search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    உயர்ந்த வணக்கம் தொழுகை
    X
    உயர்ந்த வணக்கம் தொழுகை

    உயர்ந்த வணக்கம் தொழுகை

    ‘ஒருவருக்கு ஒரு நேரத்தொழுகை தவறிவிடுவது அவருக்கு அவரது குடும்பம், அவரது செல்வம் யாவும் பறிக்கப்பட்டது போன்றாகும் என நபி (ஸல்) கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அபூஹூரைரா (ரலி), நூல்: இப்னுஹிப்பான்)

    இஸ்லாமிய இறைநம்பிக்கை என்பது 70 -க்கும் மேற்பட்ட கிளைகள் கொண்டது. அது குறித்த தகவல்களை இந்த தொடரில் பார்த்து வருகிறோம். இந்த வாரம் இறை நம்பிக்கைகளில் ஒன்றான ‘உயர்ந்த வணக்கம் தொழுகை’ என்பது குறித்த தகவல்களை காண்போம்.

    தொழுகை என்பது உடல் ஆரோக்கியத்தின் செயல்வடிவமாக, உடற்பயிற்சியின் களமாக, உடற் கூறுகளை ஒழுங்குபடுத்தும் சாதனமாக அமைந்துள்ளது.

    தினமும் ஐந்து முறை இறைவனைத் தொழுது வருவது பருவ வயதை அடைந்த, புத்திசுவாதீனமுள்ள, முஸ்லிமான ஆண்-பெண் இருபாலரின் மீதும் கடமையாகும். இந்தக் கடமையிலிருந்து நிரந்தரமாக விடுபட ஒன்று மரணமாக அமையும். பெண்களுக்கு தற்காலிகமாக விடுபட மாதவிடாயாக அமையும்.

    ‘உமக்கு மரணம் வரும் வரை உமது இறைவனை (தொழுது) வணங்குவீராக’ என்று திருக்குர்ஆன் (15:99) குறிப்பிடுகிறது.

    நபி (ஸல்) அவர்கள் விண்ணுலகப் பயணத்திற்காக அழைத்துச் செல்லப்பட்ட போது மூன்று கட்டளைகள் வழங்கப்பட்டன. அவை: 1) ஐந்து வேளைத் தொழுகைகள், 2) திருக்குர்ஆனின் இரண்டாவது அத்தியாயமான ‘பகரா’வின் இறுதி மூன்று வசனங்கள், 3) அவர்களின் சமுதாயத்தாரில் இறைவனுக்கு இணையேதும் வைக்காதவர்களுக்குப் பேரழிவை ஏற்படுத்தும் பெரும்பாவங்கள் மன்னிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டன’ என்று நபித்தோழர் இப்னுமஸ்ஊத் (ரலி), அறிவித்த தகவல் முஸ்லிம் நூலில் இடம் பெற்றுள்ளது.

    தொழுகை எனும் வார்த்தை குறித்து திருக்குர்ஆன் கிட்டத்தட்ட 85 இடங்களில் பேசுகிறது. ஐந்து வேளைத் தொழுகை நிறைவேற்றுவது குறித்து திருக்குர்ஆன் இவ்வாறு குறிப்பிடுகிறது:

    ‘(நபியே), சூரியன் (உச்சியில்) சாய்ந்ததிலிருந்து, இரவின் இருள் சூழும் வரை (ளுஹர், அஸர், மக்ரிப், இஷா) தொழுகையை நிலை நிறுத்துவீராக; இன்னும் ‘பஜ்ர்’ எனும் அதிகாலைத் தொழுகையையும் நிலைநிறுத்துவீராக; நிச்சயமாக பஜ்ர் தொழுகை சான்று கூறுவதாக இருக்கிறது’. (திருக்குர்ஆன் 17:78)

    ‘பஜ்ர்’ என்பது அதிகாலைத்தொழுகையின் பெயர். ‘ளுஹர்’ என்பது நண்பகல் தொழுகையின் பெயர். ‘அஸர்’ என்பது மாலைநேரத் தொழுகையின் பெயர். ‘மக்ரிப்’ என்பது சூரியன் அஸ்தமிக்கும் நேரத் தொழுகையின் பெயர். ‘இஷா’ என்பது இரவு நேரத் தொழுகையின் பெயர்.

