search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணர்
    X
    திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணர்

    பக்தர்களின் வேண்டுதலை நிறைவேற்றும் விளக்கு பிரார்த்தனை

    சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ளது திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணர் திருக்கோவில். இந்த ஆலயத்தில் செய்யப்படும், விளக்கு நேர்த்திக்கடன் மிகவும் பிரசித்திப்பெற்றது.
    சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ளது, திருக்கோஷ்டியூர் திருத்தலம். இங்கு சவுமியநாராயணர் திருக்கோவில் அமைந்துள்ளது. இது 108 திவ்ய தேசங்களில் 95-வது திருத்தலம் ஆகும்.

    இத்தல இறைவனான சவுமிய நாராயணருடன், ஸ்ரீதேவி மற்றும் பூதேவி இருக்கிறார்கள். மேலும் மது, கைடபர், இந்திரன், புருரூப சக்கரவர்த்தி, கதம்ப மகரிஷி, பிரம்மா, சரஸ்வதி, சாவித்திரி, இந்திரன் ஆகியோரும் உள்ளனர். திருமாமகள் என்ற பெயரில் தாயாருக்கு தனிச் சன்னிதி இருக்கிறது. இத்தலத்தில் சந்தான கிருஷ்ணன் என்ற பெயரில் கிருஷ்ணன் வீற்றிருக்கிறார். இவருக்கு ‘பிரார்த்தனை கண்ணன்’ என்ற பெயரும் உண்டு. இவரை வழிபட்டால் புத்திர பாக்கியம் கிட்டும் என்பது நம்பிக்கையாகும்.

    இந்த ஆலயத்தில் செய்யப்படும், விளக்கு நேர்த்திக்கடன் மிகவும் பிரசித்திப்பெற்றது. இங்கு வந்து பிரார்த்தனை செய்பவர்கள், ஒரு அகல் விளக்கு வாங்கி, மூலவரின் முன்பாக வைத்து அதை வீட்டிற்கு எடுத்துச் செல்கிறார்கள். அந்த விளக்கில் காசும், துளசியும் வைத்து சிறு பெட்டியில் வைத்து மூடி, வீட்டின் பூஜை அறையில் வைக்கிறார்கள். இந்த விளக்கில் பெருமாளும், லட்சுமியும் எழுந்தருள்வதாக ஐதீகம். இவ்வாறு செய்வதால் பக்தர்களின் நியாயமான வேண்டுதல்கள் நிறைவேறும் என்பது நம்பிக்கை. வேண்டுதல் நிறைவேறியவர்கள், மாசி தெப்ப திருவிழாவின் போது, இந்த விளக்குடன், மற்றொரு நெய் விளக்கை தீர்த்தக்கரையில் ஏற்றிவைத்து வழிபடுகின்றனர். அந்த நேரத்தில் புதியதாக வேண்டுதல் செய்ய வரும் பக்தர்கள், இந்த விளக்கை எடுத்துச் செல்கின்றனர்.

    அமைவிடம்

    காரைக்குடியில் இருந்து 24 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, திருப்பத்தூர் என்ற ஊர். இங்கிருந்து சுமார் 6 கிலோமீட்டர் தூரம் சென்றால் திருக்கோஷ்டியூரை அடையலாம்.
    Next Story
    ×