search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சக்கரத்தாழ்வார்
    X
    சக்கரத்தாழ்வார்

    சங்கடம் தீர்ப்பார் சக்கரத்தாழ்வார்

    ஸ்ரீசக்கரத்தாழ்வாரை வழிபட பக்தர்கள் ஓரடி எடுத்து வைத்தால், அவர் உடனே இரண்டடி முன்வைத்து பிரச்னைகளையும், துன்பங்களையும் தீர்த்து சந்தோஷத்தில் ஆழ்த்துவார் என்பது விதியாகும்.
    முன்புறத்தில் ஸ்ரீ சக்கரத்தாழ்வாரையும், அதன் பின்புறத்தில் ஸ்ரீ நரசிம்மரையும் வணங்கி சுற்றி பிரதட்சணம் செய்தால் நான்கு வேதங்களையும், பஞ்ச பூதங்களையும், அஷ்ட லட்சுமிகளையும், எட்டு திக்கு பாலர்களையும் வணங்கிய பலன் கிடைக்கும். 16 வகையான பேரருளும் கிடைக்கும் என்பது முன்னோர்களின் வாக்கு...!

    சக்கரத்தாழ்வார் பல பழமையான திருக்கோயில்களில் தனிச்சந்நதி கொண்டு காட்சியளிப்பதைக் காணலாம். (குறிப்பாக ஸ்ரீரங்கம், காஞ்சி வரதராஜர்கோயில், திருமாலிருஞ்சோலை (கள்ளழகர்) கோயில், திருமோகூர், ஸ்ரீவில்லிப்புத்தூர்) தற்போது இவரின் மகிமையைப் புரிந்துக்கொண்டு பல திருத்தலங்களில் இவருக்குத் தனிச்சந்நதி அமைக்கப்பட்டு வழிபாடுகள் நடந்து வருகின்றன.சக்கரத்தாழ்வாரின் பின்புறம் உள்ள யோக நரசிம்மரையும் பல இடங்களில் தரிசிக்கலாம். இவரை சுதர்சன நரசிம்மர் என்று போற்றுவர். ஜ்வாலா கேசமும், திரிநேத்ரமும், 16 கரங்களும் பதினாறு வித ஆயுதங்களும் உடைய இவரை வழிபடுவதால் முப்பிறவியிலும், இந்த பிறவியிலும் உண்டான பாவங்கள், மற்றவர்களால் ஏற்படும் தீங்குகள், தீவினைகள், தோஷங்களால்
    கெடுதிகள் யாவும் நீங்கும்.

    ஸ்ரீசுதர்சன வழிபாடு பயங்கரமான கனவு, சித்தபிரமை, சதாமனோ வியாகூலம், பேய்பிசாசு, பில்லி சூன்யம், ஏவல் முதலிய துன்பங்களிலிருந்து காக்க வல்லது. சுதர்சனர் பிரத்யட்ச தெய்வம். தீவிரமாக உபாசிப்பவர்களுக்கு விரும்பியதை அளித்து காப்பாற்றுவார். சுதர்சனரை வழிபடச் சித்திரை நட்சத்திர தினங்கள் சிறப்பானவை. சித்திரை அவருக்குரிய நட்சத்திரம். சுவாமி தேசிகனின் சுதர்சனாஷ்டகமும், ஹோட சாயுத ஸ்தோத்திரமும் சொல்லி வந்தால் எளிதில் ஸ்ரீசுதர்சனரின் அருளைப் பெறலாம். சக்கரத்தானை திருவாழியாழ்வான்” என்று போற்றுகின்றனர் ஆழ்வார்கள்.

    சக்கரத்தாழ்வாரைப் பற்றி பல சுலோகங்கள் உள்ளன. ஸ்ரீரங்கம் கூரநாராயண ஜீயர் சுதர்சன சதகத்தை அருளியுள்ளார். சுவாமி தேசிகனின் சுதர்சனாஷ்டகம் மிகவும் பிரசித்திப் பெற்ற ஸ்லோகமாகப் பிரபலமாகியுள்ளது. ஸ்ரீ சுதர்ஸனாழ்வார், ஸ்ரீ கருடாழ்வார், ஸ்ரீ அனந்தாழ்வார் என ‘ஆழ்வார்’ என்ற அடைமொழி இவர்கள் மூவர்களுக்கு மட்டுமே பொருந்தும். ஸ்ரீ பகவானால் ஆட்கொண்டவர்கள் என்பதால் ஏற்பட்ட சிறப்பேயாகும்.

    ஸ்ரீ சக்கரத்தாழ்வாரை புதனும்,சனியும் சேவிப்பது விசேஷம். முடிந்தால் தினமும், இயன்ற நிவேதனம் வைத்து பூஜிப்பது நல்லது. வியாழக்கிழமை ஸ்ரீ சக்கரத்தாழ்வாருக்கு சிவப்பு மலர்களால் மாலை சூட்டி வழிபட்டால், நினைத்த காரியங்களில் வெற்றி கிட்டும். ஸ்ரீசக்கரத்தாழ்வாரை வழிபட பக்தர்கள் ஓரடி எடுத்து வைத்தால், அவர் உடனே இரண்டடி முன்வைத்து பிரச்னைகளையும், துன்பங்களையும் தீர்த்து சந்தோஷத்தில் ஆழ்த்துவார் என்பது விதியாகும்.ஸ்ரீ சக்கரத்தாழ்வார் சந்நதியில் நெய் விளக்கேற்றி,‘‘ஓம் நமோ பகவதே மகா சுதர்சனாய நம’’ என்று கூறி வழிபடுதல் கூடுதல் பலனைத் தரும்.
    Next Story
    ×