search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    அகிலாண்டேஸ்வரி, நவக்கிரக பீடத்தில் தட்சிணாமூர்த்தி, மத்தியஸ்வரர்
    X
    அகிலாண்டேஸ்வரி, நவக்கிரக பீடத்தில் தட்சிணாமூர்த்தி, மத்தியஸ்வரர்

    கருத்துவேறுபாடு நீக்கும் மத்தியஸ்வரர்

    மத்தியஸ்வரர் ஆலயத்தில் உள்ள வள்ளி- தெய்வானை சமேதரர் முருகப்பெருமானை வணங்கினால், கணவன்- மனைவி இடையே உள்ள கருத்துவேறுபாடு மறைந்து, வாழ்க்கை இன்பமயமாக அமையும்.
    தென்காசி வாசுதேவநல்லூர் அருகே உள்ளது தாருகாபுரம். இங்கு அமைந்துள்ள மத்தியஸ்வரர் ஆலயம், திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பஞ்சபூத தலங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

    ஆலயத்தில் பலி பீடம், கொடி மரம், நந்தி ஆகியவை பிரமாண்டமாக காட்சி தருகின்றன. இங்குள்ள விஷ்ணு துர்க்கைக்கு வெள்ளிக்கிழமை ராகு காலத்தில் காலை 10.30 மணி முதல் பகல்12 மணி வரை சிறப்பு அபிஷேகம் நடைபெறும். இதில் கலந்து கொண்டால் எதிரிகள் தொல்லை நீங்கும், திருமணத் தடை விலகும்.

    இங்குள்ள ஜுரதேவருக்கு மிளகு அபிஷேகம் செய்து வழிபட்டால் காய்ச்சல் குணமாகும். இத்தலத்தில் வள்ளி- தெய்வானை சமேதராக முருகப்பெருமான் அருள்கிறார். வள்ளியும் தெய்வானையும் ஒருவரையொருவர் பார்த்தபடி முருகப்பெருமானை வணங்குவது போல் வீற்றிருக்கின்றனர். இந்த அமைப்பு வேறு எங்கும் இல்லாத அம்சம் என்று கூறுகிறார்கள். இவர்களை வணங்கினால், கணவன்- மனைவி இடையே உள்ள கருத்துவேறுபாடு மறைந்து, வாழ்க்கை இன்பமயமாக அமையும்.

    இக்கோவிலில் உள்ள பைரவர் சிறப்பு அம்சம் மிக்கவர். இவர் தலையில் சூரிய சின்னம் உள்ளது. இவரை ‘சத்ரு சம்ஹார பைரவர்’ என்று அழைக்கிறார்கள். தேய்பிறை அஷ்டமியில் இவரை வணங்கினால் தீராத பிரச்சினைகளும் தீர்ந்து விடும். இந்த பைரவரை தரிசிக்க நாளுக்குநாள் கூட்டம் அதிகரித்து வந்ததன் காரணமாக, ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் தரிசிக்கும் வகையில், ஆள் உயர கண்ணாடி ஒன்று அமைக்கப்பட்டிருக்கிறது. அதன் வழியாகவும் பைரவரை தரிசிக்க முடியும்.

    இந்த ஆலயம் பெருஞ் சிறப்புகளை கொண்டது. இங்குள்ள தட்சிணாமூர்த்தி, சிவனின் அம்சம். இவர் தனது காலடியில் 9 நவக்கிரகங்களையும் அடக்கி அதன் மேல் அமர்ந்து அருள்பாலிக்கிறார். எனவே இங்கு நவக்கிரகங்களுக்கு என்று தனி சன்னிதி இல்லை. தட்சிணாமூர்த்தியை வணங்கினாலே அனைத்து கிரகங்களையும் வணங்கியதற்கு சமமாகும்.

    தென்காசி அருகே உள்ள வாசுதேவ நல்லூரில் இருந்து தலைவன் கோட்டை செல்லும் சாலையில் 2 கிலோ மீட்டர் தொலைவில் தாருகாபுரம் இருக்கிறது. தென்காசியில் இருந்து ஏராளமான பஸ் வசதிகள் உள்ளன.
    Next Story
    ×