search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    இஸ்லாம் வழிபாடு
    X
    இஸ்லாம் வழிபாடு

    இன்னல்களில் இருந்து விடுதலை பெற...

    மலைபோல வேதனைகள், சோதனைகள், பிரச்சினைகள் வந்தாலும் இனி தப்பவே முடியாது என்ற நிலை ஏற்பட்டாலும், அதனை பொறுமையோடு ஏற்றுக்கொள்ள வேண்டும்.
    உலகில் மனிதர்கள் சிறுசிறு கூட்டங்களாக வாழ்ந்த காலகட்டங்களில் ஒவ்வொரு கூட்டத் திற்கென தனியாக ஒரு நபியை அனுப்பி வைத்தான் அல்லாஹ். அப்போது, யூனுஸ் நபியை ஒரு கூட்டத் திற்கு நபியாக அனுப்பினான். அந்த மக்களுக்கு பல ஆண்டுகள் அல்லாஹ்வின் வல்லமையை யூனுஸ் நபிகள் எடுத்துச் சொல்லியும், அந்த மக்கள் இறை கொள்கையை ஏற்றுக் கொள்ளவில்லை.

    எனவே யூனுஸ் நபிகள் அந்த ஊரை விட்டு வெளியேறினார்கள். ஒரு கப்பலில் ஏறி வேறு ஒரு ஊருக்கு பயணமானார்கள். கப்பல் நடுக்கடலை அடைந்ததும் கடும் புயல் வீசத் தொடங்கியது. அது இயற்கை சீற்றம் என்று அந்த மக்கள் நம்பிக்கை கொண்டிருந்ததால், அறியாமைக்கால வழக்கப்படி திருவுளச்சீட்டு போட்டு பார்த்தார்கள். அதன்மூலம் பயணியர்களில் ஒருவரை கடலுக்கு பலி கொடுக்க தீர்மானித்தார்கள். மூன்று முறை திருவுளச்சீட்டு போட்டுப் பார்த்தும் திரும்ப திரும்ப யூனுஸ்நபி அவர்களின் பெயரே வந்தது.

    அந்த முடிவின்படி யூனுஸ் நபிகளை கடலில் தூக்கிப் போட்டார்கள். அப்போது கப்பலின் அருகே வந்த பெரிய திமிங்கலம் ஒன்று அவரை விழுங்கிக் கொண்டது. அல்லாஹ்வின் அருளால் யூனுஸ் நபிகள் மீன் வயிற்றிலேயே உயிரோடு பாதுகாக்கப் பட்டார்கள்.

    இந்த இக்கட்டான சூழ்நிலையில் இருந்து தன்னை காப்பாற்ற வேண்டி அல்லாஹ்விடம் யூனுஸ் நபியவர்கள் இவ்வாறு பிரார்த்தித்தார்கள்.

    “உன்னைத்தவிர வணக்கத்திற்குரிய இறைவன் வேறொருவனும் இல்லை. நீ மிகப் பரிசுத்தமானவன். நிச்சயமாக நானோ அநியாயக்காரர்களில் ஒருவனாகி விட்டேன். என்னை மன்னித்து அருள்புரிவாயாக என்று பிரார்த்தனை செய்தார்”. (திருக்குர்ஆன் 21:87)

    தனக்கு ஒரு துன்பம் வந்தபோது இறைவனிடம், ‘யா அல்லாஹ், என்னை இந்த இக்கட்டில் இருந்து பாதுகாத்து கிருபை செய்’ என்று யூனுஸ் நபிகள் தொடர்ந்து பிரார்த்தித்துக் கொண்டிருந்தார்கள்.

    அந்த பிரார்த்தனையை ஏற்றுக்கொண்ட அல்லாஹ், ‘யூனுஸ் நபியை கடற்கரையில் கொண்டு விட்டு விடும்படி மீனிற்கு கட்டளையிட்டான். இதன்படி கரையில் ஒதுங்கிய நபியவர்கள் அல்லாஹ்விற்கு நன்றி செலுத்தி சிரம் பணிந்தார்கள்.

    எனவே மலைபோல வேதனைகள், சோதனைகள், பிரச்சினைகள் வந்தாலும் இனி தப்பவே முடியாது என்ற நிலை ஏற்பட்டாலும், அதனை பொறுமையோடு ஏற்றுக்கொள்ள வேண்டும். நெருக்கடியான நேரத்தில் யூனுஸ் நபி இறைவனிடம் வேண்டியது போல இந்த பிரார்த்தனையை நம்பிக்கையோடு செய்து வந்தால் நிச்சயமாக அல்லாஹ் நம்மை பாதுகாத்து அருள் புரிவான், ஆமின்.

    ஹம்ஸா, தாராபுரம்
    Next Story
    ×