
அதோடு தன்னை வழிபடும் பக்தர்களை, எக்காரணம் கொண்டு சனி தோஷம் பீடிக்கக்கூடாது என்றும் உத்தரவிட்டார், பைரவர். சனியின் சஞ்சாரப்படி எவர் ஒருவர் துன்பத்தை அனுபவிக்க நேர்ந்தாலும், அவர் பைரவரை வழிபட்டு சரணடைந்து விட்டால், அவர்களுக்கு சனீஸ்வரன் நன்மைகளையே செய்ய வேண்டும் என்பது பைரவ மூர்த்தியால், சனி பகவானுக்கு இடப்பட்டிருக்கும் கட்டளை என்று சொல்லப்படுகிறது.
சனியின் பார்வையால் பாதிக்கப்படுவோர், சனியின் தோஷத்தால் அவதிப்படுவோர் என அனைவரும், பைரவ மூர்த்தியை வழிபட்டு வந்தால் அனைவருக்கும் நன்மைகள் கிடைக்கும். ஏழரைச்சனி, அஷ்டமச் சனி, அர்த்தாஷ்டமச் சனி, கண்டகச்சனி என எல்லாவித சனி தோஷங்களுக்கும், பைரவரின் சன்னிதிக்குச் சென்று வழிபாடு செய்து வந்தால் அதில் இருந்து விடுபட வாய்ப்பு உருவாகும்.
பைரவருக்கு வெள்ளை, சிவப்பு மற்றும் மஞ்சள் துணியில் 27 மிளகுகளை கட்டி வைத்து, அதனை முன்தினம் இரவு நல்லெண்ணெயில் ஊறவைக்க வேண்டும். மறுநாள் அஷ்டமி அன்று, அதனை பைரவருக்கு சமர்ப்பித்து ராகுகாலங்களில் வழிபாடு செய்து வருவது சிறப்பான பலனைத் தரும். ராகு காலங்கள், வளர்பிறை அஷ்டமி மற்றும் தேய்பிறை அஷ்டமி மற்றும் செவ்வாய், வெள்ளி, ஞாயிறு மற்றும் அமாவாசை, பவுர்ணமி போன்ற நாட்களில் வழிபாடு செய்து வந்தால், வேலைவாய்ப்பு, கடன் தொல்லை, கல்யாண வரம் மற்றும் பணச் சேர்க்கை, தொழில் தொடங்குவதில் நன்மைகள் கிடைக்கப்பெறும்.