    அந்தந்த வேளைகளில் அந்தந்த தொழுகையை நிறைவேற்றுவது இறை நம்பிக்கையாளர்கள் மீது விதியாக்கப்பட்டுள்ளது. இதை இறைவன் இவ்வாறு உறுதிப்படுத்துகிறான்:

    ‘நிச்சயமாக தொழுகை நம்பிக்கை கொண்டோர் மீது நேரம் குறிக்கப்பட்ட கடமையாக உள்ளது’. (திருக்குர்ஆன் 4:103)

    நபிமார்கள், இறைநேசர்கள் அனைவரும் இறைவனிடம் சிறந்த அந்தஸ்தையும், இறைநெருக்கத்தையும் பெற்றது தொழுகையைக் கொண்டுதானே தவிர வேறில்லை.

    நபி இப்ராகீம் (அலை) அவர்களின் அழகான வேண்டுதலை இறைவன் சிறப்பித்து, பாராட்டி திருக்குர்ஆனில் இவ்வாறு பேசுகின்றான்: ‘என் இறைவா, என்னையும், என் சந்ததிகளையும் தொழுகையை நிலைநாட்டுவோராக ஆக்குவாயாக. எங்கள் இறைவா, எனது பிரார்த்தனையை ஏற்பாயாக’. (திருக்குர்ஆன் 14:40)

    நபி இஸ்மாயீல் (அலை): ‘இவ்வேதத்தில் இஸ்மாயீலையும் நினைவூட்டுவீராக. அவர் வாக்கை நிறைவேற்றுபவராகவும், தூதராகவும், நபியாகவும் இருந்தார். அவர் தமது குடும்பத்தாருக்கு தொழுகையையும், ஸகாத்தையும் ஏவுபவராக இருந்தார். தமது இறைவனால் திருப்தி கொள்ளப்பட்டவராகவும் இருந்தார்’. (திருக்குர்ஆன் 19:54,55)

    நபி ஈஸா (அலை): ‘நிச்சயமாக நான் இறைவனின் அடியானாக உள்ளேன்; அவன் எனக்கு வேதத்தைக் கொடுத்துள்ளான்; இன்னும், என்னை நபியாக ஆக்கியுள்ளான். இன்னும், நான் எங்கிருந்தாலும் என்னை ஆசீர்வதிக்கப்பட்டவனாக ஆக்கியிருக்கின்றான்; மேலும், நான் உயிருடன் இருக்கும் காலமெல்லாம் தொழுகையையும், ஜகாத்தையும் (நிறைவேற்ற) எனக்கு கட்டளையிட்டிருக்கின்றான்; இன்னும் என் தாயாருக்கு நன்றி செய்பவனாக என்னை (ஏவியிருக்கின்றான்) நற்பேறு கெட்ட பெருமைக்காரனாக என்னை அவன் ஆக்கவில்லை’. (திருக்குர்ஆன் 19:30-32)

    அனைத்து நபிமார்களும் தொழுகையை சிறந்த வணக்கமாக ஏற்று, இறைவனை தொழுது வந்த செய்தியை இதன்மூலம் அறியலாம். இத்தகைய உன்னதமான தொழுகையை மறதியில் ஆழ்த்தி, அதை நிறைவேற்ற இடையூறாக இருந்த தமது ஆயிரம் குதிரைகளை நபி சுலைமான் (அலை) அவர்கள் அறுத்து குர்பானி கொடுத்தார்கள். அதற்குப் பதிலாக அவருக்கு இறைவன், குதிரையை விட வேகமாகச் செல்லும் காற்றை வசப்படுத்திக் கொடுத்தான்.

    தொழுகையை வழமையாக தொழுது வருவோருக்கு இறைவன் அனைத்தையும் அவருக்கு வசப்படுத்திக் கொடுப்பான். மேலும் அவரின் வாழ்வாதாரத்தையும் வளமாக்கி வைப்பான். அந்த அளவுக்கு தொழுகை என்பது ஏற்றமான கடமை.

    ‘நம்பி ஒப்படைக்கப்பட்ட பொருளை உரியவரிடம் எவர் திருப்பிக் கொடுக்கவில்லையோ, அவருக்கு பரிபூரண இறைநம்பிக்கை கிடையாது. எவருக்கு (உளூ) அங்க சுத்தம் இல்லையோ, அவருக்கு தொழுகை இல்லை. எவருக்கு தொழுகை இல்லையோ, அவருக்கு மார்க்கப்பற்றே கிடையாது. மார்க்கத்தில் தொழுகையின் அந்தஸ்து உடலில் தலையின் அந்தஸ்தைப் போன்றதாகும். (தலையின்றி மனிதன் உயிர் வாழ இயலாதது போல் தொழுகையின்றி மார்க்கம் எஞ்சி இருக்காது) என நபி (ஸல்) கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: இப்னு உமர் (ரலி), நூல்: தப்ரானீ)

