search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    இறைவனின் விருப்பத்திற்குரிய செயல் எது?
    X
    இறைவனின் விருப்பத்திற்குரிய செயல் எது?

    இறைவனின் விருப்பத்திற்குரிய செயல் எது?

    யாருக்கும் எவ்வித தீங்கும் இழைக்காமல் எல்லோரிடத்திலும் நீதமாக நடந்து கொள்ள வேண்டும். நீதியாக, நியாய உணர்வுடன் யார் நடக்கிறார்களோ அவர்களைத்தான் இறைவனும் நேசிக்கிறான்.
    ‘நம்பிக்கை கொண்டோரே! உங்களுக்கோ, பெற்றோருக்கோ! உறவினருக்கோ பாதகமாக இருந்தாலும் நீங்கள் நீதியை நிலைநாட்டுவோராகவும், அல்லாஹ்வுக்காக சாட்சி கூறுபவராகவும் ஆகிவிடுங்கள். (வாதியோ, பிரதிவாதியோ) செல்வந்தராக இருந்தாலும், ஏழையாக இருந்தாலும் அவ்விருவருக்கும் அல்லாஹ்வே பொறுப்பாளன். நீதி வழங்குவதில் மனோ இச்சையைப் பின்பற்றாதீர்கள். நீங்கள் (சாட்சியத்தைப்) புரட்டினாலோ, புறக்கணித்தாலோ நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவனாக இருக்கிறான்’ என்று திருக்குர்ஆன் (4:135) குறிப்பிடுகிறது.

    மனிதர்களில் அனைவரும் சமம், அனைவருக்கும் சமநீதி என்பதே இஸ்லாம் வழங்கும் நீதிமுறையாகும். பணக்காரன்- ஏழை, உயர்ந்தவன்-தாழ்ந்தவன், வெள்ளையன்-கருப்பன் என்ற எந்தவித பாகுபாட்டையும் இஸ்லாம் கடுமையாக எதிர்க்கிறது. அதன் காரணமாக நிகழும் அநீதியையும் கண்டிக்கிறது. நீதியை அனைவருக்கும் சமமானதாக வழங்க வேண்டும் என்பதே இஸ்லாத்தின் கட்டளை.

    ‘நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு, நீதிக்குச் சாட்சிகளாக ஆகிவிடுங்கள். ஒரு சமுதாயத்தின் மீதுள்ள பகை நீங்கள் நீதியாக நடக்காமலிருக்க, உங்களை தூண்ட வேண்டாம். நீதியாக நடங்கள்’ என்று திருக்குர்ஆன் (5:8) குறிப்பிடுகிறது.

    ஒரு சமூகத்தின் மீது பகையே இருந்தாலும் அந்த சமூகத்திற்கு எதிராக அநீதியாக நடந்து கொள்ளாமல் நீதியோடு நடந்து கொள்ள வேண்டும் என்பதையே மேற்கண்ட இறைவசனம் சொல்கிறது.

    இன்றைய காலத்தில் பார்த்துக்கொண்டிருக்கிறோம். எங்கும், எதிலும் அநீதிதான். தனி மனிதனிடம், சமூகத்திடம், அரசாங்கத்திடம் என எல்லா இடங்களிலும் ஒருதலைபட்சமான பாகுபாடுகள் நிறைந்திருக்கின்றன. அவர் களின் செயல்பாடுகளே அதை தெளிவாக உணர்த்திவிடுகின்றன.

    உதாரணமாக ஒன்றை பார்ப்போம். அருகருகே வசிக்கும் இரு வீட்டாருக்கும் இடையே ஒரு பிரச்சினை ஏற்படுகிறது. இரு குடும்பத்தாரும் அமர்ந்து பேசுகிறார்கள். ஆனால் தீர்வு எட்டப்படவில்லை. பிறகு ஊர் பெரியவர்களின் முன்னிலையில் பஞ்சாயத்து செய்கிறார்கள். அங்கு எப்படி முடிவு எடுக் கிறார்கள் என்பது யாவரும் அறியாதது அல்ல. பெரும்பாலும் பணக்காரர்களுக்கும், தெரிந்தவர்களுக்கும் சாதகமாகவே அந்த முடிவு இருக்கிறது. இதுபோன்ற செயல்களை எல்லாம் இஸ்லாம் ஏற்றுக்கொள்ளவில்லை. மாறாக, வன்மையாக கண்டிக்கிறது.

