search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    இஸ்லாம்
    X
    இஸ்லாம்

    இறை நம்பிக்கைகளில் ஒன்றான சமாதானம் பேசுவது

    இஸ்லாமிய இறைநம்பிக்கை என்பது 70-க்கும் மேற்பட்ட கிளைகள் கொண்டது. இன்று இறை நம்பிக்கைகளில் ஒன்றான ‘சமாதானம் பேசுவது’ குறித்த தகவல்களை காண்போம்.
    இஸ்லாமிய இறைநம்பிக்கை என்பது 70-க்கும் மேற்பட்ட கிளைகள் கொண்டது. இன்று இறை நம்பிக்கைகளில் ஒன்றான ‘சமாதானம் பேசுவது’ குறித்த தகவல்களை காண்போம்.

    எது சிறந்த பேச்சு?

    பிளவுபட்ட இருநபர்களுக்கிடையில், பிரிந்து சென்ற கணவன்-மனைவிக்கிடையில், ரெண்டுபட்ட ஊர் மக்களுக் கிடையில், மோதல் ஏற்பட்ட இரு பிரிவினருக்கிடையில், கல வரத்தில் பாதிக்கப்பட்ட இரண்டு சமூகங்களுக்கிடையில், போரில் ஈடுபடும் இரண்டு நாடுகளுக்கிடையில் சமாதானமாக பேச்சுவார்த்தை நடத்தி, சமரச உடன்பாடு ஏற்படும் வரை சுமுகத்தீர்வு காண்பதுதான் பேச்சுக்களிலேயே சிறந்த பேச்சாக மதிப்பீடு செய்யப்படுகிறது.

    சமாதானம்

    இத்தகைய சமாதான நடவடிக்கைகளை இறைவன் வெகுவாக பாராட்டி மகிழ்கிறான். இது குறித்து திருக்குர்ஆன் இவ்வாறு குறிப்பிடுகிறது:

    ‘(நபியே) தர்மத்தையும், நன்மையானவற்றையும், மனிதர்களிடையே சமாதானம் செய்து வைப்பதையும் ஏவியவரைத் தவிர, அவர்களின் ரகசியப் பேச்சில் பெரும்பாலானவற்றில் எந்தவிதமான நலமும் இல்லை; ஆகவே எவர் இறைவனின் திருப்பொருத்தத்தை நாடி இதைச்செய்கின்றாரோ, அவருக்கு நாம் மகத்தான நற்கூலியை வழங்குவோம்’ (திருக்குர்ஆன் 4:114).

    இரண்டு நபர்களுக்கிடையில் உறவில் விரிசல் ஏற்பட்டால், அந்த விரிசலை பூதாகரமாக்கக் கூடாது. இருவருக்கிடையில் சமாதானத்தை நிலவச்செய்ய வேண்டும் என்பது இறைவனின் கட்டளை. இதையே திருக்குர்ஆன் இவ்வாறு விளக்குகிறது:

    ‘இறைவனை அஞ்சுங்கள், உங்களுக்கிடையே உள்ள உறவு களைச் சீர்படுத்திக் கொள்ளுங்கள்’ (திருக்குர்ஆன் 8:1).

    ஒரு குடும்பத்தில் பிரச்சினை என்று வரும்போது அவர்கள் அழைக்காமலேயே ஒருவர் சமாதானம் ஏற்படுத்த செல்வது நபி (ஸல்) அவர்களின் வழிமுறையாக உள்ளது. இதை இந்த நபிமொழி மூலம் அறியலாம்:

    ‘அம்ர் பின் அவ்ப் குடும்பத்தைச் சேர்ந்த சிலருக்குள் ஏதோ தகராறு இருந்து வந்தது. எனவே அவர்களிடையே சமாதானம் செய்து வைப்பதற்காக அவர்களை நோக்கி நபி (ஸல்) அவர்கள் தம் தோழர்களில் சிலருடன் சென்றார்கள்’ (அறிவிப்பாளர்: ஸஹ்ல் பின் ஸஅத் (ரலி), நூல்: புகாரி)

    தடை கூடாது

    நன்மைபுரிய, இறைவனை அஞ்ச, மக்களிடையே சமா தானத்தை ஏற்படுத்த எதுவும் தடையாக இருக்கக்கூடாது. நாமும் நமக்கு நாமே தடையையும் ஏற்படுத்திவிடக்கூடாது என்பதை இந்த திருக்குர்ஆன் வசனம் மூலம் அறியலாம்:

    ‘நன்மை செய்வதற்கும், (இறைவனை) அஞ்சுவதற்கும், மக்களிடையே சமாதானத்தை ஏற்படுத்துவதற்கும் உங்கள் சத்தியங்கள் மூலம் இறைவனை ஒரு தடையாக ஆக்காதீர்கள். இறைவன் செவியுறுபவன்; அறிந்தவன்’ (திருக்குர்ஆன் 2:224).

