என் மலர்

  ஆன்மிகம்

  இஸ்லாம்: குழந்தைகள் செல்வப்பொக்கிஷம்
  X

  இஸ்லாம்: குழந்தைகள் செல்வப்பொக்கிஷம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  குழந்தை பராமரிப்பு பற்றி பல இடங்களில் இஸ்லாம் குறிப்பிட்டுள்ளது. அதை செயல்படுத்துவது பெற்றோர்களின் கடமை எனவும் கூறுகிறது.
  நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அமர்ந்திருக்கும் போதும், தொழும்போதும் அவரது பேரக்குழந்தைகள் ஹஸனும், ஹுசைனும் அவரது கால்களுக்கிடையேயும், கழுத்தில் ஏறியும் விளையாடுவார்கள்.

  இதைப்பார்த்த தோழர்கள், ‘இறைத்தூதரே இந்த அளவுக்கா இருவரையும் நீங்கள் விரும்புகிறீர்கள்?’ எனக்கேட்டார்கள்.

  அதற்கு நபிகளார், ‘ஏன் இல்லை? இவர்கள் இருவரும் என்னுடைய இவ்வுலக செல்வம் இல்லையா?’ என்றார்கள்.

  நபிகள் நாயகம் தனது பேரக்குழந்தைகள் மீது காட்டிய அன்பின் வெளிப்பாடுதான் இச்சம்பவம். இதுபோன்று எத்தனையோ உதாரணங்களை சொல்லிக்கொண்டே போகலாம். குழந்தைகளை அன்பொழுக நேசித்தவர்கள் நபிகள் நாயகம்.

  குழந்தைகள் இவ்வுலகத்தில் கிடைத்த எல்லா செல்வங்களை விடவும் மேலானவர்கள். தன்னை சுற்றி இருப்பவர்களை பார்த்தே தனது பேச்சை, செயலை அமைத்துக்கொள்பவர்கள். குழந்தைகளின் செயல் களுக்கு பொறுப்புதாரியாக பெற்றோர்களே இருக் கிறார்கள். அதனால் குழந்தைகளை எப்படி வளர்க்க வேண்டும். அவர்களுக்கு எதுமாதிரியான செயல்களை கற்றுக்கொடுக்கவேண்டும் என்ற புரிதல், அக்கறை பெற்றோர்களுக்கு இருத்தல் வேண்டும்.

  குழந்தை பராமரிப்பு பற்றி பல இடங்களில் இஸ்லாம் குறிப்பிட்டுள்ளது. அதை செயல்படுத்துவது பெற்றோர்களின் கடமை எனவும் கூறுகிறது. குழந்தைகள் தந்தையைவிட தாயிடமே அதிக நேரத்தை செலவிடுகின்றன. குழந்தை வளர்ப்பில் தந்தையைவிட தாய்க்கு அதிக கடமைகளும், பொறுப்புகளும் இருக்கின்றன.

  ‘தன் குழந்தையை பராமரிப்பதற்காக ஒரு தாய்க்கு கிடைக்கும் கூலி பகலெல்லாம் நோன்பு நோற்று இரவெல்லாம் நின்று வணங்கும் ஒருவருடைய கூலியை போன்றது’ என்கிறார்கள் நபிகள் நாயகம்.

  நோன்பு நோற்பதும், இறைவனை தொழுது வணங்குவதும் இஸ்லாமிய கடமைகளில் ஒன்று. அதற்கு நிகரான நன்மையை தன் குழந்தையை பராமரிப்பதற்கு இஸ்லாம் வழங்குகிறது என்பதிலிருந்தே குழந்தை வளர்ப்பிற்கு இஸ்லாம் எவ்வளவு முக்கியத்துவம் தரு கிறது என்பதை உணர்ந்துகொள்ளலாம்.

  பெற்றோர்கள் தன் குழந்தை நன்கு படிக்க வேண்டும், நிறைய செல்வங்களை ஈட்ட வேண்டும், வாழ்வில் முன்னேற வேண்டும் என்று நினைப்பதுபோல் நல்லொழுக்கம் உள்ளவர்களாக, நற்சிந்தனை நிறைந்தவர்களாக வளர வேண்டும் என்றும் நினைக்க வேண்டும். அதற்கான செயற்காரியங்களிலும் இறங்க வேண்டும்.

