்த ஓட்டையில் இருந்து துணியை தள்ளிவிட்டுக்கொண்டு ஒரு பாம்பு தலையை நீட்டியது.

    இதை அபூபக்கர் (ரலி) அவர்கள் பார்த்து திடுக்கிட்டார். நபிகள் பெருமானை (ஸல்) அந்தப்பாம்பு தீண்டி விடுமோ என்று அச்சப்பட்டார்கள்.

    உடனே தன் கால் விரலால் அந்த துவாரத்தை மூடினார்கள். அப்போது அந்த பாம்பு அபூபக்கர் (ரலி) அவர்களின் கால்விரல்களை கடித்தது. பாம்பின் கொடிய விஷம் உடலில் ஏறியதால் ஏற்பட்ட வலியின் காரணமாக அபூபக்கர் (ரலி) அவர்களால் கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை. கண்ணில் இருந்து வழிந்த கண்ணீர் அவரது மடியில் படுத்திருந்த அண்ணல் நபியின் கன்னங்களில் விழுந்து தெறித்தது.

    விழித்துக் கொண்ட நபியவர்கள் “என்ன நிகழ்ந்தது?” என்று வினவினார்கள். விபரம் அறிந்து கொண்ட கண்மணி நாயகம் தன் உமிழ்நீரை பாம்பு கடித்த இடத்தில் தடவினார்கள். உடனே அபூபக்கர் (ரலி) அவர்களுக்கு வலி இருந்த இடம் தெரியாமல் பறந்து போய்விட்டது.

    சிறிது நேரத்தில் எதிரிகள் குகையின் வாசல் அருகே வந்து விட்டார்கள். சற்று குனிந்து பார்த்தால் இருவரும் பிடிபட்டு விடுவார்கள். இதனால் அபூபக்கர் (ரலி) பயந்து விட்டார்கள். ஆனால் அண்ணல் நபியவர்கள் சிறிதும் கவலை கொள்ளவில்லை.

    தைரியமாக அபூபக்கர் (ரலி) அவர்களை நோக்கி, ‘நீர் அச்சம் கொள்ளாதீர். நிச்சயமாக அல்லாஹ் நம்மோடு இருக்கின்றான். அவனே நமக்குப் போதுமானவன், பாதுகாப்பவன்’ என்றார்கள்.

    குகையின் வாசலில் நின்ற எதிரிகள் அங்கே பறவைகள் கூடு கட்டி இருப்பதையும், சிலந்தி வலை பின்னியிருப்பதையும் பார்த்து விட்டு, ‘அவர்கள் இங்கே இருப்பதற்கு வாய்ப்பில்லை’ என்று கருதி சென்று விட்டார்கள்.

    இதையே திருக்குர்ஆன் வசனம் (9:40) இவ்வாறு குறிப்பிடுகிறது: “நிராகரிப்பாளர்கள் அவரை (நபிகளாரை) வெளியேற்றியபோது திண்ணமாக அல்லாஹ் அவருக்கு உதவி செய்துள்ளான். அவர்கள் இருவரும் (நபிகளாரும், அபூபக்கரும்) குகையில் தங்கியிருந்தபோது, இருவரில் இரண்டாமவராய் இருந்த அவர் தன் தோழரை நோக்கி “கவலை கொள்ளாதீர்; அல்லாஹ் நம்முடன் இருக்கின்றான்” என்று கூறினார். அப்போது அல்லாஹ் அவருக்குத் தன்னிடமிருந்து மனஅமைதியை இறக்கி அருளினான். மேலும், உங்களின் பார்வைக்குத் தென்படாதிருந்த படைகளின் மூலம் அவருக்கு உதவி செய்தான். மேலும், இறை நிராகரிப்பாளர்களின் வாக்கைத் தாழ்த்தினான். மேலும், அல்லாஹ்வின் வாக்குதான் மேலானதாக இருக்கிறது. அல்லாஹ் யாவற்றையும் மிகைத்தவனும், நுண்ணறிவாளனுமாவான்”.

    இனி தப்பவே முடியாது என்ற ஆபத்தின் உச்சகட்டத்தை அடைந்த நிலையிலும் நம்மைக் காப்பதற்கு அல்லாஹ் நம்மோடு இருக்கின்றான் என்ற நம்பிக்கையில் நாம் உறுதியாக இருக்க வேண்டும். நாம் நினைத்திராத திசையிலிருந்தும் எண்ணியிராத விதத்திலும் அல்லாஹ் நம்மை காப்பாற்றுவான். அல்லாஹ் நம் எண்ணங்களையும் நம்பிக்கையின் உறுதியையும் தான் உற்று நோக்குகின்றான்.

    அல்லாஹ்வை நம்பியவருக்கு அவன் எப்போதும் துணையிருப்பான்.

    மு. முகமது யூசுப், உடன்குடி.
    Next Story
    ×