search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சனி பகவான்
    X
    சனி பகவான்

    அஷ்டமச் சனி திருமண வாழ்க்கையில் ஏற்படுத்தும் பாதிப்புகள்

    உளவியல் ரீதியாக அஷ்டமச் சனியின் காலத்தில் திருமணமான ஒரு ஆணுக்கு குடும்பம், மனைவி, குழந்தைகளுக்கு செய்ய வேண்டிய கடமைகளை நிறைவேற்ற கூடிய வாய்ப்பு குறையலாம்.
    அஷ்டமச் சனியின் காலத்தில் திருமணம் செய்யலாமா? என்பது பலரது சந்தேகம். இந்த காலகட்டத்தில் திருமணம் செய்தவர்கள் நன்றாகத்தான் இருக்கிறார்கள் என்று நினைப்பவர்களும் உண்டு.

    ராசிக்கு எட்டாம் இடத்தில் நிற்கும் சனியின் ஏழாம் பார்வை இரண்டாமிடமான தனம்,வாக்கு, குடும்பஸ்தானத்திற்கு இருப்பதால் வாய் கொடுத்து மாட்டிக் கொள்பவரைப் போல தேவையற்ற வம்புக்கு சென்று தானே அதில் மாட்டிக் கொள்வர். அதாவது வம்பு, வழக்கு, தகராறில் ஈடுபடுதல், பிறர் விஷயங்களில் கலகம் செய்ய நினைத்தல் போன்ற செயல்களில் ஈடுபடுவதால், தனக்கு ஏற்பட வேண்டிய இன்பமான நிலையை தானே கெடுத்துக் கொள்ளக்கூடிய வாய்ப்பை உருவாக்கிக் கொள்வார்கள்.

    உளவியல் ரீதியாக அஷ்டமச் சனியின் காலத்தில் திருமணமான ஒரு ஆணுக்கு குடும்பம், மனைவி, குழந்தைகளுக்கு செய்ய வேண்டிய கடமைகளை நிறைவேற்ற கூடிய வாய்ப்பு குறையலாம். உழைத்தும் வருமானம் ஈட்ட முடியாமல் போகலாம்.

    பெண்களுக்கு கணவர், புகுந்த வீட்டாருடன் எப்படி அனுசரித்து வாழ்வது? கணவனின் பொருளாதாரத்தில் எப்படி குடும்பம் நடத்த வேண்டும், குழந்தைகளை எப்படி பராமரிக்க வேண்டும் போன்ற பல்வேறு இல்வாழ்க்கை உண்மைகள் புரியாது. இது தம்பதிகளுக்குள் பிரிவினையை ஏற்படுத்தும்.

    எட்டாமிடம் என்பது ஆணுக்கு ஆயுள் ஸ்தானம் பெண்ணிற்கு மாங்கல்ய ஸ்தானம் என்பதால் கோட்சார சனியின் பயணப்பாதையில் ராகு, கேது, செவ்வாய் போன்ற அசுப கிரகங்கள் நின்றால் விபரீத விளைவுகள் ஏற்பட்டு வாழ்க்கையை கேள்விக் குறியாக்கலாம். மேலும் இந்த காலத்தில் 6,8,12ம் இடத்தோடு சம்பந்தம் பெறும் தசா புத்தி நடந்தால் வம்பு, வழக்கு, விவாகரத்து வரைச் செல்லும். இதனால் இரண்டரை ஆண்டு காலம் திருமணத்தை ஒத்திப்போடுவது நல்லது.

    இந்த காலகட்டத்தில் கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடுகளை ஏற்படுத்துவதும் சனிதான். பலர் சந்தேக புத்தியால் வாழ்க்கையைத் தொலைப்பதும் இந்த கால கட்டத்தில் தான். சனி நேரடியாக சண்டையை உருவாக்காமல் உறவினர்கள் மூலம் குடும்பத்தில் ஏகப்பட்ட பிரச்சினைகளை உருவாக்குவார்.

    இது போன்ற பிரச்சினையைத் தவிர்க்க உப்பு இல்லாத உணவை சாப்பிடவும் அல்லது முந்தைய நாள் சமைத்த பழைய உணவை சூடாக்கி சாப்பிட வேண்டும். அத்துடன் சனிக்கிழமை காலை 6 மணி முதல் 7 மணி வரை, மதியம் 1 மணி முதல் 2 மணி வரை, இரவு 8- மணி முதல் 9 மணி வரையான சனி ஓரையில் சுவையான உணவுகளை சமைப்பதையும் சாப்பிடுவதையும் தவிர்க்க வேண்டும். மேலும் சகிப்புத் தன்மையை அதிகரித்துக் கொள்ளவும் முயற்சிக்க வேண்டும்.

    Next Story
    ×