search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    நந்திகேசுவரர்
    X
    நந்திகேசுவரர்

    திருமணத் தடை நீக்கும் திருமழப்பாடி நந்திகேசுவரர்

    நந்தி திருமணத்தை சென்று தரிசிக்கும் திருமணமாகாத இளைஞர்கள், இளம்பெண்களுக்கு, அடுத்த வருட நந்தி கல்யாணத்திற்கு முன்பாக திருமணம் நடைபெறும் என்பது ஐதீகமாகும்.
    கொள்ளிடத்தின் வடகரையில், திருமழப்பாடி என்ற கிராமத்தில் சுந்தராம்பிகை உடனாய வைத்தியநாத சுவாமி திருக்கோவில் இருக்கிறது. சிவபெருமான், இந்தத் தலத்தில் மார்க்கண்டேயருக்கு காட்சி தந்ததோடு, மழு என்னும் ஆயுதம் தாங்கி, நடனம் புரிந்த தலம் என்பதால் ‘மழுபாடி’ என்று பெயர் பெற்று, அதுவே தற்போது ‘திருமழப்பாடி’ என்று அழைக்கப்படுவதாகவும் புராணத் தகவல் ஒன்றும் இருக்கிறது.

    இந்தக் கோவிலின் நடராஜர் மண்டபம் அருகில் நந்திகேசுவரர், தனது மனைவி சுயம்பிரகாசையுடன் காட்சி தருகிறார். ஆண்டுதோறும் புனர்பூச நட்சத்திரத்தில் நந்தியம்பெருமானுக்கும், சுயம் பிரகாசைக்கும் வைத்தியநாதசாமி முன்னிலையில் திருக்கல்யாண உற்சவம் நடைபெறுவது சிறப்புக்குரிய ஒன்றாகும். நந்தி திருமணத்தை சென்று தரிசிக்கும் திருமணமாகாத இளைஞர்கள், இளம்பெண்களுக்கு, அடுத்த வருட நந்தி கல்யாணத்திற்கு முன்பாக திருமணம் நடைபெறும் என்பது ஐதீகமாகும்.

    முனிவர் ஒருவரது சாபத்தால் திருமகளான லட்சுமிதேவிக்கு வெண்குஷ்ட நோய் ஏற்பட்டது. இதையடுத்து லட்சுமி தேவி இத்தலம் வந்து தீர்த்தத்தில் நீராடி நோய் நீங்கப்பெற்றாள். சுந்தராம்பிகை அம்மன் சன்னிதிக்கு எதிரே, லட்சுமி தேவி நீராடிய குளம், ‘லட்சுமி தீர்த்தம்’ என்ற பெயரிலேயே வழங்கப்படுகிறது. இந்த நீரை உடலில் தெளித்துக் கொண்டால் சரும நோய் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

    திருமழப்பாடி வைத்தியநாதசாமி கோவிலானது, புள்ளம் பாடிக்கு தென்கிழக்கில் 20 கிலோமீட்டர் தூரத்திலும், திருவையாறுக்கு வடமேற்கில் 15 கிலோமீட்டர் தூரத்திலும், அரியலூருக்கு தெற்கில் 28 கிலோமீட்டர் தூரத்திலும் உள்ளது. இந்த ஊருக்கு திருச்சி, லால்குடி, அரியலூர், திருமானூர் மற்றும் தஞ்சையில் இருந்து பஸ் வசதி உள்ளது. திருச்சி- விழுப்புரம் ரெயில் வழித்தடத்தில் அரியலூர், புள்ளம்பாடி ரெயில் நிலையங்களில் இருந்தும் இங்கு வரும் வகையில் போக்குவரத்து வசதி உள்ளது.
    Next Story
    ×