search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    இறைவன் தரும் எச்சரிக்கை
    X

    இறைவன் தரும் எச்சரிக்கை

    தவறு செய்யும் மனதினை இறைவன் மன்னிக்கும் குணம் கொண்டவனாகவே இருக்கின்றான். அவன் செய்யும் தவறுகள் தொடரும் போது சிறிய சிறிய தண்டனைகள் கொடுத்து அவனை எச்சரிக்கை செய்கின்றான்.
    எல்லாம் வல்ல அல்லாஹ் மிகவும் கிருபை நிறைந்தவன், மன்னிக்கும் குணம் கொண்டவன். அவன் மனிதர்களை படைத்ததே தன்னை வணங்க வேண்டும், தான் வகுத்த வழியில் வாழ்ந்து சொர்க்கம் செல்ல வேண்டும் என்பதற்குத்தான்.

    தவறு செய்யும் மனிதனை தண்டிக்க வேண்டும் என்பது இறைவனின் நோக்கம் அல்ல. மாறாக தான் படைத்த இந்த மனித இனம் தனது கட்டளைப்படி நடக்கிறதா? என்பதை சோதிக்கவே இந்த உலக வாழ்க்கையை மனித இனத்திற்கு இறைவன் கொடுத்துள்ளான்.

    இதையே திருக்குர்ஆன் இவ்வாறு குறிப்பிடுகிறது: ‘இறைவன் மரணத்தையும் வாழ்வையும் ஏற்படுத்தினான்: உங்களில் யார் மிகச் சிறந்த செயல் புரியக்கூடியவர் என்று உங்களைச் சோதிக்கும் பொருட்டு. மேலும் எவன் வல்லமை மிக்கவனாகவும் பெரும் மன்னிப்பாளனாகவும் இருக்கின்றான்’(திருக்குர்ஆன் 69:2)

    இதனால் தான் நாம் செய்யும் தீமையான எந்த செயல்களுக்கும் உடனடி தண்டனை என்பது கிடையாது. ஏன்எனில் இறைவன் கூறுகிறான், ‘என் அருள், என் கோபத்தை முந்திவிட்டது’ என்று.

    தவறு செய்யும் மனதினை இறைவன் மன்னிக்கும் குணம் கொண்டவனாகவே இருக்கின்றான். அவன் செய்யும் தவறுகள் தொடரும் போது சிறிய சிறிய தண்டனைகள் கொடுத்து அவனை எச்சரிக்கை செய்கின்றான். அப்போதும் மனிதன் தன்னைமாற்றிக்கொள்ளவில்லை என்றால் இவ்வுலகிலும், மறுமையிலும் அவனுக்கு கடும் தண்டனை அளிக்கின்றான்.

    எனவே முதலில் இறைவன் தரும் எச்சரிக்கையை உணர்ந்து கொண்டு, அவன் குறைவான தண்டனை தரும் போதே நம்மை திருத்திக்கொள்ள வேண்டும். இதன் மூலம் மறுமை நாளில் காத்திருக்கும் மிக மோசமான தண்டனையில் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள முடியும், நரகத்தில் இருந்தும் விடுதலை பெறலாம்.

    இதற்கு நாம் செய்ய வேண்டியது நமது வாழ்நாளில் இறைவணக்கத்தில் கவனம் செலுத்த வேண்டும். நற்செயல்களை அதிகப்படுத்திக்கொண்டே இருக்க வேண்டும். இதற்கு இந்த ரமலான் மாதம் நமக்கு வழிகாட்டுகிறது.

    ரமலான் மாதத்தில் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் எப்படி வாரி வழங்கினார்கள் என்பது குறித்து இப்னு அப்பாஸ்(ரலி) இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்:

    ‘இறைத்தூதுர்(ஸல்) அவர்கள் மக்களிலேயே அதிகமாக வாரி வழங்கக்கூடியவர்களாக இருந்தார்கள்: ரமலான் மாதத்தில் அவர்களை ஜிப்ரீல்(அலை) அவர்கள் சந்திக்கும் வேளையில் (வழக்கத்தை விட) அதிகமாக வாரி வழங்குவார்கள். ஜிப்ரீல் (அலை) அவர்கள் ரமலான் மாதத்தில் ஒவ்வொர் இரவிலும் நபி(ஸல்) அவர்களை சந்தித்து (அதுவரை அருளப்பட்டிருநத) குர்ஆனை அவர்களுக்கு (ஓதிக்காட்டிக்) கற்றுத் தருவார்கள். ஜிப்ரீல் (அலை) அவர்கள், நபி(ஸல்) அவர்களை சந்திக்கும் போது அவர்கள் மழைக்காற்றை விட அதிகமாக (மக்களுக்கு நன்மையை வாரி வழங்கும் கொடையாளராகத் திகழ்வார்கள்.

    புதிதமான இந்த ரமலானில் நாமும் வாரிவழங்குபவர்களாக மாறுவோம். பாவங்களை விட்டு விலகி நன்மைகளை நாளும் பெறுவோம்.

    வடகரை ஏ.முஹம்மது இஸ்மாயில் காஷிபி, தாங்கல், சென்னை.
    Next Story
    ×