    இரண்டு குழுவினருக்கிடையில் சண்டையிட நேர்ந்தால் சமாதானம் ஏற்படுத்த வேண்டும் என்பதை பின்வரும் நிகழ்வு மூலம் அறியலாம்:

    ‘நபி (ஸல்) அவர்களிடம், ‘தாங்கள் அப்துல்லாஹ்பின் உபையிடம் வந்தால் நன்றாக இருக்கும்’ என்று கூறப்பட்டது. நபி (ஸல்) அவர்கள் அவனிடம் செல்ல ஒரு கழுதையில் ஏறினார்கள். நபிகளுடன் மற்றவர்களும் நடந்து சென்றார்கள். அவர்கள் சென்ற பாதை உவர் நிலமாக இருந்தது. அவனை நபியவர்கள் அடைந்த போது அவன் ‘தூர விலகிப் போ, இறைவனின் மீதாணையாக, உமது கழுதையின் துர்நாற்றம் என்னைத் துன்புறுத்திவிட்டது’ என்று கூறினான்.

    அப்போது ஒரு அன்சாரித் தோழர் ‘இறைவனின் மீதாணை, இறைவனின் தூதருடைய கழுதை உன்னைவிட நல்ல வாசனையுடையதாகும்’ என்றார்.

    அப்துல்லாஹ்வுக்காக அவனது சமுதாயத்தைச் சார்ந்த ஒருவர் ஆத்திரமடைந்து அந்த அன்சாரித் தோழரை ஏசினார். அந்த இருவருக்காகவும் அவரவருடைய நண்பர்கள் கோபம் அடைந்து, தங்களுக்கிடையே ஈச்சங்கிளையின் குச்சியாலும், கைகளாலும் அடித்துக்கொண்டார்கள். அப்போது இரண்டு குழுவினருக்கிடையே சமாதானம் செய்து வையுங்கள் என்று பின்வரும் இறைவசனம் அருளப்பட்டது.

    ‘நம்பிக்கை கொண்டோரில் இரண்டு கூட்டத்தினர் சண்டையிட்டுக் கொண்டால், அவர்களுக்கிடையே சமாதானத்தை ஏற்படுத்துங்கள். அவர்களில் ஒருவர் மற்றொருவரின் மீது வரம்பு மீறினால், வரம்பு மீறிய கூட்டம் இறைவனின் கட்டளையை நோக்கித் திரும்பும் வரை அவர்களை எதிர்த்துச் சண்டையிடுங்கள். அக்கூட்டத்தினர் திருந்தினால் நீதியான முறையில் இரு குழுவினருக்கிடையே சமா தானத்தை ஏற்படுத்துங்கள். நீதி செலுத்துங்கள், நீதி செலுத்துவோரை இறைவன் விரும்பு கிறான்’ (திருக்குர்ஆன் 49:9).

    கணவன்-மனைவி

    கணவன்-மனைவிக்கிடையே சமாதானம் ஏற்படுத்துவது குறித்த இறைவசனம் வருமாறு:

    “ஒரு பெண், தன் கணவன் (தன்னை வெறுத்து) முகம் சுளிப்பான் என்றோ, (தன்னைப்) புறக்கணிப்பான் என்றோ அஞ்சினால், அவள் சமாதானமாக செல்லவேண்டும். கணவன்-மனைவி இருவரும் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து தங்களுக்கிடையே சமாதானம் செய்து கொள்வதில் தவறேதும் இல்லை. மேலும், சமாதானம் செய்து கொள்வதே நன்மையானதாகும்” (திருக்குர்ஆன் 4:128).

    சமாதானம் என்பது பலவிதமான பிரச்சினைகளையும், பலவிதமான சிக்கல்களையும் தீர்த்து வைக்கும் ஒரு கேடயமாக விளங்குகிறது. எல்லாப் பிரச்சினைகளுக்கும் தீர்வு சமா தானத்தில்தான் அமைந்துள்ளது. எனவேதான் இஸ்லாம் சமா தானத்தை இறைநம்பிக்கையுடன் பொருத்திப் பார்க்கிறது.

    சமாதானம் ஏற்படுத்துவது சாதாரணமானது அல்ல. அது சாதுர்யமாக, சாமர்த்தியமாக, சாந்தமாக, சமயோசிதமாக நடப்பவர்களின் கைகளில் உள்ளது. அவர்களின் வார்த்தைகளில், அவர்களின் செயல்பாடு களில், அவர்கள் அனைவரையும் அரவணைத்துச் செல்லும் போக்கில்தான் உள்ளது.

