search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    இஸ்லாம்
    X
    இஸ்லாம்

    நபிகளாரின் தொலைநோக்கு சிந்தனை...

    போரின் முடிவு தனக்கு சாதகமாக அமையும் என்றறிந்தும், போர்களை நிறுத்தி மக்கள் உள்ளங்களை வென்று அனைவரையும் இஸ்லாத்தில் இணைந்தார்கள் என்பதை வரலாறு பறைசாட்டிக்கொண்டிருக்கிறது.
    நபிகளாரின் ஒவ்வொரு சொல்லும் செயலும், எல்லாம் வல்ல அல்லாஹ் காட்டிய வழியில், திருக்குர்ஆன் உரைத்த பாதையில் அமைந்திருந்தது.

    இறைவனின் கட்டளைக்கு ஏற்ப அவர்களின் செயல்கள் தொலைநோக்கு சிந்தனையுடன் இருந்தன. ஒரு செயலில் இறங்கும் முன்பு அதன் சாதக பாதகங்களை ஆராய்ந்து அறிந்து அதை இறைக்கட்டளைக்கு ஏற்ப செயல்படுத்தினார்கள். அதனால் தான் அவர்களின் சில செயல்கள் வெற்றியை தராதது போல தோன்றினாலும், சில காலம் கழித்து மாபெரும் வெற்றியைத்தந்தது.

    அதுகுறித்த சில நிகழ்வுகளை இங்கே காண்போம்.

    ஹிஜ்ரி 6-ம் ஆண்டுகளில் மக்காவில் உள்ள கஆபாவை தரிசிக்க நபிகளாரும், அவரது தோழர்களும் புறப்பட்டனர். இவர்களை, ஹுதைய்பிய்யா என்ற இடத்தில் இறை மறுப்பாளர்கள் நிறுத்தினார்கள். மக்காவுக்குள் நுழைய அனுமதிக்க மறுத்தனர். அப்போது இரு தரப்புக்கும் இடையே ஒரு ஒப்பந்தம் ஏற்பட்டது. அதில் நபிகளாரின் கூட்டத்திற்கு பாதகமான பல அம்சங்கள் இருந்தன. இருந்தாலும் அதை நபிகளார் ஏற்றுக்கொள்கிறார்கள்.

    ஹிஜ்ரி 8-ம் ஆண்டு. இரண்டு ஆண்டுகள் இடைவெளி விட்டு மீண்டும் மக்கா நோக்கி பயணமானார்கள். இடைப்பட்ட காலத்தில் மக்காவில் பலர் இஸ்லாத்தை ஏற்று கொள்கிறார்கள். எதிரிகளின் எண்ணிக்கை குறைந்து விட்டதால் மக்காவை நோக்கி புறப்பட்டவர்களுக்கு எந்தவித எதிர்ப்பும் இல்லை. கத்தியின்றி, ரத்தமின்றி, போரின்றி மக்கா நகரம் மாநபியின் கைகளில் பரிசாய் விழுந்தது.

    நபியவர்கள் முரண்பாடான ஒப்பந்தத்தை ஏன் ஏற்றுக்கொண்டார்கள் என அன்று எண்ணியவர்கள், இன்று நபியவர்களின் தொலைநோக்கு சிந்தனையின் மகத்துவத்தைப் புரிந்துகொண்டார்கள்.

    அல்லாஹ்வும் அதற்கான காரணத்தை திருக்குர்ஆனில் (48:25) இவ்வாறு சொல்கிறான்:

    “அவர்கள்தாம் இறைவனை நிராகரித்தவர்களும், புனிதமிகு இறையில்லத்திற்குச் செல்லவிடாமல் உங்களைத் தடுத்தவர்களும், பலியிடப்படும் ஒட்டகங்களை அவற்றின் பலி இடத்தைச் சென்றடையாமல் தடுத்தவர்களும் ஆவர். உங்களுக்குத் தெரிந்திராத இறைநம்பிக்கையாளர்களான ஆண்களும் பெண்களும் (மக்காவில்) இல்லையென்றால் அறியாத நிலையில் அவர்களை நீங்கள் நசுக்கி விடுவீர்கள்; அதனால் உங்கள் மீது குற்றம் சுமத்தப்படும் எனும் அபாயம் இல்லாதிருந்தால் (போர் நிறுத்தப்பட்டிருக்காது. அதே நேரத்தில்) அல்லாஹ் தான் நாடுபவர்களைத் தன்னுடைய கருணையினுள் நுழையச் செய்ய வேண்டும் என்பதற்காகத்தான் (போர் நிறுத்தப்பட்டது). அந்த நம்பிக்கையாளர்கள் விலகியிருப்பார்களேயானால் (மக்காவாசிகளில்) எவர்கள் இறைநிராகரிப்பாளர்களாய் இருந்தார்களோ அவர்களுக்கு நாம் நிச்சயம் கடும் தண்டனை அளித்திருப்போம்”.