    இன்று அனைத்து மக்களிடத்திலும் தெரிந்தோ தெரியாமலோ பாரபட்சமாக நடக்கும் குணம் குடிகொண்டிருக்கிறது. மற்றவர்கள் மூலம் தனது குழந்தைக்கு பிரச்சினை என்றால் அதற்கு ஒரு நிலைபாடும், தனது குழந்தையின் மூலம் பிறருக்கு பிரச்சினை என்றால் வேறு நிலைபாடும் எடுக்கிறார்கள். இது அநீதியானது; ஏற்றுக்கொள்ள முடியாதது.

    நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வாறு நடந்து கொள்ள சொல்லவில்லை. மாறாக இதுபோன்ற செயல் வழிகெட்ட முன்னோர்களின் செயல் என்று கண்டிக்கிறார்கள்.

    ‘உங்களுக்கு முன் சென்றவர்கள், தங்களில் உயர்ந்தவர் திருடினால் அவரை விட்டுவிடுவார்கள். பலவீனர் திருடினால் அவருக்கு தண்டனை நிறைவேற்றுவார்கள். அதனால் அவர்கள் நாசமாயினர். அல்லாஹ்வின் மீது ஆணையிட்டுச் சொல்கிறேன். இந்த முஹம்மதின் மகள் பாத்திமா திருடினாலும் அவரது கையை நான் வெட்டுவேன்’ என நீதி எப்படி வழங்கப்பட வேண்டும் என்பதை நபியவர்கள் சொல்லி இருக்கின்றார்கள்.

    ஆள் பார்த்து நீதி வழங்குவதை அவர்கள் கண்டிக்கிறார்கள். மற்றவர்கள் விஷயத்தில் மட்டுமல்ல உங்கள் குழந்தைகள் விஷயத்திலும் நீதமாக நடந்து கொள்ள வேண்டும் என்பதே நபிகளாரின் வலியுறுத்தலாகும்.

    ‘உங்கள் குழந்தைகள் விஷயத்தில் நீதமாக நடக்க வேண்டும். யாருக்கும் எவ்விதத்திலும் அநீதம் இழைத்துவிடக் கூடாது’ என்பது நபியவர்கள் அறிவுரையாகும்.

    இன்று எதார்த்தத்தில் ஆண் குழந்தைகளிடம் அதிக பாசமும், பெண் குழந்தைகளிடம் குறைந்த பாசமும் காட்டி வளர்க்கிறோம். அழகான குழந்தை, அழகில்லாத குழந்தை என்ற பாகுபாடும் இருந்து வருகிறது. இது களையப்பட வேண்டிய மோசமான குணமாகும்.

    இன்று பல பிரச்சினைகள் இருந்து வருகின்றன. அதில் முதன்மையாக இருப்பது நிலப்பிரச்சினைதான். தனக்கு எவ்வளவு சொத்துக்கள் இருந்தாலும் அடுத்தவர்களுடைய நிலங்களை ஆக்கிரமிப்பது அதிகரித்து வருகிறது. இந்த விஷயத்தில் அநீதியாக நடந்து கொள்பவர்கள் அல்லாஹ்விடம் அஞ்சிக்கொள்ள வேண்டும். அப்படிப்பட்டவர்களுக்கு இறைவன் கடுமையான வேதனையை வழங்குகின்றான்.

    ‘ஓர் அங்குல அளவு நிலத்தை அநியாயமாக அபகரித்துக் கொள்கிறவனின் கழுத்தில் ஏழு நிலங்களாக மாலையாக (மறுமையில்) கட்டித் தொங்க விடப்படும்’ என்று எச்சரிக்கையை நபியவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

    ‘அநீதி இழைக்கப்பட்டவரின் சாபத்திற்கு அஞ்சுங்கள். ஏனெனில் அதற்கும் அல்லாஹ்வுக்கும் இடையே எந்தத் திரையுமில்லை’ என்பதும் நபியவர்களின் எச்சரிக்கை செய்திதான்.

    பாதிக்கப்பட்டவர்கள் இறைவனிடம் வேண்டுவது உடனே அங்கீகரிக்கப்படும் என்பதே அதன் பொருளாகும். எனவே யாருக்கும் எவ்வித தீங்கும் இழைக்காமல் எல்லோரிடத்திலும் நீதமாக நடந்து கொள்ள வேண்டும். நீதியாக, நியாய உணர்வுடன் யார் நடக்கிறார்களோ அவர்களைத்தான் இறைவனும் நேசிக்கிறான்.
    Next Story
    ×