search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    நல்வழி காட்டும் நபிகள் நாயகம்
    X
    நல்வழி காட்டும் நபிகள் நாயகம்

    நல்வழி காட்டும் நபிகள் நாயகம்

    நாமும் நமது வாழ்நாட்களில் நபிகள் நாயகம் காட்டிய வழியில் செயல்பட்டால் நிச்சயம் வெற்றி பெற்று விடமுடியும் என்பதில் எவ்விதச் சந்தேகமும் இல்லை.
    பாலைவனமான அரபு நாட்டில் மெக்கா என்ற நகரில் 1500 ஆண்டுகளுக்கு முன்பு அப்துல்லாஹ், ஆமினா தம்பதியருக்கு அருந்தவப் புதல்வராய் முகம்மது பிறந்தார். ஆறுமாத குழந்தையாக இருந்தபோது தந்தையையும், ஆறு வயதை அடைந்தபோது தாயையும் இழந்துவிட்டார்.

    பெற்றோர்களை இழந்த பிள்ளைகளுக்கு தாத்தா-பாட்டிகள் தானே தக்க ஆதரவு. அவ்வாறே இவரது பாட்டனார் அப்துல் முத்தலிப் ஆரம்பத்திலும், அவரது மறைவுக்குப்பிறகு பெரிய தந்தை அபூ தாலிபும் கண்ணும் கருத்துமாக வளர்த்து வந்தார்கள்.

    முகம்மது, சிறு வயதிலேயே சுறு சுறுப்பாய் இருந்தார். கடைவீதிக்குச் செல்லும் போது அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுக்கு தேவைப்படும் பொருட்களை வாங்கித்தருபவராக இருந்தார். இதனாலேயே அவர் “அல் அமீன்” (நம்பிக்கைக்குரியவர்), “அஸ் ஸாதிக்” (உண்மைக்குரியவர்) என அனைவராலும் அன்புடன் அழைக்கப்பட்டார். சிறுவயதிலேயே அம்பு எய்தல், குதிரையேற்றம், மல்யுத்தம் போன்ற பயிற்சிகளில் நன்கு தேர்ச்சி பெற்றவராகவும் இருந்தார்.

    நபிகளார் சிறுவயதிலிருந்தே பொய், புரட்டு, கோள், இட்டுக்கட்டு என எதுவும் சொன்னதில்லை. வாய்மை தவறியதேயில்லை, கொடுத்தவாக்கு மீறியதில்லை, நம்பிக்கை மோசடி செய்ததில்லை. இப்படி நல்ல பல நற்குணங்களோடு திகழ்ந்தவர்கள் தான் நபிகள்நாயகம்.

    இதனால் தான் நபிகளாரின் நற் குணம் தனியொரு இறை வசனத்தின் மூலம் இப்படி புகழ்ந்துரைக்கப் படுகிறது: “(நபியே!) நிச்சயமாக நீங்கள் மகத்தான நற் குணமுடையவராகவே இருக்கின்றீர்கள்”. (திருக்குர்ஆன் 68:4)

    அன்னை ஆயிஷா (ரலி) அவர்களிடம் நபிகளாரின் குணம் எப்படியிருந்தது என்று கேட்கப்பட்டபோது, “அவர்களின் குணம் குர்ஆனாக இருந்தது” என்று கூறினார்கள்.

    திருக்குர்ஆன் தௌிவானது, அழகானது, அறிவுப்பூர்வமானது. அது ஆதாரப்பூர்வமானதும் கூட. அப்படியானால் அண்ணலாரின் வாழ்வும், வாக்கும் அப்படியே அழகானது, ஆதாரப்பூர்வமானது. அதில் மாற்றுக்கருத்துக்களுக்கு இடமே இல்லை.

    இதனால்தான் ஒருமெய்யான இறை பக்தனைப் பற்றி பேசும் போது நபிகளார் இவ்வாறு நவின்றார்கள்: “நற்குணத்தில் பரிபூரணமானவர்தான் ‘ஈமான்’ எனும் இறைவிசுவாசத்தில் பரிபூரணமானவர் ஆவார்” (நூல்: புகாரி).

    நபிகளாரின் சிறப்பை விளக்கும் மற்றொரு திருக்குர்ஆன் வசனம் இதோ:

    “(நம்பிக்கையாளர்களே!) நிச்சயமாக உங்களிலிருந்தே ஒரு தூதர் உங்களிடம் வந்திருக்கின்றார்; நீங்கள் துன்பத்திற்குள்ளாகி விட்டால், அதுஅவருக்கு மிக்க வருத்தத்தைக் கொடுக்கின்றது; தவிர, உங்(கள்நன்மை)களையே அவர் பெரிதும் விரும்பு கிறார்; இன்னும் நம்பிக்கையாளர்களான உங்கள் மீது மிக்க கருணையும் மிகுந்த அன்பும் உடையவராக இருக்கின்றார்”. (திருக்குர்ஆன் 9:128)

    இந்த வான்மறை வசனத்தின் அடிப்படையில் தான் தமது வாலிப வயதில் “ஹில்ஃபுல் ஃபுளூல்” என்ற பெயரில் சமூக சேவை அமைப்பு ஒன்றை ஆரம்பித்து ஏழை எளிய மக்களுக்கு நல்ல பல நற்காரியங்களை இதன் மூலம் செய்து வந்தார்கள்.

