search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    முழு மனித குலத்துக்கும் வழிகாட்டி
    X

    முழு மனித குலத்துக்கும் வழிகாட்டி

    குர்ஆனை சாதாரண புத்தகத்தைப் போன்று வாசிக்காமல், பொருள் உணர்ந்து, சிந்தனை செய்து, பகுப்பாய்வு செய்தால் மட்டுமே குர்ஆனின் முழுப் பலனையும் பெற முடியும்.
    குர்ஆன் யாரால் அருளப்பட்டது? எதற்காக அருளப்பட்டது? குர்ஆனை எப்படி படிக்க வேண்டும்? இத்தகைய கேள்விக்கு குர்ஆனே விடை அளித்து குர்ஆனை அணுகும் முறையை நமக்குக் கற்றுத் தருகிறது. குர்ஆன் என்ற அரபிச் சொல்லுக்கு “ஓதப்படுவது” என்று பொருள். ஓதி உணர்வதற்காக அருளப்பட்டது குர்ஆன்.
    குர்ஆன் மனித இனத்திற்கு ஒரு வழிகாட்டி நூலாகும். (2:2)

    இது உலக மக்கள் அனைவருக்கும் ஒரு நல்லுரையாகவே திகழ்கிறது. (68:52)

    நேர்வழியை தெளிவாக அறிவிக்கக்கூடியது, சத்தியத்தையும் அசத்தியத்தையும் பிரித்துக் காட்டக்கூடியது. (2:185)

    மனிதர்களை இருளிலிருந்து ஒளிக்கு கொண்டு வரும் நூல். (5:15)

    கொடுமைக்காரர்களுக்கு எச்சரிக்கை, நல்ல நடத்தை கொண்டவர்களுக்கு நற்செய்தி (46:12)

    இறைவனிடமிருந்து வந்துள்ள தெளிவான சான்று (6:104)

    இறைநம்பிக்கையாளர்களின் (இதய நோய்க்கு) நிவாரணமாகவும் அருளாகவும் உள்ளது. (17:82)

    எனவே குர்ஆன் என்பது மனித குலம் முழுமைக்கும் ஒரு வழிகாட்டியாக அருளப்பட்ட நூலாகும். மனிதன் வாழ்வில் சந்திக்கும் தனிப்பட்ட பிரச்சினைகள், ஆன்மிகம், அரசியல், பொருளாதாரம், சட்டம், நீதி என எல்லாத் துறைகளுக்கும் தேவையான அடிப்படைகளை கூறுகிறது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குர்ஆனின் போதனைகளின்படி வாழ்ந்து காட்டி ஒரு சமூக அமைப்பையும் நிறுவினார்கள். குர்ஆனுக்கு விளக்கமாக நபிகள் நாயகத்தின் வாழ்வும், வாக்கியமும் அமைந்துள்ளது. இறைவேதத்தையும் நபிகளாரின் வாழ்வையும், வாக்கையும் வாசிக்கும்போது ஒரு தெளிவான வழிகாட்டுதல் கிட்டும். எனவே குர்ஆனை ஆழ்ந்து வாசிக்குமாறும், சிந்திக்குமாறும் மனிதர்களுக்கு குர்ஆன் கட்டளையிடுகின்றது.

    “இவர்கள் குர்ஆனை சிந்தித்துப் பார்க்க வேண்டாமா? அவர்களின் இதயத்தின் மீது பூட்டுகள் போடப்பட்டிருக்கின்றனவா?” (47:24)
    “இது பாக்கியம் நிறைந்த வேதமாகும். மக்கள் இந்த வசனங்களை சிந்திக்க வேண்டும். அறிவுடையோர் இதிலிருந்து படிப்பினை பெறவேண்டும் என்பதற்காக (அருளப்பட்டது)” (38:29)

    சிந்திக்க தூண்டும் இதுபோன்ற ஏராளமான வசனங்கள் திருக்குர்ஆனில் உள்ளன. எனவே குர்ஆனை சாதாரண புத்தகத்தைப் போன்று வாசிக்காமல், பொருள் உணர்ந்து, சிந்தனை செய்து, பகுப்பாய்வு செய்தால் மட்டுமே குர்ஆனின் முழுப் பலனையும் பெற முடியும். அப்போது தான் அது வாழ்க்கைக்கு வழிகாட்டியாக அமையும்.

    டாக்டர் கே.வி.எஸ். ஹபீப் முகம்மது, சென்னை.
    Next Story
    ×