search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    வழிபாடு
    X
    வழிபாடு

    பரிகாரங்கள் சரிதானா?

    பரிகாரங்கள் செய்வதால் பிரச்சினைகள் எப்படி தீரும் என்பதை, சிறிது கூட சிந்தித்து பார்ப்பது இல்லை. மனிதர்களுக்கு நேரும் பிரச்சினைகளை பரிகாரம் என்ற ரப்பரால் அழிக்க முடியாது.
    இப்போதெல்லாம் நிறைய வாசகர்கள் பொது விழாக்களின் போது என்னை சந்திக்கிறார்கள். அப்படி அவர்கள் என்னை சந்திக்கும் பொழுது கதைகளை தவிர்த்து நிறைய கேள்விகளை கேட்கிறார்கள். அந்த கேள்விகளில் ஒரு கேள்வி நிச்சயம் இதுவாகத்தான் இருக்கிறது. அது என்ன கேள்வி என்றால் ஜாதகம், கைரேகை, ஜோதிடம், பரிகாரம் போன்றவற்றை நீங்கள் நம்புகிறீர்களா?

    நான் அவர்களுக்கு சொல்லும் பதில் இதுதான். ஜாதகம், கைரேகை இதெல்லாம் ஒருவகையான கோள்கள் சம்பந்தப்பட்ட மேத்தமேடிக்ஸ். பரிகாரங்கள் எல்லாம் இப்போது வந்தது.

    என்னை பொறுத்த வரைக்கும் ஜாதகம், கைரேகை இந்த இரண்டும் ஒரு காலத்தில், அதாவது சித்தர்கள் இருந்த காலத்தில் மிகத்திறமையான ஜோதிடர்கள் வாழ்ந்த காலத்தில் உண்மையாக இருந்திருக்க வாய்ப்பு அதிகம். ஏனென்றால் அவர்கள் அவைகளைப் பற்றி நன்கு அறிந்து வைத்து இருந்தனர். இன்றைக்கு இருக்கும் ஜோதிடர்கள் துல்லியமாக பலன் சொல்ல வேண்டும் என்றால், அவர்கள் அந்த ஜோதிட கணிதத்தை முழுமையான அளவில் கற்று இருக்க வேண்டும். இப்போது அப்படிப்பட்ட ஜோதிடர்களின் எண்ணிக்கை மிகக்குறைவாக உள்ளது.

    ஜோதிடம், கைரேகை, வாஸ்து, எண் பலன்கள் என்கிற இந்த வார்த்தைகள் இப்போது வியாபார பொருளாக மாறி நிறைய வருடங்கள் ஆகிவிட்டது. மாதாந்திர டூர் போட்டுக்கொண்டு, லாட்ஜில் ரூம் எடுத்து தங்கி, ஜோதிடம் சொல்பவர்கள் எண்ணிக்கை இப்போது அதிகமாகி விட்டது. மக்களும் ‘எதை தின்றால் பித்தம் தீரும்’ என்றெண்ணி தங்களுக்கு இருக்கும் பிரச்சினைகளில் இருந்து எப்படியாவது விடுபட வேண்டும் என்று அப்படிப்பட்ட நபர்களை தேடி போகிறார்கள். அவர்களும் சில பரிகாரங்களை செய்தால் எல்லாம் சரியாகிவிடும் என்று சொல்லி வாய்ஜாலம் பேசி பணத்தை கறந்து விடுகிறார்கள்.

    பரிகாரங்கள் செய்வதால் பிரச்சினைகள் எப்படி தீரும் என்பதை, அவர்கள் சிறிது கூட சிந்தித்து பார்ப்பது இல்லை. மனிதன் தவறு செய்தால் அதற்கான தண்டனை உண்டு. கடவுள் தண்டித்து விடுகிறார். (கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் அதை இயற்கை என்று அழைத்து கொண்டாலும் தப்பில்லை) மனிதர்களுக்கு நேரும் பிரச்சினைகளை பரிகாரம் என்ற ரப்பரால் அழிக்க முடியாது.

