search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சந்தான கிருஷ்ணன்
    X
    சந்தான கிருஷ்ணன்

    திருமண தடை நீக்கும், குழந்தை பாக்கியம் அருளும் தலம்

    ‘கோஷ்டியூர்’ எனும் ‘திருக்கோஷ்டியூர்’ தல ‘பிரார்த்தனை கண்ணன்’ எனும் சந்தான கிருஷ்ணரை வழிபட்டால், வெகுவிரைவில் குழந்தைப் பாக்கியம் கிடைக்கும்.
    இரண்யகசிபு என்ற அரக்கனை அழிப்பதற்காக சிவபெருமான், மகாவிஷ்ணு, பிரம்மதேவர் ஆகிய மும்மூர்த்திகளும் கூடிப் பேசி, புதிய அவதாரம் ஒன்றை உருவாக்கினார்கள். அதுவே மகாவிஷ்ணுவின் ‘நரசிம்ம அவதாரம்.’

    அந்த அவதாரத்தை உருவாக்கும் நோக்கில் மும்மூர்த்திகளும் அமர்ந்து பேசிய திருத்தலமே ‘கோஷ்டியூர்’ எனும் ‘திருக்கோஷ்டியூர்’ ஆகும். நின்ற, இருந்த, கிடந்த, நடந்த ஆகிய நான்கு கோலங்களையும் இங்கு காட்டியருளினார் மகாவிஷ்ணு. இந்த தலத்தின் மூலவர் ‘உரக மெல்லணையான்’ ஆவார். ‘உரகம்’ என்றால் ‘பாம்பு.’ ‘மெல்லணை’ என்றால் ‘மிருதுவான உடல் படுக்கை’ என்பதாகும். ஆதிசேஷன் மீது பெருமாள் பள்ளிகொண்டதால், அவருக்கு இந்தத் திருநாமம் வழங்கப்படுகிறது. இவர் புஜங்க சயனத்தில் கிழக்கு பார்த்த வண்ணம் ஸ்ரீதேவி - பூதேவியுடன் அருள்கிறார். மது, கைடபர், இந்திரன், காசி மகாராஜா, புருரூப சக்கரவர்த்தி, கதம்ப முனிவர், பிரம்மா, சரஸ்வதி, சாவித்திரி, சந்தான கிருஷ்ணன் ஆகியோரும் காட்சி தருகிறார்கள்.

    சந்தான கிருஷ்ணர் தொட்டிலில் வீற்றிருக்கிறார். இத்தல ‘பிரார்த்தனை கண்ணன்’ எனும் சந்தான கிருஷ்ணரை வழிபட்டால், வெகுவிரைவில் குழந்தைப் பாக்கியம் கிடைக்கும். நாக தோஷத்தினால் திருமணம், குழந்தை பாக்கியம், வீடு கட்டும் மற்றும் வீடு வாங்கும் யோகம் தடைபட்டவர்களுக்கும் இத்தல தரிசனம் மிகச்சிறப்பானதாக கூறப்பட்டுள்ளது.

    தற்போதும் ஆலய பிரகாரத்தில் அமைந்துள்ள இந்தக் கிணறு ‘மகாமக கிணறு’ என்று அழைக்கப்படுகிறது. இன்றும் மாசி மக நட்சத்திர நாளில் இந்த கிணற்றில் கங்கை பொங்கி வருவதாக ஐதீகம். எனவே மாசிமக நாளில் இத்தல மகாமக கிணற்றினை தொழுது, ஆலயத் தெப்பக்குளத்தை வலம்வந்து பெருமாளைப் பணிந்தால் பாவங்கள், தோஷங்கள் அகன்று விடும் என்பதும் நம்பிக்கையாக உள்ளது.

    மதுரையில் இருந்து 61 கிலோமீட்டர் தூரத்திலும், திருச்சியில் இருந்து புதுக்கோட்டை சென்று அங்கிருந்து 49 கிலோமீட்டர் தூரத்திலும் திருக்கோஷ்டியூர் அமைந்துள்ளது.
    Next Story
    ×