    தொழுகை என்பது இஸ்லாமிய அடிப்படைகளில் இரண்டாவது இடத்தை பெறுகிறது. அதுகுறித்த நபிமொழிகள் வருமாறு:

    ‘இஸ்லாம் (எனும் மாளிகை) ஐந்து (தூண்கள்) மீது எழுப்பப்பட்டுள்ளது. அவை: 1) இறைவன் ஒருவன் என ஏற்பது, 2) தொழுகையைக் கடைப்பிடிப்பது, 3) ஸகாத் வழங்குவது, 4) ரமலான் மாதம் நோன்பு நோற்பது, 5) ஹஜ் செய்வது என நபி (ஸல்) கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: இப்னுஉமர் (ரலி), நூல்: புகாரி, முஸ்லிம்)

    ‘மறுமைநாளில் முதன்முதலாக தொழுகையைப் பற்றிதான் விசாரணை செய்யப்படும். அது சரியாக இருந்தால், மற்ற செயல்களும் சரியாக இருக்கும். அது சீர்குலைந்தால், மற்ற செயல்களும் சீர்குலைந்து இருக்கும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் குர்த் (ரலி), நூல்: தப்ரானீ).

    தொழுகை என்பது மனிதன், இறைவனிடம் ரகசியமாக உரையாடும் நிகழ்வாகும்.

    ‘நிச்சயமாக உங்களில் ஒருவர் தொழுகையில் நிற்கும்போது அவர் தம் இறைவனிடம் அந்தரங்கமாக உரையாடுகிறார். அவருக்கும், அவர் தொழும் திசைக்கும் இடையே இறைவன் இருக்கிறான் என நபி (ஸல்) கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அனஸ் (ரலி), நூல்: புகாரி)

    தொழுகையை நிறைவேற்றுவதால் அதிகமான நன்மைகள் கிடைக்கின்றன. அது உடல் சார்ந்த இறைநம்பிக்கையாக இருப்பதால் உடலுக்கு புத்துணர்ச்சியும், ஆரோக்கியமும் கிடைக்கிறது. தொழுகையை நிறைவேற்றுவதினால் இருஉலக நலன்கள், உடல் நலன்கள் யாவும் சுலபமாக கிடைத்து விடுகிறது. தொழுகை உலக துன்பங்களிலிருந்தும், கவலைகளிலிருந்தும் விடுபடும் களமாகும். அது இறைநேசத்தையும், இறை நெருக்கத்தையும் அதிகப்படுத்தும்.

    தொழுகை என்பது இறைவனின் கட்டளைகளை செயல்படுத்துவதின் மீது பொறுமையாக இருக்கிறோமோ? என்று சோதிக்கப்படும் ஒரு களம். மானக்கேடான காரியங்களிலிருந்து தொழுகையாளியை தடுக்கிறது. சிறு பாவங்களுக்கு பரிகாரமாகவும் அமைகிறது..

    ‘தொழுகை வெட்கக்கேடான காரியங்களை விட்டும், தீமையை விட்டும் தடுக்கும்’. (திருக்குர்ஆன் 29:45)

    ‘ஐவேளைத் தொழுகைகள் அவற்றுக்கிடையே ஏற்படும் (சிறு) பாவங்களுக்குப் பரிகாரமாகும் என நபி (ஸல்) கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அபூஹூரைரா (ரலி), நூல்: முஸ்லிம்)

    தொழுகையை விடுவதற்கு இஸ்லாத்தில் அனுமதி இல்லை. நின்று தொழமுடியாவிட்டால், அமர்ந்தும், அமர்ந்தும் முடியாவிட்டால், படுத்தும், அவ்வாறு முடியாவிட்டால், சமிக்ஞையாகவும் நிறைவேற்ற வேண்டும். தொழுகையை விட்டவன் மீது இறைவனின் கோபம் உண்டாகும்.

    ‘தொழுகையை விட்ட மனிதன், தன் மீது இறைவன் கடுங்கோபம் கொண்டிருக்கும் நிலையில் அவன் இறைவனை சந்திப்பான் என நபி (ஸல்) கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: இப்னுஅப்பாஸ் (ரலி), நூல்: தப்ரானீ)

    ‘ஒருவருக்கு ஒரு நேரத்தொழுகை தவறிவிடுவது அவருக்கு அவரது குடும்பம், அவரது செல்வம் யாவும் பறிக்கப்பட்டது போன்றாகும் என நபி (ஸல்) கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அபூஹூரைரா (ரலி), நூல்: இப்னுஹிப்பான்)

    மவுலவி அ. செய்யது அலி மஸ்லஹி, நெல்லை.
    Next Story
    ×