  ‘இரண்டு கைநிறைய (பொருட்களை தினமும்) தர்மம் செய்வதைவிட ஒரு தந்தை தன் மகனுக்கு நல்லொழுக்கம் கற்றுக் கொடுப்பதே அல்லாஹ்விடம் சிறந்தது’ என நபிகள் நாயகம் கூறினார்கள்.

  ‘தர்மம் தலைகாக்கும்’ என்று சொல்வார்கள். ஆனால் தர்மத்தைவிட கூடுதலான சிறப்பை குழந்தைகளுக்கு நல்லொழுக்கம் கற்றுத்தருவதற்கு கொடுக் கிறார்கள், நபிகளார். நல்லொழுக்கத்துடன் வளரும் குழந்தைகளால்தான் சிறந்த சமுதாயத்தை கட்டி எழுப்பிட முடியும் என்று அவர்கள் எண்ணினார்கள்.  மனிதர்கள் தவறு இழைக்கக்கூடியவர்களாக இருக்கிறார்கள். அதிலும் குழந்தைகள் தவறு செய்பவர்கள்தான். அதற்காக அவர்களை அடிப்பதும், திட்டுவதும், அதன்மூலம் அவர்களை திருத்திவிடலாம் என்று நினைப்பதும் தவறானதாகும்.

  குழந்தைகளின் வளர்ப்பில் கூடுதல் அக்கறையும், பொறுமையான அறிவுறுத்தலுமே குழந்தைகளுக்கு போதுமானது. கறாராக நடந்துகொண்டால் மட்டுமே அவர்களை கட்டுக்குள் வைத்துக்கொள்ள முடியும் என்று நினைப்பது எதிர்மறையான விளைவுகளை ஏற் படுத்தி விடும்.

  ஒருவரின் தவறை அழகிய முறையில் சுட்டிக்காட்டு வதற்கும், திருத்துவதற்கும் நபிகள் நாயகம் பல அணுகுமுறைகளை கடைப்பிடித்திருக்கிறார்கள்.

  ஒருமுறை பிலால் (ரலி) அவர்கள் ‘பாங்கு’ (தொழுகைக்கான அழைப்பு) சொல்லும்போது அபுமஸ்தூரா என்பவர் அதை கிண்டல் செய்கிறார். இச்செய்தி நபிகள் நாயகத்திற்கு எட்டுகிறது. இதற்காக கோபப்பட்டு அவரை அழைத்து கண்டிக்கவில்லை. என்ன செய்தார்கள் தெரியுமா?

  அபுமஸ்தூரை அழைத்தார்கள், ‘உனது குரல் அழகாக இருக்குமாமே. எங்கே நான் உனக்கு பாங்கு சொல்ல கற்றுத்தரட்டுமா?’ என்று கேட்டார்கள். அதோடு, அவருக்கு மக்கள் முன்னிலையில் பாங்கு எவ்வாறு சொல்ல வேண்டும் என்று கற்றுக்கொடுத்தார்கள். பின்னர், அவரின் நெஞ்சிலும், முன்நெற்றியிலும் தடவினார்கள். ‘இனி நீர்தான் மக்காவாசிகள் முஅத்தின்’ என்று அறிவித்தார்கள்.

  தனது தவறை உணர்ந்துகொண்ட அபுமஸ்தூரா அன்றுமுதல் அவருடைய 40 வயது வரை மக்காவின் முஅத்தினாக (பாங்கு சொல்பவராக) இருந்தார்கள்.

  கிண்டல் செய்தவரிடமே அந்த பொறுப்பை கொடுத்தார்கள். இதுபோன்றதொரு அணுகுமுறையை குழந்தைகள் விஷயத்திலும் கடைப்பிடிக்கலாம்.

  குழந்தைகளை அனைத்து பெற்றோர்களும் நேசிப்பவர்கள்தாம். அதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் அவர்களை வளர்ப்பதில் பலர் அக்கறையுடன் செயல் படுவதில்லை.

  குழந்தைகள் விஷயத்தில் கூடுதல் அக்கறை காட்டிட வேண்டும். குழந்தைகள் நல்லொழுக்கம் உள்ளவர்களாக, நற்சிந்தனையுடையவர்களாக, இஸ்லாம் காட்டித்தந்த வழிமுறைகளின்படி வளர்க்க முற்படவேண்டும். அதுதான் சிறந்த சமுதாயத்தை கட்டி யெழுப்புவதற்கு முதற்படியாகும்.

  வி.களத்தூர் எம்.பாரூக்.
  Next Story
  ×