search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பித்ருகளுக்கு தர்ப்பணம்
    X
    பித்ருகளுக்கு தர்ப்பணம்

    பித்ருகளுக்கு தர்ப்பணம் தருவதின் பலன்கள்

    நம் முன்னோர்களாகிய பித்ருக்களுக்கு ஒவ்வொரு வருடமும் புரட்டாசி அமாவாசை, தை அமாவாசை, ஆடி அமாவாசை என்று மூன்று நாட்கள் கண்டிப்பாக தர்ப்பணம் தரவேண்டும்.

    நம்முடைய அனைத்து பிரச்சனைகளும் தீர்ந்து சுகமாக வாழ சித்தர்களின் தலைவரும் தமிழ்மொழியின் தந்தையும்  நம் அனைவருக்கும் ஆதிமூல முதல் குருவும் ஆகிய அகத்திய மகரிஷி அவர்கள் நமக்கு முக்கியமான ஒரு உபதேசம் அளித்துள்ளார். கலியுகத்தில் வாழ்ந்து வரும் ஒவ்வொரு ஆணுக்கும் பெண்ணுக்கும் நோய் அல்லது வம்பு வழக்கு அல்லது தேவையில்லாத பிரச்சனை அல்லது நிம்மதி இல்லாத வாழ்க்கை  அல்லது கடன் அல்லது கந்துவட்டி முழுவதும் வாட்டிக் கொண்டே இருக்கும்.

    இரண்டு முக்கிய தெய்வீக காரியங்களை செய்யாமல் இருப்பதே இதற்கு காரணம் என்று அகத்தியர் உபதேசம் செய்துள்ளார்.

    முதல் காரணம்: நாம் மாதம் ஒருமுறை அமாவாசை திதி அல்லது வளர்பிறை பஞ்சமி திதி அன்று குலதெய்வம் கோயிலுக்கு சென்று வழி விடாமல் இருப்பது.

    இரண்டாவது காரணம்: மாதம் ஒரு நாள் அல்லது வருடத்திற்கு மூன்று நாட்கள் இறந்த முன்னோர்களாகிய பித்ருக்களுக்கு தர்ப்பணம் தராமல் இருப்பது.

    நம் முன்னோர்களாகிய நீத்தார் என்ற  பித்ருக்களுக்கு ஒவ்வொரு வருடமும் புரட்டாசி அமாவாசை, தை அமாவாசை, ஆடி அமாவாசை என்று மூன்று நாட்கள் கண்டிப்பாக தர்ப்பணம் தரவேண்டும். தொடர்ந்து 12 ஆண்டுகள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யாமல் விடுபட்ட பித்ரு கடன் ஒரே ஒரு புரட்டாசி அமாவாசை அன்று தர்ப்பணம் செய்வதால்  நீங்கிவிடும். தொடர்ந்து 100 ஆண்டுகள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யாமல் விடுபட்ட பிதிர்க்கடன் ஒரே ஒரு தை முதல் நாள் அன்று தர்ப்பணம் செய்வதால் நீங்கிவிடும்.

    மாசி மாதம் வரும் அமாவாசை சதய நட்சத்திரம் அன்று வந்தால் அன்று செய்யப்படும் பித்ரு தர்ப்பணம் பலகோடி மடங்கு புண்ணியத்தை அள்ளித்தரும். கலியுகத்தில் சதய நட்சத்திரமும் மாசி அமாவாசையும் சேர்ந்து வரும் நாளில் பித்ரு தர்ப்பணம் செய்வது 100 கோடி பேரில் ஒருவர் மட்டுமே செய்ய இயலும்.

    மாசி மாதம் வரும் அமாவாசை அவிட்டம் நட்சத்திரம் என்று வந்தால் அன்று செய்யப்படும் பித்ரு தர்ப்பணம் நம்முடைய முன்னோர்கள் ஆகிய பித்ருகளுக்கு 10,000 ஆண்டுகள் பித்ரு தர்ப்பணம் செய்ததற்கு சமமான புண்ணியத்தினை தந்துவிடும். பத்தாயிரம் ஆண்டுகள் என்பது பூமி ஆண்டுகள் அல்ல. 10 ஆயிரம் தேவ ஆண்டுகள் ஆகும். பூமியில் 365 ஆண்டுகள் வந்தால் அது பித்ருக்களுக்கு ஒரு பித்ரு வருடமாகும்.

    மாசி மாத அமாவாசை பூரட்டாதி நட்சத்திர நாளில் வந்தால் அவை மிகவும் அற்புதமான பித்ரு தர்ப்பணம் செய்வதற்கு உரிய நாள் ஆகும்.  இந்த நாளில் யாரொருவர் நீத்தார் என்ற முன்னோர்களுக்கு பித்ரு தர்ப்பணம் செய்கிறார்களோ அது அவர்களுடைய இந்த பிறவியில் இருந்து அடுத்த நூறு பிறவி வரை சகல வளங்களும் பெற்று மகத்தான வாழ்க்கை வாழ வைக்கும்.

    மாசி மாத அமாவாசையில் பூரட்டாதி நட்சத்திரம் சேர்ந்து வரும் நாளில் செய்யப்படும் பித்ரு தர்ப்பணம் முன்னோர்களுக்கு பரம  திருப்தியை தரும். இந்த பரம திருப்தியால் முன்னோர்களாகிய  பித்ருக்கள் ஆயிரம் யுகங்கள் சுகமாக தூங்குவார்கள். ஒரே ஒரு மாசி மாத அமாவாசை பூரட்டாதி நட்சத்திரம் சேர்ந்து வரும் நாளில் செய்யப்படும் பித்ரு தர்ப்பணத்தால் நமக்கு கிடைக்கும் பித்ருக்களின் ஆசி மறு நாளிலிருந்து இந்த பிறவி முழுவதும் கிடைத்துக் கொண்டே இருக்கும். அடுத்த நூறு பிறவிகள் வரை நமக்கு சகல விதமான செல்வ வளங்களையும், நல்ல குணங்களையும், சிறப்பான கல்வியும் திருப்தியான ஜென்மாந்திர வாழ்க்கையும் அள்ளி தரக்கூடிய சக்தி வாய்ந்தது.
    Next Story
    ×