search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    வெட்டுடையார் காளி
    X
    வெட்டுடையார் காளி

    குழந்தை வரம், குழந்தைகளுக்கு பேச்சு வரவும் வழிபட வேண்டிய கோவில்

    பக்தர்கள் தங்களுக்கு தீங்கு செய்தவர்களைத் தண்டிக்க அம்மனிடம் முறையிடுவதும், தீய சக்திகளால் பிரிய நேர்ந்தவர்கள் இக்கோவிலுக்கு வந்து சேர்ந்து கொள்வதும் இக்கோவிலின் தனிச்சிறப்பு.
    வெட்டுடையாரைக் கருப்பவேளார், காரிவேளார் என்ற பக்தர்கள் பூசித்து வந்தனர். ஒருசமயம் நள்ளிரவில் அய்யனார் சன்னதிக்கு அருகில் ஒரு ஈச்சமரத்தடியில் பேரொளி மின்னியதைக் கண்டனர். மறுநாள் காலையில் அங்கு அம்பிகையின் இயந்திரம் இருந்தது. அவ்விடத்தில் அம்பிகைக்கு சிலை வடித்து பிரதிட்டை செய்தனர். சுவாமியின் பெயரால் அவளுக்கு “வெட்டுடையார் காளி” என்றே பெயர் ஏற்பட்டது. காலப்போக்கில் இவள் பிரசித்தி பெறவே, இவளது பெயரிலேயே இத்தலம் அழைக்கப்பெற்றது.

    இப்பகுதியை ஆட்சி செய்த வீரப்பெண்மணி வேலுநாச்சியாருக்கு பிறந்த குழந்தை, பேசாமல் இருந்தது. அக்குழந்தை பேசவைக்கும்படி வேலுநாச்சியார் அம்பிகையை வேண்டி, குழந்தைக்கு பேச்சு வந்தது. இதனால், மகிழ்ந்த வேலுநாச்சியார் அம்பிகைக்கு வைரத்தாலி காணிக்கை செய்து கொடுத்தார்.

    குழந்தை வரம் கிடைக்கவும், பேசாத குழந்தைகளுக்கு பேச்சு நன்கு வரவும் இங்கு வேண்டிக் கொள்கின்றனர். இவளை வேண்டி பிரார்த்தனை நிறைவேறி, பக்தர்கள் உபயமாகக் கிடைத்த 20 கிலோ தங்கத்தில் இருந்தே கோவில் கொடிமரம், தங்க குதிரை வாகனம் மற்றும் தேர் திருப்பணி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    நோய் நீங்க, திருமணம் நடக்க, புத்திர தோஷங்கள் நீங்க, அம்பிகைக்கு அபிசேகம் செய்வித்தும், முடிக்காணிக்கை செலுத்தியும் வழிபடுகின்றனர். மாங்கல்ய தோசம் நீங்க, அம்பாள் பாதத்தில் தாலி வைத்து வாங்கிச் செல்கின்றனர். குழந்தைச் செல்வம் கிட்ட, கோவிலுக்கு வெளியே உள்ள விசிறி மரத்தில் தொட்டில் கட்டுகின்றனர். பேசாத குழந்தைகளுக்கு பேச்சு நன்கு வரவும் இங்கு வேண்டிக் கொள்கின்றனர்.

    நான்தான் பெரியவன் என்னும் கருவத்தால் பிரிந்தவர்கள் பலர். இவர்கள் மீண்டும் ஒன்று சேர வழிபடும் பிரதானத் தலம் இது. பிரச்னையால் பிரிந்துவிட்டு மீண்டும் சேர விரும்பும் தம்பதியர், உறவினர், சகோதரர்கள் இங்கு “கூடுதல் வழிபாடு” என்னும் பிரார்த்தனை செய்கின்றனர். பிரிந்து சென்றோர் இங்கு வந்து அம்பாளுக்கு பொங்கல் வைத்து, அதை அம்பிகை சன்னதி முன் வைத்து ஒன்றாகக் கூடுகின்றனர். பின், அம்பிகைக்கு முன், பிரச்னை ஏற்பட்டவர்கள் தங்களுக்குள் சமரசம் செய்து, தாங்கள் எப்போதும் ஒற்றுமையுடன் இருக்க வழிபடுகின்றனர். அம்பிகையே இவர்களுக்கு நடுநாயகமாக இருந்து சேர்த்து வைப்பதாக ஐதீகம்.

    பக்தர்கள் தங்களுக்கு தீங்கு செய்தவர்களைத் தண்டிக்க அம்மனிடம் முறையிடுவதும், தீய சக்திகளால் பிரிய நேர்ந்தவர்கள் இக்கோவிலுக்கு வந்து சேர்ந்து கொள்வதும் இக்கோவிலின் தனிச்சிறப்பு.

    அருள்மிகு வெட்டுடையார் காளி கோவில்,
    கொல்லங்குடி வழி,
    விட்டனேரி போஸ்ட்,
    அரியாக்குறிச்சி- 623 556.
    சிவகங்கை மாவட்டம்.
    Next Story
    ×