    ஒரு குறிப்பிட்ட ராசிக்காரர்களுக்கு, குறிப்பிட்ட நவரத்தின கற்களை போட்டால் பிரச்சினைகள் காணாமல் போய்விடும், வீட்டில் செல்வம் கொழிக்கும் என்று ‘ஜெம்மாலிஸ்ட்’ என்று தன்னை சொல்லி கொள்பவர்கள் அடித்து கூறுகிறார்கள். எல்லா நவரத்தினங்களும் அழகானவை. அதற்கென்று தனிப்பட்ட முறையில் எந்தவிதமான சக்தியும் கிடையாது. உடம்பில் அணிந்து கொள்ளலாம். பார்ப்பதற்கு அழகாகவும், அந்தஸ்தாகவும் இருக்கும் அவ்வளவுதான். அது ஒரு அணிகலன் எனக்கு தெரிந்தவரை எத்தனையோ பேர், இந்த ஜெம்மாலஜி ஜோதிட விஷயத்தில் ஏமாந்து போயிருக்கிறார்கள். ஆனால் அதை வெளியே யாரும் சொல்லுவது இல்லை.

    இதய நோயாளிகள் எனர்ஜிக் ஸ்டிக்கை கையில் வைத்துக் கொண்டால், இதயத்தில் 90 சதவீதம் அடைப்பு இருந்தாலும் பைபாஸ் சர்ஜரி செய்ய வேண்டியதே இல்லையாம். இதெல்லாம் நம்புகிற மாதிரியாகவா இருக்கிறது?. மக்களுக்கு இந்த விஷயம் எல்லாம் தெரியாதா? என்று நீங்கள் கேட்கலாம்.

    தெரியும்! இருந்தாலும் அவர்களுக்கு இருக்கும் மனநிலையில் எது நல்லது? எது கெட்டது? என்று பகுத்து பார்க்கும் அளவுக்கு பொறுமை இல்லாமல் போவதால்தான் ஏமாந்து போய் விடுகிறார்கள். லட்சக்கணக்கில் பணத்தை செலவு செய்கிறார்கள். நல்ல நாள் பார்த்து, நல்ல நேரம் பார்த்து, வைதீக முறைப்படி சகலவிதமான மந்திரங்கள் ஓதப்பட்டு செய்யப்படும் திருமணங்கள் கூட, ஏன் விவாகரத்தில் போய் முடிய வேண்டும்? அதே நேரத்தில் ஒரு ஆணும், பெண்ணும் பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி ஊரைவிட்டு ஓடிப்போய் சாஸ்திரம், வைதீகம் இவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல் திருமணம் செய்து கொள்பவர்கள் ஒற்றுமையோடும், சந்தோஷத்தோடும் நீண்ட ஆயுளுடன் வாழ்கிறார்கள். இந்த முரண்பாட்டுக்கு என்ன காரணம்? அவர்கள் நடந்து கொள்ளும் விதம்தான்.

    நம்முடைய எல்லா பிரச்சினைகளுக்கும் காரணம் நாம்தான். ‘தீதும் நன்றும் பிறர் தர வாரா’ என்று சொல்வார்கள். அதற்கேற்ப நம்முடைய நல்ல செயல்களுக்கும், கெட்ட செயல்களுக்கும் நாம் நடந்துகொள்ளும் முறைதான் காரணம். நம்மை மீறிய ஒரு சக்தி இருப்பதை நாம் ஒப்புக்கொண்டே தீரவேண்டும். அந்த சக்தியை நீங்கள் கடவுள் என்றும், கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் இயற்கை என்றும் அழைத்து கொண்டாலும் தப்பில்லை. அந்த சக்திக்கு நாம் அனைவரும் கட்டுப்பட்டு நடக்க வேண்டும். சிலருக்கு மனிதனை படைத்தது கடவுள் தானா? என்பதில் சந்தேகம்.