    சில ஆண்டுகள் கழித்து மீண்டும் ஒரு சோதனை. மக்கா வெற்றியின் போது அங்கு இருந்து ‘ஹவாஸன்’ என்ற கூட்டத்தினர் தாயிப் நகருக்கு சென்று விட்டனர். அவர்கள் அம்பெய்வதில் திறன் கொண்டவர்கள். அவர்கள் தாயிப் நகரத்தின் ‘தஹீப்’ என்ற கூட்டத்தினருடன் சேர்ந்து இஸ்லாத்திற்கு எதிராக பெரும் படையினைத்திரட்டி, “ஹுனைன்” என்ற இடத்தில் தங்கியிருந்தனர்.

    இந்த செய்தி அண்ணல் எம்பெருமானாருக்கு அறிவிக்கப்பட்டது. சற்றும் தயங்கவில்லை நபிகள் நாயகம் (ஸல்). எதிரிகள் நம்மை தாக்குவதற்கு முன்பாகவே அவர்கள் இடத்திற்குச் சென்று நாம் அவர்களை தாக்க வேண்டும் என்று முடிவு செய்தார்கள். எண்ணிக்கையில் அதிகம் இருந்த மக்காவாசிகளும் தங்களுக்கு எளிதில் வெற்றி கிடைத்துவிடும் என்று அல்லாஹ்வின் அருளை எண்ணாமல் புறப்பட்டனர்.

    போர்க்களத்தை அடைந்த நபிகளாரின் படையினர் மீது, புதர்களிடையே பதுங்கி இருந்த எதிரிகள் சரமாரியாக அம்புகளை எய்தனர். இந்த திடீர் தாக்குதலில் நிலைகுலைந்து ஓடினர் மக்காவாசிகள்.

    போர்க்கள நிலைமை எதிரிகளுக்கு சாதகமாக அமைந்துவிடும் என்ற அபாயத்தை உணர்ந்த அண்ணல் பெருமானார் (ஸல்) அவர்கள், ஓடுகின்ற படையினரை நோக்கி உரத்தகுரலில்:

    “மக்காவாசிகளே, நீங்கள் எங்கே விரண்டோடுகிறீர்கள்? உங்கள் வசம் இறைத்தூதர் நான் இருக்கையில், அல்லாஹ்வின் உதவியில் நீங்கள் ஏன் நம்பிக்கை இழந்தீர்கள்?. அல்லாஹ் வெற்றியை நமக்கு வாக்களித்திருக்கும் போது நாம் ஏன் பயப்பட வேண்டும். திரும்பி வாருங்கள் எதிரியின் இருப்பிடம் தெரிந்து விட்டது. இலக்கை நோக்கி நாமும் அம்பு எய்வோம்? எதிரிகளை வீழ்த்துவோம்” என்றார்கள்.

    அண்ணலாரின் வீர உரையை செவிமடுத்த படையினர் புதிய உத்வேகத்துடன் திரும்பிவந்து போராடி எதிரிகளை வென்றார்கள்.

    போரின் நிலவரம் மாறத் தொடங்கியதும், ஹவாஸன் கூட்டத்தினர் அருகில் உள்ள அடர்ந்த பாலைவனத்தில் சென்று ஒளிந்துகொண்டனர். தஹீப் கூட்டத்தார்கள் தங்கள் கோட்டைக்குள் சென்று பதுங்கி கொண்டார்கள்.