    ஆதலால்தான் இஸ்லாம் சமாதானம் பேசுவதை உடல் சார்ந்த இறைநம்பிக்கையாக பாவிக்கிறது. இஸ்லாம் என்றால் சாந்தி, சமாதானம் என்று பொருள். முஸ்லிம்கள் என்றால் சாந்தமானவர்கள், சமாதானமாக செல்லக்கூடியவர்கள் என்று அர்த்தம். இது பெயரளவில் மட்டும் பிரதி பலிக்கக் கூடாது. செயலிலும் எதிரொலிக்க வேண்டும்.

    இன்றைய காலகட்டத்தில் பொருளாதார பிரச்சினையில், ஜாதி, மத பிரச்சினையில், அரசியலில், ராணுவ நடவடிக்கையில், சமூக ஒற்றுமையில் சமாதானம் முக்கிய பங்கு வகிக்கிறது. உலக சமாதானத்தின் தூதுவராக இஸ்லாம் திகழ்கிறது. அதன் தூதராக முஹம்மது நபி (ஸல்) திகழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் அண்டை நாட்டவருடனும், தூரமான நாட்டவருடனும் என்றென்றும் சமாதானமாகவே சென்றார்கள்; செல்லும் வழியை காட்டினார்கள்.

    ஹூதைபிய்யா நிகழ்ச்சியின் போது நபி (ஸல்) அவர்கள் மக்கா நாட்டவர்களான இணை வைப்பவர்களுடன் மூன்று நிபந்தனைகளின் பேரில் போர் தடுப்பு நடவடிக்கை எனும் சமாதான ஒப்பந்தம் செய்தார்கள்.

    அவை: 1) மக்காவிலிருந்து மதீனாவுக்கு வருபவரை அவர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டாலும் கூட அவரை எங்களிடமே திருப்பியனுப்ப வேண்டும். மதீனாவிலிருந்து மக்காவிற்கு வரும் முஸ்லிம்களை நாங்கள் திருப்பியனுப்பமாட்டோம்.

    2) இந்த ஆண்டு ‘உம்ரா’ செய்யக்கூடாது. அடுத்த ஆண்டு ‘உம்ரா’ செய்ய மக்காவினுள் நுழைந்து, மூன்று நாட்கள் தங்கலாம்.

    3) வாள், வில் போன்ற ஆயுதங்களை உறையிலிட்டுக் கொண்டு தான் மக்காவினுள் நுழைய வேண்டும்.

    இந்த ஒப்பந்தம் முஸ்லிம்களுக்கு எதிராக இருந்தும் நபியவர்கள் இதற்கு இசைவு தெரிவித்த காரணத்தினால்தான் மக்காவில் புனித இஸ்லாம் பரவ இந்த சமாதான நடவடிக்கை காரணமாக அமைந்திருந்தது. வணக்கத்தை விட இணக்கமாக செல்வதுதான் சிறந்தது என இஸ்லாம் சமாதான சிந்தனைகளை விதைக்கிறது.

    இதுகுறித்த நபிமொழி வருமாறு:

    ‘‘நோன்பின் அந்தஸ்தைவிட, தொழுகையின் படித்தரத்தைவிட, தானதர்மத்தின் மேன்மையை விட சிறந்த ஒரு செயலை நான் உங்களுக்கு கூறட்டுமா?’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது ‘ஆம், கூறுங்கள் இறைத்தூதர் அவர்களே’ என நபித்தோழர்கள் பதில் கூறினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறினார்கள்: ‘உங்களுக்கு இடையே சமாதானத்தை ஏற்படுத்துவது. உங்களுக்கிடையே குழப்பத்தை ஏற்படுத்துவது மார்க்கத்தை சிதைத்து விடும்’ (அறிவிப்பாளர்: அபூதர்தா (ரலி), நூல்: தர்கீப்)

    ஜாதிமதக் கலவரம் இல்லாத, உலகப் போர் இல்லாத, இனவெறி, நிறவெறி, மொழிவெறி, மதவெறி, ஜாதிவெறி இல்லாத சமத்துவ உலகை படைக்க உறுதியான நடவடிக்கை சமாதான நடவடிக்கை மட்டுமே.

    சமாதான நெறிகள் உலகை ஆளட்டும்,

    சமூக, சமுதாய, சமய வெறிகள் வீழட்டும்,

    வீழ்வது வெறிகளாகட்டும், வாழ்வது நாமாகட்டும்.

    மவுலவி அ. செய்யது அலி மஸ்லஹி, நெல்லை.
    Next Story
    ×