    ஒரு வீட்டை வடிவமைத்து கட்டியது ஒரு பொறியாளர் என்று சொன்னால், ஒப்புக் கொள்பவர்கள். மனிதனை படைத்தது இறைவன்தான் என்பதை ஒப்புக்கொள்ள மறுத்து விடுகிறார்கள். கடவுள் மனிதனை பார்த்துப் பார்த்து படைத்திருக்கிறான்.

    அதற்கு ஒரு உதாரணம். மூன்று வேளையும் எதை உள்ளே போட்டாலும் எரிக்கும் ஒரு சாண் வயிறு, பார்க்க இரண்டு கண்கள், கேட்க இரு காதுகள், உணவு உண்ண வாய் பற்கள், நாக்கு பேச குரல் நாண்கள். எல்லா உறுப்புகளையும் அடக்கிவாசிக்க மூளை என்கிற ஒரு சுப்ரீம் கோர்ட்டு.

    இதைக் காட்டிலும் பெரிய ஆச்சரியம் என்னவென்றால் உரலில் அரிசி போட்டு மாவாக மாற தண்ணீர் விட்டு ஆட்டுவார்கள்.ஆனால் நாம் சாப்பிடும்போது நமது உணவை வாயில் அரைப்பதற்கு உமிழ்நீர் எங்கிருந்து வருகிறது? அந்த உமிழ்நீரை சுரக்க வைப்பது யார்? இறைவன் படைப்பில் மனிதன் மட்டும் அதிசயம் கிடையாது. எல்லாமே அதிசயமானதுதான், பாதுகாப்பானதுதான். புளியம்பழம் பிசுபிசுப்பாக உள்ள ஒரு பொருள். அது மரத்திலிருந்து கீழே விழுந்தால் அந்த பிசுபிசுப்பு மண்ணில் ஒட்டிக்கொண்டு, யாருக்குமே உபயோகப்படாமல் போய் விடுமே என்பதற்காக, அதற்கு ஒரு உறையை கடவுள் போட்டுள்ளார். அதேபோல் தென்னை மரம் உயரமாக வளரும் ஒரு மரம். அவ்வளவு உயரத்தில் இருந்து தேங்காய் விழுந்தால் அது உடைந்து விடும். தேங்காய் அவ்வளவு உயரத்திலிருந்து விழுந்தாலும், உடையாமல் இருப்பதற்காக தேங்காயை சுற்றிலும் ‘ஷாக் அப்சர்வர்’ போல் கெட்டியான நார் உள்ளது. இப்படி நாள் முழுவதும் இறைவன் படைத்த பொருள்களையும், அந்த பொருள்களுக்கு அவன் செய்துவைத்துள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றியும் சொல்லிக் கொண்டே போகலாம்.

    வெறுமனே கோவிலுக்குப் போய், நெற்றியில் விபூதி குங்குமம் வைத்துக்கொண்டு கடவுளை கும்பிடுவதால் மட்டுமே நமக்கு நிம்மதி கிடைத்து விடாது. நம்முடைய எண்ணங்களும், செயல்களும் தூய்மையாக இருக்க வேண்டும்.

    நாம் பேசும் வார்த்தைகள் ஒருவரை மகிழ்ச்சிப்படுத்த வேண்டுமே தவிர புண்படுத்தக் கூடாது. பெற்றவர்களையும், பெரியோர்களையும் மதிக்க வேண்டும். செய்யும் தொழிலை தெய்வமாக நினைக்க வேண்டும். நம் நிலை உயரும்போது பணிவு கொள்ள வேண்டும். எல்லோரிடமும் திறமை இருக்கிறது என்று எண்ண வேண்டும். பிறரை பார்த்து பொறாமைப் படக்கூடாது. இதுபோன்ற எண்ணங்களை வளர்த்துக் கொண்டால் நாம் மகிழ்ச்சியாகவும், நிம்மதியாகவும் இருக்கலாம்.

    ராஜேஷ்குமார்
    Next Story
    ×