    நபிகளார் தமது பதினைந்தாம் வயதில் பெரிய தந்தையுடன் வியாபாரத்திற்காக சிரியா தேசம் சென்றதன் மூலம் வணிகம் செய்வதைக் கற்றுக்கொண்டார்கள். தமது இருபத்தைந்தாம் வயதில், நாற்பதுவயது மதிக்கத்தக்க கதீஜா என்ற வணிகச் சீமாட்டிப் பெண்ணை அவரது விருப்பத்தின் பேரில் திருமணமும் செய்து கொண்டார்கள். சுமார் இருபத்தைந்து ஆண்டுகாலம் அன்னை கதீஜாவுடன் குடும்பம் நடத்தினார்கள். இத்தம்பதியருக்கு இரண்டு ஆண் மக்களும், நான்கு பெண் மக்களும் பிறந்தார்கள். இதில் காசிம், அப்துல்லாஹ் என்ற இருவரும் தமது சிறு வயதிலேயே மரணித்து விட்டார்கள். ஜைனப், ருகைய்யா, பாத்திமா, உம்மு குல்சும் ஆகிய நால்வரும் நாயகத்தின் பெண் மக்களாவார்கள்.

    நபிகளாரின் நாற்பதாம் வயதில் நபித்துவப் பட்டம் பெற்றார்கள். அன்று முதல் “முகம்மது ரசூலுல்லாஹ்- முகம்மது அல்லாஹ்வின் இறைத்தூதர்” என்று தம்மை பிரகடனப்படுத்திக் கொண்டார். அன்றிலிருந்து சுமார் பத்தாண்டுகாலம் மெக்காவில் “இறைவன் ஒருவனே, முகம்மது கடவுளின் இறைத்தூதர்” என்ற திரு வாசகத்தை மொழிய வேண்டும் என்பதற்காகவே தொடர்ந்து போராடி வந்தார்கள். எதிர்ப்புகள் பல வலுத்த போது அருகேயுள்ள மதீனா நகருக்கு புலம் பெயரத் தொடங்கினார்கள்.

    மதீனா வந்தபின் தான் தொழுகை தொடங்கி, மனிதன் மரணித்த பின் என்ன செய்ய வேண்டும் என்பது வரையிலான எல்லாக்காரியங்களும் ஒவ்வொன்றாக விவரிக்கப்பட்டன. மது, மாது, சூது, வட்டி, திருட்டு, பெண் சிசு கொலை என ஒவ்வொன்றாக தடைசெய்யப்பட்டன. மதீனா நகர் வந்த பின்னர் தான் இஸ்லாம் இன்னும் வேகமாக பரவத் தொடங்கிற்று. பல்வேறு யுத்தங்களும் வெற்றியில் முடிந்தன. கூடவே ஊராரை மதித்து வாழ்தல் என்ற அடிப்படையில் சமய நல்லிணக்க ஒப்பந்தங்களும் புதிய சகாப்தம் படைத்தன. இந்த அளவுக்கு ஊருக்கு மட்டுமல்ல உலகத்திற்கே உழைத்து பெரும் மாற்றத்தை கொண்டு வந்தவர்கள் தான் உத்தம நபியவர்கள்.

    தமது இறுதி காலம் வரை நல்ல பல காரியங்களை தொடர்ந்து செய்து கொண்டே இருந்தார்கள். சுமார் ஒன்னேகால் லட்சத்திற்கும் மேற்பட்ட நபித் தோழர்களையும், தோழியர் களையும் ஒப்பற்ற ஒழுக்கமிக்க சீலர்களாக உருவாக்கிக் காட்டினார்கள். ஆகவே தான் அவர்களால் இப்படிச் சொல்ல முடிந்தது “என் தோழர்கள் நட்சத்திரங்களைப் போன்றவர்கள், அவர்களில் எவரைப் பின்பற்றினாலும் நிச்சயம் நீங்கள் நேர்வழி பெறுவீர்கள்” என்று.

    ‘வெட்டிய உறவுகளோடு ஒட்டி வாழ்’, ‘அநீதியிழைத்தவனை மன்னித்திடு’, ‘தீங்கு செய்தவனுக்கும் நன்மைசெய்’ என்ற நபிகளாரின் நன்மொழியை நம்மால் அவ்வளவு எளிதில் மறந்து விடமுடியுமா?. நபிகளாரின் சொல்லோவியங்கள் யாவுமே வெற்றுச்சொற்களல்ல, அவையாவுமே அனுபவப்பூர்வமான வெற்றிச்சொற்கள். எனவே நாமும் நமது வாழ்நாட்களில் நபிகள் நாயகம் காட்டிய வழியில் செயல்பட்டால் நிச்சயம் வெற்றி பெற்று விடமுடியும் என்பதில் எவ்விதச் சந்தேகமும் இல்லை.

    மவுலவி எஸ்.என்.ஆர்.ஷவ்கத் அலி மஸ்லஹி, ஈரோடு-3.
    Next Story
    ×