search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ஞானமாமேதை ஷெய்கு பீர்முகமது சாகிபு ஆண்டு விழாவையொட்டி ஞானப்புகழ்ச்சி பாடுதல் நிகழ்ச்சி நடந்த போது எடுத்த படம்.
    X
    ஞானமாமேதை ஷெய்கு பீர்முகமது சாகிபு ஆண்டு விழாவையொட்டி ஞானப்புகழ்ச்சி பாடுதல் நிகழ்ச்சி நடந்த போது எடுத்த படம்.

    ஞான மாமேதை ஷெய்கு பீர் முகமது சாகிபு ஞானப்புகழ்ச்சி பாடுதல்

    தக்கலையில் ஞானமாமேதை ஷெய்கு பீர்முகமது சாகிபு ஆண்டு விழாவின் சிகர நிகழ்ச்சியான ஞானப்புகழ்ச்சி பாடுதல் நேற்று இரவு விடிய, விடிய நடந்தது. இதில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
    இஸ்லாமிய தமிழ் இலக்கியத்துக்கு ஞானப்புகழ்ச்சி, ஞானப்பால் உள்பட 18 ஆயிரம் பாடல்களை இயற்றி இஸ்லாமிய இலக்கியத்தின் சிறப்பை உலகுக்கு உயர்த்தியவர் ஞானமாமேதை ஷெய்கு பீர்முகமது சாகிபு. இவரது ஆண்டு விழா தக்கலையில் உள்ள பீர்முகமது தர்காவில் வருடம் தோறும் மிக சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    இந்த ஆண்டு விழா கடந்த 25-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் போது தினமும் இரவு மார்க்கப் பேருரைகள், மவுலிது ஓதுதல் ஆகியன நடைபெற்றன.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான ஞானப்புகழ்ச்சி பாடுதல் நேற்று இரவு 9 மணிக்கு தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் பீர்முகமது சாகிபு இயற்றிய ஞானப்புகழ்ச்சியில் உள்ள 686 பாடல்களை ஜமாத் மக்கள் ஏராளமானோர் குழுக்களாக சேர்ந்து விடிய, விடிய பாடினர்.

    இதில் ஹாமீம் முஸ்தபா, ஷர்புதீன், ஷாகுல் ஹமீது, அபு தாஹிர், நிஜாம், முகம்மது பஷீர், ஷேக் ஜுனைத், உவைஸல் கர்னி, ஆரிபீன், முகம்மது அனீஸ், முகம்மது சித்திக், அலி அகமது, முகம்மது ஸம்மில் மற்றும் ஜமாத் நிர்வாகிகள், ஜமாத் மக்கள் மற்றும் குமரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி நெல்லை, தூத்துக்குடி மாவட்டம், கேரள மாநிலத்தில் இருந்தும் திரளாக கலந்து கொண்டனர்.

    ஞான புகழ்ச்சி பாடுதல் நிகழ்ச்சியை தொடர்ந்து நேற்று 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட பக்தர்களுக்கு நேர்ச்சை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 4.30 மணிக்கு பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு நேர்ச்சை வழங்குதலும், 12-ந் தேதி இரவு 7 மணிக்கு மூன்றாம் சியாரத் நேர்ச்சை வழங்குதலும் நடக்கிறது. ஞானப்புகழ்ச்சியையொட்டி நேற்று குமரி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

    இதற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு வக்பு வாரிய மேற்பார்வையில் அஞ்சுவன்னம் பீர்முகம்மதியா முஸ்லிம் அசோசியேஷன் விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.
    Next Story
    ×