search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    நவபாஷாண பைரவர்
    X
    நவபாஷாண பைரவர்

    சனி தோஷத்தை நிவர்த்தி செய்யும் நவபாஷாண பைரவர்

    சுகந்தவனேஸ்வரர் திருக்கோவில் பைரவர் வழிபாட்டுத் தலமாகவும் திகழ்கிறது. இங்குள்ள பைரவர் தன்னுடைய எட்டு கரங்களிலும் ஆயுதங்கள் மற்றும் கபால மாலை ஏந்தி காட்சி தருகிறார்.
    சிவகங்கை மாவட்டம் பெரிச்சிகோவில் என்ற ஊரில் அமைந்துள்ளது, சுகந்தவனேஸ்வரர் திருக்கோவில். மூலவர் பெயர் சுகந்தவனேஸ்வரர், உற்சவரின் திருநாமம் சோமாஸ்கந்தர் என்பதாகும். அம்பாளின் திருநாமம் சமீபவல்லி. இந்த ஆலயத்தில் வன்னி மரம் தல விருட்சமாக இருக்கிறது.

    சிவகங்கைப் பகுதியை மாறவர்மன் சுந்தரபாண்டியன் ஆட்சி செய்து வந்தபோது, ஒரு போரில் பெரிய வெற்றி பெற்றார். அதற்கு காணிக்கையாக சிவபெருமானுக்கு ஒரு ஆலயம் அமைக்க முடிவு செய்தார். ஆனால் எந்த இடத்தில் கோவில் அமைப்பது என்பதில் அவருக்கு குழப்பம் இருந்தது. அன்று இரவு மன்னனின் கனவில் தோன்றிய ஈசன், பெரிச்சிக்கோவில் பகுதியைச் சுட்டிக்காட்டி அங்கு ஒரு சிவலிங்கம் இருப்பதாகவும், அங்கேயே கோவில் அமைக்கும்படியும் கூறினார். அதன்படி அமைந்ததுதான் சுகந்தவனேஸ்வரர் கோவில். வாசனை மலர்கள் நிறைந்த பகுதியில் இந்த இடம் அமைந்த காரணத்தால், இறைவனுக்கு இப்பெயர் வந்தது.

    இது பைரவர் வழிபாட்டுத் தலமாகவும் திகழ்கிறது. இங்குள்ள பைரவர் தன்னுடைய எட்டு கரங்களிலும் ஆயுதங்கள் மற்றும் கபால மாலை ஏந்தி காட்சி தருகிறார். அவருக்கு அருகில் மூன்று பேர் வணங்கிய நிலையில் உள்ளனர். அதோடு பைரவரின் நாய் வாகனத்தைப் பிடித்தபடி, பாலதேவர் அருள்கிறார். பவுர்ணமி தோறும் மாலை வேளையில் இந்த பைரவருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்படுகின்றன.

    காசி பைரவர் தனிச் சன்னிதியில் வீற்றிருக்கிறார். இந்த சிலை நவபாஷாணத்தால் ஆனது என்றும், இதனை போகர் சித்தர் செய்ததாகவும் சொல்கிறார்கள். மேலும் பழனியில் உள்ள நவபாஷாண முருகன் சிலையை செய்வதற்கு முன்பாகவே, இந்த பைரவர் சிலையை போகர் செய்ததாகவும் செவிவழிச் செய்தி ஒன்று உள்ளது.

    இந்த நவபாஷாண பைரவரின் மீது அதிர்வுகள் அதிகம் என்பதால், இவருக்கு அணிவிக்கப்படும் மலர் மாலைகள், படைக்கப்படும் வடைமாலை உள்ளிட்ட நைவேத்தியங்கள் எதுவும் பக்தர்களுக்கு வழங்கப்படுவதில்லை. சன்னிதியின் கூரை மீது போடப்படும் வடைகளை, பறவைகள் கூட சாப்பிடுவதில்லை. பைரவருக்கு அபிஷேகிக்கப்படும் தீர்த்தம் கூட, பக்தர்கள் தொட முடியாதபடி கோவிலுக்கு வெளியே விழுமாறு அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த பைரவருக்கு இரண்டு முகங்கள் உண்டு என்கிறார்கள். பின்புற முகத்தை மனிதர்களால் காண முடியாது. அந்த முகத்தால், வன்னி மரத்தின் அடியில் வீற்றிருக்கும் சனீஸ்வரருக்கு மட்டும் காட்சி தருவதாக ஐதீகம். இவரை ‘ஆண்டபிள்ளை நாயனார்’ என்றும் அழைக்கிறார்கள். இவரை வழிபாடு செய்தால் சனி தோஷ நிவர்த்தி, பித்ரு சாபம், ஸ்திரீ தோஷம், சகல பாபம், நீண்டகால நோய்கள் நீங்கும். அஷ்டமா சித்தி கிடைக்கும் என்கிறார்கள்.
    Next Story
    ×