    நபிகளார், யுத்தகளத்தில் எதிரிகள் விட்டுச்சென்ற பொருட்களை சேகரித்து ‘ஜாரானா’ என்ற இடத்தில் வைத்துவிட்டு, தஹீப் கூட்டத்தார் பதுங்கி இருந்த கோட்டையைச் சுற்றி முற்றுகையிட்டார்கள். முற்றுகை மூன்று வாரங்கள் தொடர்ந்தன. இன்னும் ஒரிரு நாளில் எதிரிகள் சரண் அடைந்துவிடுவார்கள் என்ற நிலை இருந்தது. அப்போது நபிகளார் திடீரென, முற்றுகையை நிறுத்திவிட்டு திரும்பி சென்று விடலாம் என்று தனது படையினருக்கு உத்தரவு போட்டார்கள்.

    நபிகளாரின் படைகள் ஜாரானா என்ற இடத்தை அடைந்தபோது, அங்கே ஏற்கனவே தோற்று ஓடிய ஹவாஸன் கூட்டத்தினர் நபிகளாரின் வருகைக்காக காத்திருந்தனர். ‘எங்களை மன்னித்து எங்களின் பொருட்களை ஒப்படைத்து விட்டால் நாங்கள் நன்றியுடையவர்களாய் இருப்போம்’ என்று விண்ணப்பித்து நின்றார்கள்.

    சற்றும் யோசிக்கவில்லை நபிகள் பெருமானார் (ஸல்) அவர்கள், “நீங்கள் அனைவரும் மன்னிக்கப்பட்டீர்கள். உங்கள் பொருட்களும் உங்களிடமே ஒப்படைக்கப்படும்” என்றார்கள்.

    நபிகளாரின் கருணை உள்ளத்தை அறிந்த அந்த மக்கள் ‘அடிமையாய் வந்த பெண்களையும் கண்ணியமாய் நடத்தினீர்கள், எங்களையும் மன்னித்தீர்கள்’ என்று சொல்லி, அவர்கள் கரம் பற்றி “இஸ்லாம் என்ற தூய மதத்தை நாங்கள் இன்று முதல் ஏற்றுக்கொள்வோம்” என்றார்கள்.

    இதை அறிந்த தாயிப் நகர மக்கள் கோட்டையிலிருந்து வெளிவந்து அவர்களும் நபிகளார் முன்னிலையில் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்கள்.

    இந்த செய்தியைப் பற்றி திருக்குர்ஆன் விவரிக்கும் போது:

    “பல போர்களில் உங்கள் எண்ணிக்கை குறைவாக இருந்தும் நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு உதவிசெய்திருக்கிறான். எனினும் ஹுனைன் போர் அன்று உங்களைப் பெருமையில் ஆழ்த்திக் கொண்டிருந்த, உங்கள் அதிகமான மக்கள் தொகை உங்களுக்கு ஒரு பலனும் அளிக்கவில்லை. நீங்கள் புறங்காட்டி ஓடவும் தலைப்பட்டீர்கள். இதன் பின்னர் அல்லாஹ் தன் தூதர் மீதும் நம்பிக்கையாளர்கள் மீதும் தன் அமைதியை இறக்கி அருள்புரிந்தான்” (திருக்குர் ஆன் 9:25-26)

    அல்லாஹ் ஒருவனால் தான் எல்லாம் நடைபெறுகிறது என்ற நம்பிக்கையில் உறுதியாய் இருக்கும் வரை வெற்றி நம் பக்கம் தான். நபிகளார் தனது தொலைநோக்கு சிந்தனையால் ஹுதைய்பிய்யா உடன்படிக்கை மூலம் மக்காவை கைப்பற்றியதோடு பலரை இஸ்லாமில் இணையச் செய்தார்கள். அதே சிந்தனைச் செறிவால் ஹுனைன் வெற்றியோடு ஏராளமானவர்களையும் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளச் செய்தார்கள்.

    போரின் முடிவு தனக்கு சாதகமாக அமையும் என்றறிந்தும், போர்களை நிறுத்தி மக்கள் உள்ளங்களை வென்று அனைவரையும் இஸ்லாத்தில் இணைந்தார்கள் என்பதை வரலாறு பறைசாட்டிக்கொண்டிருக்கிறது.

    மு.முஹம்மது யூசுப், உடன்குடி.
    Next Story
    ×